யாசகம் வழங்கினால் நடவடிக்கை – பொலிஸார் எச்சரிக்கை

இலங்கையில் யாசகம் பெறுவது மற்றும் வழங்குவது தண்டனை வழங்கக் கூடிய குற்றமாகக் கருதப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், எந்த விதமான தண்டனை வழங்கப்படும் என்று அவர் தெரிவிக்கவில்லை.

கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் யாசகம் பெறுவோரில், 95 வீதமானோர் உண்மையான யாசகர்கள் கிடையாது என அவர் கூறியுள்ளார்.

வர்த்தக நோக்கத்துடன், யாசகம் பெறுவோர் தற்போது இலங்கையில் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதான ஒருவரின் வழிநடத்தலின் கீழ், பெரும்பாலானோர் யாசகம் பெறுவதாகவும், யாசகம் பெறுவோருக்கு பிரதான நபர் நாளாந்தம் சம்பளத்தை வழங்குவதாகவும் விசாரணைகளின் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், யாசகம் பெறும் நடவடிக்கைகளை நிறுத்துவற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்  உண்மையாக யாசகம் பெறுவோர் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பது என்பது தொடர்பில் தாம், சமூக சேவை திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி தீர்மானம் எட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கொழும்பு மற்றும் அநுராதபுரம் ஆகிய நகரங்களில் யாசகர்களுக்கு கோவிட்-19 தொற்று கடந்த காலங்களில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.