Tamil News
Home செய்திகள் யசூசி அகாஷி – சம்பந்தன் சந்திப்பு

யசூசி அகாஷி – சம்பந்தன் சந்திப்பு

ஜப்பானிய இராஜதந்திரி யசூசி அகாஷி நேற்று (20.08)  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துப் பேசினார்

இது குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்துள்ள போதும், அதன் காரணமாக அமைந்த தமிழ் மக்களின் கோரிக்கைகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்பதை சம்பந்தன் வலியுறுத்தினார்.

யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வருவதில் சர்வதேச சமூகம் பாரிய பங்காற்றியதனை சுட்டிக் காட்டிய சம்பந்தன், இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வினை எட்டுவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்த போதிலும் அவற்றில் எதுவும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

சர்வதேச சமூகம் இனிமேலும் வெறும் பார்வையாளராக இருக்க முடியாது என்பதனை வலியுறுத்திய சம்பந்தன், சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கத்திற்கு நினைவூட்டி அவற்றினை நிறைவேற்றச் செய்வது சர்வதேச சமூகத்தின் கடமையாகும் எனவும் வலியுறுத்தினார்.

இந்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றத் தவறுகின்ற பட்சத்தில் அது தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல மாறாக முழு நாட்டிற்கும் கேடானதாக அமையும் என்பதையும் வலியுறுத்தினார்.

இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகிரா சுகியாம மற்றும் தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Exit mobile version