Tamil News
Home செய்திகள் மொத்த விற்பனை சந்தையில் இராணுவத்தை ஈடுபடுத்தவும்-சுகாதாரப்பிரிவு பரிந்துரை

மொத்த விற்பனை சந்தையில் இராணுவத்தை ஈடுபடுத்தவும்-சுகாதாரப்பிரிவு பரிந்துரை

வவுனியா மொத்த வியாபார சந்தையில் இராணுவம் அல்லது விசேட அதிரடிப்படையினரை கடமையில் ஈடுபடுத்துமாறு சுகாதார பிரிவினரால் வவுனியா மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

 இது தொடர்பாக சுகாதாரபிரிவினர் தெரிவித்தபோது,

நாட்டில் சந்தைகளின் மூலமாகவே தொற்று அதிகமாக பரவி வருகின்றது. வவுனியா மொத்தவியாபார சந்தை சிறிய இடமாக இருப்பதுடன், அதிகமான சனநடமாட்டம் உள்ள பகுதியாக காணப்படுகின்றது. குறித்த பகுதியில் காவல்துறை உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டாலும் காவல்துரையினரின் அறிவுரைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே குறித்த பகுதிக்கு விசேட அதிரடிப்படையினர் அல்லது இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

அத்துடன் இலங்கை வங்கியின் வவுனியா நகரக்கிளையில் அதிகமான மக்கள் ஒரே நேரத்தில் ஒன்று கூடுகின்றனர். கடைவீதியில் வங்கி அமைந்திருப்பதனால் வியாபாரிகள் முதல் பொதுமக்கள் என பலர் அந்த வங்கிக்கு அதிகளவில் செல்கின்றனர்.

எனவே இலங்கை வங்கிக்கு முன்பாக காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரை நிரந்தரமாக நியமித்து சுகாதார நடைமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Exit mobile version