மே தினம், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுக்க அரசு திட்டம் – ஜே.வி.பி.

மக்கள் விடுதலை முன்னணியினராகிய நாங்கள் எந்தத் தடை வந்தாலும் கொழும்பிலும் ஏனைய மாவட்டங்களிலும் எமது மே தினத்தை அனுஷ்டிப்போம் என உறுதி பூண்டுள்ளோம் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகர் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இம்முறை மே தினத்தை கொண்டாடு வதற்கான ஏற்பாடுகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். எனினும், இந்த அரசானது எமது மே தின நிகழ்வுகளைத் தடை செய்வதற்குப் பல்வேறு விதத்திலும் முயன்று வருகின்றது. மக்கள் விடுதலை முன்னணியினராகிய நாங்கள் எந்தத் தடை வந்தாலும் கொழும்பிலும் ஏனைய மாவட்டங்களிலும் எமது மே தினத்தை நினைவு கூருவோம் என உறுதிபூண்டுள்ளோம்.

மே மாதம் என்பது ஒரு விசேட மாதமாகும். மே தின நிகழ்வு மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறும் மாதமாகும். எனினும், இந்த அரசானது தற்போது கொரோனா என்ற ஒரு மாயையை உருவாக்கி மே தின நிகழ்வு மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வைத் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்கள் வேறு நாட்டு மக்கள் இல்லை. எதிரி நாட்டுப் பிள்ளைகள் இல்லை. எங்களது உறவுகள் எங்களது சகோதரர்கள். அதனால் அந்தச் சகோதரர்களை நினைவுகூர்வதற்கு அந்த மக்களுக்கு உரிமை இருக்கின்றது. அந்த உரிமையை அரசு தொடர்ந்தும் மறுத்து வருகின்றது. இதற்கு எங்களுடைய வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

முள்ளிவாய்க்காலில் இறந்தவர்கள் எதற்காகப் போராடினார்கள் என்பதல்ல பிரச்சினை. எதற்காகப் போராடினாலும் கூட அவர்கள் எமது நாட்டு மக்கள். அவர்கள் வேறு யாரும் அல்லர். உயிரிழந்த உறவுகளை மக்கள் நினைவுகூர்வதற்கு யாரும் தடுக்க முடியாது. எனவே, மக்களின் உரிமையை இந்த அரசு நிலைநிறுத்த வேண்டும்” என்றார்.