Tamil News
Home செய்திகள் மேய்ச்சல் நில ஆக்கிரமிப்பால் மாடுகளை விற்கும் பண்ணையாளர்கள்

மேய்ச்சல் நில ஆக்கிரமிப்பால் மாடுகளை விற்கும் பண்ணையாளர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு, மாதவனைப் பகுதிகளில் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பாளர்கள் செயற்படுவதன் காரணமாக பலர் மாடுகளை விற்பனை செய்துவிட்டு வேறு தொழில்களை நாடிச் சென்றுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக மயிலத்தமடு மாதவனைப் பகுதியில் மேய்ச்சல் தரைக் காணிகளை பயிர்ச்செய்கை என்ற அடிப்படையில் கிழக்கு மாகாண ஆளுனரின் ஏற்பாட்டில் வேறு மாவட்டங்களிலிருந்து வருகைதந்த சிங்கள மக்களினால் அபகரிக்கப்பட்டது.

இதன்போது பண்ணையாளர்கள் பல்வேறு கஸ்டங்களை எதிர் கொண்டு வந்ததுடன் காணி அபகரிப்பாளர்களினால் மாடுகள் கொல்லப்படுவதும் களவாடப்படுவதும் பண்ணையாளர்கள் தாக்கப்படுவதுமாகயிருந்தது.

இந்த நிலையில் இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் இது தொடர்பான வழக்கொன்றினைத் தாக்கல் செய்திருந்த நிலையில், காணி அபகரிப்பில் ஈடுபட்டவர்கள் தாங்கள் அங்கிருந்து செல்வதாக உறுதி மொழியை வழங்கியிருந்தனர்.

இந்த நிலையில் மயிலத்தமடு, மாதவனைப் பகுதியிலிருந்து சில குடும்பங்கள் சென்றுள்ள நிலையில்,  500இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்னும் அப்பகுதியில் குடியிருப்பதுடன் அவர்கள் பண்ணையாளர்களுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

தற்போதைய நிலையில் அப்பகுதியில் உள்ள காடுகளிலேயே மாடுகளை மேய்க்கும் நிலைமையுள்ளதனால் மாடுகளைப் பராமரிக்க முடியாத நிலையுள்ளதாகவும், சிலவேளைகளில் மாடுகளை கொண்டுவர முடியாத நிலையில் காடுகளிலேயே அகப்படுவதனால் பண்ணையாளர்கள் தொடர் இழப்புகளை எதிர்கொண்டு வருவதாகவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக பெருமளவான பண்ணையாளர்கள் தங்களது கால்நடைகளை விற்பனை செய்துவிட்டுச் செல்வதாகவும், எதிர்காலத்தில் இந்த நிலப்பகுதியை பாதுகாக்க முடியாது. அத்துடன் பால் உற்பத்தியும் செய்யமுடியாத நிலையே ஏற்படும் எனவும் பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Exit mobile version