மேய்ச்சல் தரை செய்திகளை வெளியிட்ட விவகாரம்- ஊடகவியலாளர் மீது தீவிர விசாரணை!

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை  பகுதி மேய்ச்சல் தரை அபகரிப்பு தொடர்பாக  செய்திகளை வெளியிட்டதாகக் கூறி  ஊடகவியாலாளர் ஒருவர் பொலிஸாரின் கடுமையான விசாரணைகளுக்கு முகம் கொடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு,மாதவனை பகுதியில் உள்ள மேய்ச்சல் தரை காணிகளை பெரும்பான்மையினர் அபகரித்து வருவதாகவும் அவற்றினை தடுத்து நிறுத்த நடவடிக்கையெடுக்குமாறு பிரதேச கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில்,  மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் நடைபெறும் அத்துமீறிய காணி அபகரிப்பு மற்றும் அதன் ஊடாக பண்ணையாளர்களுக்கு ஏற்படுத்தப்படும் அநீதிகள் குறித்த செய்திகளை வெளியிட்ட மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் மற்றும் சுதந்திர ஊடகவியலாளருமான செல்வக்குமார் நிலாந்தன் இன்று பொலிசாரின் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இன்று மதியம் அவரது வீட்டிற்கு  சென்ற நான்கு பேர் கொண்ட பொலிஸ் குழு ஊடகவியலாளர் நிலாந்தனை சுமார் ஒன்றரை மணித்தியாலம் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியதுடன் அவரிடம் இருந்து வாக்குமூலத்தை பதிவு செய்து அவரது கையொப்பத்தையும் பெற்றுச் சென்றுள்ளனர்.

எந்த வித முன் அறிவித்தலோ அல்லது எழுத்து மூல அழைப்பாணையோ வழங்காது திடீரென அவரது வீட்டிற்கு வந்த ஏறாவூர் பொலிஸார் வீட்டுக்குள் நுளைந்து விசாரணைகளை மேற்கொண்டு இருந்தனர்.

இது குறித்து தெரியவருவதாவது,
“மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதி மேய்ச்சல் தரை அபகரிப்பு தொடர்பாக  செய்திகளை வெளியிட்டதாகக் கூறி இன்று மதியம் எனது வீட்டிற்கு வருகை தந்த நான்கு பேர் கொண்ட பொலிஸ் குழு, என்னை தீவிர விசாரணைக்கு உட்படுத்தியதுடன் எனது வாக்குமூலத்தை பதிவு செய்து சென்றனர்.
திடீரென எனது வீட்டிற்குள் நுளைந்த பொலிசார் மட்டக்களப்பு மாவட்ட மேய்ச்சல் தரை பகுதிக்கு சென்ற ஊடகவியலாளர்கள் விபரம் அங்கு செய்திகளை சேகரித்து எந்த எந்த மீடியாக்களுக்கு அனுப்புகிறீர்கள். மீனகம் இணையத்தளத்திற்கு நீங்கள் செய்தி அனுப்புகிறீர்களா? நீங்கள் எந்தெந்த மீடியா செய்கிறீர் உள்ளிட்ட பல தகவல்களை பதிவு செய்து சென்றனர்.
ஏன் எனது வீட்டிற்கு திடிரென பொலிசார் வந்தார்கள்? யார் கொடுத்த முறைப்பாட்டிற்காக என்னை விசாரணை செய்தார்கள்? ஏன் வீட்டிற்கு பொலிஸ் வாகனத்தில் வந்து எனது குடும்பத்தினர் அச்சப்படும் வகையில் விசாரணை செய்தனர் என்பது குறித்த எந்த தகவலம் தெரியவில்லை.”என விசாரணைக்கு உள்ளான ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார் என  சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றது.
நேற்றைய தினம் பண்ணையாளர்கள் மட்டக்களப்பு மாவட்ட ஆளும் கட்சி அரசியல் வாதிகள் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த காணொளி பல ஊடகங்களில் வெளியாகிய இருந்த நிலையில், இன்றை தினம் குறித்த செய்திகளை சம்பவ இடத்திற்கு சென்று சேகரித்த ஊடகவியலாளர்கள் குறித்த விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஊடகவியலாளர் நிலாந்தன் மீது இதற்கு முன்னரும் இலங்கை புலனாய்வு துறையினர், பொலிசார் பல்வேறுபட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன் அவருடைய ஊடக செயற்பாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.