மேயர் கைது பற்றி உள்ளுராட்சி மன்ற அமைப்புக்களுக்கு முறையீடு – நிரோஷ் தகவல்

251 Views

மேயர் மணிவண்ணன் கைது தொடர்பில் உள்ளுராட்சி அமைச்சருக்கு உள்ளுராட்சி அதிகார சபைகளின் கம்மேளனத்தின் தலைவரும் குருநாகல் மாநகர சபை முதல்வருமான துஸார சஞ்சிவ அறிவித்திருப்பதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இது தொடர்பில் நிரோஷ் மேலும் தெரிவித்தவை வருமாறு:

“யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் வி. மணிவண்ணன் கைது செய்யப்பட்ட விடயம் தொடர்பில் சக தவிசாளார் என்ற வகையில் இன்று காலை முதற்கட்டமாக இலங்கை உள்ளூராட்சி அதிகார சபைகளின் சம்மேளனம் மற்றும் மாநகர முதல்வர் ஒன்றியம் ஆகியவற்றின் கவனத்திற்கு இவ்விடயத்தை தொலைபேசியில் கொண்டுவந்தேன்.

உள்ளுராட்சி மன்றங்களின் சம்மளனத்தின் தலைவராக பதவி வகிக்கும் குருநாகல் மாநகர முதல்வர் துஸார சஞ்சீவ, இவ்விடயம் தற்போது பொலிஸ் விசாரணையில் இருப்பதனாலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்குள் இருப்பதனாலும் தாம் உரிய சட்ட ஏற்பாடுகளுடன் தலையிடுவதாகவும் தெரிவித்தார். இதேவேளை இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம் என்ற வகையில் தாம் முதல்வருடைய கைது தொடர்பில் உள்ளுராட்சி அமைச்சருடன் தாமதமின்றி இவ்விடயம் குறித்து பேசவுள்ளதாகவும் தொவித்தார்.

மேலும், இலங்கையில் மேயர்களை உள்ளடக்கி முதல்வர்கள் ஒன்றியமும் உள்ள நிலையில் அதன் தலைவராகவுள்ள மொரட்டுவை மாநகர முதல்வர் டபிள்யூ. சந்திமல் பெர்ணான்டோவுக்கும் யாழ்.மாநகர முதல்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரின் விடுதலை தொடர்பில் தங்கள் சங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கேட்டுக்கோண்டேன்.

அதற்கு முதல்வர் ஒன்றியத்தின் தலைவர், தான் ஊடகம் வாயிலாக இவ்விடயம் பற்றித் தெரிந்து கொண்டதாகவும் இவ்விடயம் பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பான கைது. நகர ஒழுங்கு படுத்தல்களைச் செய்வதற்கு பொலிசாரையே முதல்வர் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்றார். நான் இது தங்கள் அபிப்பிராயம் சார்ந்த விடயமாக இருக்கின்ற நிலையில் தாங்கள் நாட்டில் உள்ள முதல்வர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அமைப்பு என்ற வகையில் தலையிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன்.

இதேவேளை சக உள்ளூராட்சி மன்றம் ஒன்றின் தலைவரின் கைது என்ற வகையில் ஏனைய அமைப்புக்களின் கவனத்திற்கும் இவ்விடயம் எழுத்துமூலம் கொண்டுவரப்படவுள்ளது” என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

Leave a Reply