மேச்சல் தரை விவகாரம்- பொலிஸார் பொய் வழக்கு போடுவதாக குற்றச்சாட்டு

490 Views

மேச்சல் தரைகளில் தமது கால்நடைகளை மேய்ப்பதற்கு தடை விதிக்கும் நோக்கில்,  பொலிசார் பொய்யான வழக்குகளை போடுவதாக பண்ணையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்ணையாளர்கள், மேய்ச்சல் தரை காணிகளாக பயன் படுத்திய  நிலங்களில், தங்களது மாடுகளை நீண்ட காலமாக மேய்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,நேற்றைய தினம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள திபுலான மேய்ச்சல் தரை பகுதிகளுக்கு நேரடியாக சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை சந்தித்து கலந்துரையாடிய பண்ணையாளர்கள் மேற்படி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

பரம்பரை பரம்பரையாக மட்டக்களப்பு மாவட்ட வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து அம்பாறை மாவட்டத்தில் உள்ள திபுலானை பகுதிக்கு மாடுகளை மேய்ப்பதற்காக கொண்டு சென்று வருவதாக கூறும் அவர்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் போக நெற்செய்கை செய்யப்படும் காலத்தில் மூன்று மாத காலத்திற்கு மட்டுமே தமது மாடுகளை மேய்ப்பதற்கு அம்பாறை திம்புலான பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதிகளுக்கு கொண்டு சென்று மேய்ப்பதாக கூறுகின்றனர்.

இந்நிலையில், தற்போது வந்த புதிய ஆட்சியில் மீண்டும் இந்த பகுதிகளுக்கு மாடுகளை கொண்டு வரக் கூடாது என்றும் இந்த பகுதியில் உள்ள பொலிசார், வனவளப் பாதுகாப்பு அதிகாரிகள் அச்சுறுத்தி வழக்கு தாக்கல் செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுக் குறித்து மேலும் அவர்கள் கூறுகையில்,

“இன்று வரை இருபதுக்கு மேற்பட்ட வழக்குகளை தாக்குதல் செய்துள்ளனர். இதில் எங்கள் மீது பல பொய்யான வழக்குகளை போடுகிறார்கள். வடிசாராயம் காய்ச்சிய வழக்குகளை கூட எம் மீது போடுகிறார்கள். ஒரு வழக்கிற்கு 20,000 ரூபாய் தண்டப் பணம் விதிக்கின்றனர். பண்ணையாளர்கள் தங்களது பண்ணையாளர் அடையாள அட்டையை காட்டியும் அதனை தூக்கி எறிந்து கைது செய்கின்றனர்.

சிலர் எங்களது மாடுகளை கட்டிவைத்து அளவுக்கு அதிகமாக பணத்தை கோருகின்றனர் இதனால் எமது பண்ணையாளர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

மயிலத்த மடு மாதவனை பகுதிகளில் சிங்கள மக்களுக்கு சோளம் பயிர் செய்கை செய்ய அந்த பகுதி பண்ணையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்தே இந்த பகுதியில் எங்களது மாடுகளை மேய்ப்பதற்கு சிங்கள அரச அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.” என்று தெரிவித்துள்ளனர்.

இந்த பிரச்சினைகளை கேட்டறிந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன். நேரடியாக அப்பகுதிக்கு பொறுப்பான பொலிஸ் பொறுப்பதிகாரி அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இதைத் தொடர்ந்து இந்த பிரச்சினைக்கு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தை கூட்டி மட்டக்களப்பு அம்பாறை அதிகாரிகள் மட்டத்தில் ஒரு முடிவு வரும் வரை பண்ணையாளர்கள் மீது வழக்கு போடும் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply