Home ஆய்வுகள் மெல்லச் சாகும் சிவில் நிர்வாகம் – பி.மாணிக்கவாசகம்

மெல்லச் சாகும் சிவில் நிர்வாகம் – பி.மாணிக்கவாசகம்

ஜனநாயகம் என்பது மக்களால் மக்களுக்காக நடத்தப்படுகின்ற ஆட்சி முறைமை. இது நியாயமான விட்டுக்கொடுப்புகளையும் நீதியான சகிப்புத் தன்மையையும் கொண்டிருத்தல் வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது. சிறுபான்மை இன மக்களின் உரிமைகள், வாழ்வியல் இருப்புகள் என்பன பன்மைத்தன்மையின் அடிப்படையில் பெரும்பான்மையினரால் உறுதிப்படுத்தப்பட வேண்டும். பாதுகாக்கப்பட வேண்டும். இது ஜனநாயகத்தின் கோட்பாடு.

ஆசிய பிராந்தியத்தில் நீண்ட மரபைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகின்ற இலங்கையின் ஜனநாயகம் நேர் முரணான நிலையிலேயே காணப்படுகின்றது. ஆங்கிலேயரிடம் இருந்து நாடு சுதந்திரம் அடைந்த நாள் முதலாக ஜனநாயகத்தின் வழியில் ஆட்சி நடைபெற்று வந்திருக்கின்றது. ஆனால் அந்த ஜனநாயக ஆட்சிமுறைமை படிப்படியாக வளர்ச்சியடைந்து சிறப்படைவதற்குப் பதிலாகத் தேய்பிறை வடிவில் நலிவடைந்து செல்வதையே வரலாறு சுட்டிக்காட்டுகின்றது. இதனால் அதன் உண்மைத் தன்மையும் எதிர்கால நிலைமையும் கேள்விக்கு உள்ளாகியிருக்கின்றது.

சிறுபான்மை தேசிய இனமாகிய தமிழ் மக்களின் அடிப்படை ஆட்சி உரிமைகளும் வாழ்வுரிமைகளும் படிப்படியாக மறுக்கப்பட்டு, அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதே இந்த நிலைமைக்குக் காரணம். மறுக்கப்பட்ட ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான தவிர்க்க முடியாத அரசியல் தேவையாகவே அது முகிழ்த்திருந்தது.

ஆனால் அந்த அரசியல் உரிமைக்கான ஆயுதப் போராட்டத்தை அரசு பயங்கரவாதமாகச் சித்தரித்தது. தனது ஆட்சி அதிகார செல்வாக்கைப் பயன்படுத்தி பிற நாடுகளின் உதவியுடன் மோசமானதோர் இராணுவ நடவடிக்கையின் மூலம் அந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக முறியடித்தது.

ஆனால் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து யுத்தம் மூள்வதற்கு அடிப்படையான இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வைக் காண அரசு தவறிவிட்டது. யுத்தத்தில் அடைந்த வெற்றியைப் பெருமைக்கு உரியதாகப் போற்றுகின்ற பெருந்தேசியவாதிகள், அதனையே தமது அரசியல் முதலீடாக்கிக் கொண்டார்கள். இதில் யுத்தத்தில் வெற்றி பெற்ற ராஜபக்சாக்களே முன்னணியில் இருக்கின்றார்கள்.

யுத்த வெற்றி என்ற அரசியல் போதை அவர்களை இராணுவமயப்படுத்தப்பட்ட ஒரு குடும்ப ஆட்சியை நிறுவுவதில் ஆர்வம் கொள்ளச் செய்துவிட்டது. யுத்தத்தின் பின்னர் யுத்த மோதல்கள் இடம்பெற்ற வடக்கு கிழக்குப் பிரதேசங்களை இராணுவ மயமாக்கினார்கள். இராணுவ நிழல் படிந்த ஆட்சி நிர்வாகமே அங்கு கோலோச்சியது.

இராணுவ முனைப்பு கொண்ட அவர்களது ஆட்சிக்கு 2015 ஆம் ஆண்டு முடிவேற்பட்ட போதிலும், நான்கு வருடங்களின் பின்னர் அவர்களே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். யத்த வெற்றியையும் மேலோங்கிய இனவாதத்தையும் தமது பிரசாரமாக்கிய அவர்கள், சிங்கள பௌத்த மக்களின் பேராதரவுடன் ஜனாதிபதி பதவியையும், மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைக் கொண்ட நாடாளுமன்ற ஆட்சி அதிகாரத்தையும் இலகுவாகத் தங்கள் வசமாக்கிக் கொண்டார்கள்.

இருபதாவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி தங்களது வசதிக்கேற்றவாறு ஆட்சி அதிகாரங்களை வகுத்துக் கொண்டார்கள். இது அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகவே நோக்கப்படுகின்றது. இந்தத் திருப்புமுனை வளர்ச்சிப் போக்கிலானதல்ல. நாட்டின் எதிர்கால சுபிட்சத்துக்கானதுமல்ல. இனவாதத்தின் மீது கட்டியெழுப்பப்பட்டுள்ள இந்த அரசியல் வெற்றியைத் தொடர்ந்து அவர்கள் ‘இராணுவ ஜனநாயக வழிமுறை’யில்  அடியெடுத்து வைத்துள்ளார்கள்.

மகிந்த ராஜபக்ச அரசியல் பின்னணியைக் கொண்டவராகத் திகழ்ந்த போதிலும், ராஜபக்ச குடும்பத்தில் மற்றுமொரு ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்ச இராணுவ பின்னணியைக் கொண்டவர். இராணுவ அதிகாரியாகப் பணியாற்றி, பணியில் இருந்து விலகியிருந்த அவர், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகியதும், விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வழிநடத்துவதற்குப் பொறுப்பான பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

gallerye 155000571 2417506 மெல்லச் சாகும் சிவில் நிர்வாகம் - பி.மாணிக்கவாசகம்

அரசியல் வழிகளிலும் பார்க்க இராணுவ வழிமுறையிலேயே பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற முனைப்பே அப்போது அரச தரப்பில் முனைப்புப் பெற்றிருந்தது. எந்தவிடயத்திலும் விட்டுக்கொடுக்காத கடும்போக்கு பேச்சுவார்த்தை முயற்சிகளைத்  தோல்வி அடையச் செய்தன. அரசியல் ரீதியான பிரச்சினைக்காகவே தமிழ்த்தரப்பினர் ஆயுதமேந்தினர் என்ற யதார்த்தத்தை ஏற்க மறுத்து, பயங்கரவாதத்தை முறியடிப்பதே யுத்தத்திற்கு முடிவு காண்பதற்கான ஒரே வழியென்ற பிடிவாதப் போக்கில் அரச தரப்பினர் செயற்பட்டு வெற்றியும் அடைந்தனர்.

யுத்த வெற்றியின் பின்னரும் தமிழ்த்தரப்பின் விட்டுக்கொடுப்புடன் கூடிய அரசியல் நிலைப்பாடும், அரசியல் தீர்வுக்குரிய நகர்வும்கூட நியாயமானதொரு நடவடிக்கையாக அரச தரப்பினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கிவிடும் என்ற அரசியல் மாயைக்குள் சிங்கள மக்களைச் சிக்கவைத்து, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுக்கான வழியை முழுமையாக அடைத்துவிடுவதிலேயே ராஜபக்சாக்கள் தீவிரம் காட்டினர். காட்டி வருகின்றனர்.

இனப்பிரச்சினை என்று எதுவும் கிடையாது. அரசியல் உரிமை சார்ந்த பிரச்சினையும் இல்லை. தமிழ் மக்கள் பொருளாதாரப் பிரச்சினைக்கே முகம் கொடுத்திருக்கின்றனர். பொருளாதார ரீதியான வளர்;ச்சியே அவர்களுடை தேவை என்று இனப்பிரச்சினையின் தாற்பரியத்தையே ராஜபக்சாக்கள் புரட்டிப் போட்டிருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் நாட்டின் சிறுபான்மை தேசிய இனத்தின் தனித்துவம், அதன் தாயகம் சார்ந்த வரலாற்று ரீதியான பிராந்திய உரிமை என்பதெல்லாம் விடுதலைப்புலிகளை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான பிரிவினைவாத அரசியல் தந்திரோபாயம் என்ற பிரசாரத்தையே முன்னெடுத்திருக்கின்றனர்.

நாட்டில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலம் பயங்கரவாதத்தை இல்லாமல் செய்திருப்பதாகப் பெருமை பேசி, ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஒற்றைச் சிந்தனையை நிலைநிறுத்துவதற்கும் அவர்கள் நடவடிக்கைகளை எடுத்துள்ளார்கள். பேரினத்தவராகிய சிங்களவர்கள் எங்கும் வாழலாம். எங்கும் பௌத்தமே நிலைபெற்றிருக்க வேண்டும் என்ற இனவாத நோக்கிலும் இந்த ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கொள்கையை நிலைநாட்டவும், நடைமுறைப்படுத்தவும் அவர்கள் முயன்று வருகின்றார்கள்.

அவர்களின் இந்த இனவாதச் செயற்பாடுகளுக்கு இராணுவமயப்படுத்தல் பெரிதும் துணைபுரிகின்றது. இறுதி யுத்தத்தில் மனித உரிமை மீறப்பட்டிருக்கின்றன. சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன என்பது ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டிருக்கின்றது. இதற்கு ஐ.நா அறிக்கைகள் ஆவணங்களாக அமைந்திருக்கின்றன. அதன் அடிப்படையிலேயே உரிமை மீறல்களுக்கு அரசு பொறுப்பு கூற வேண்டும். நிலைமாறுகால நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று ஐ.நா பிரேரணைகளின் மூலம் வலியுறுத்தி இருக்கின்றது.

ஆயினும் உரிமைகள் எதுவும் மீறப்படவில்லை. உரிமை மீறல்களில் இராணுவத்தினர் ஈடுபடவில்லை. எனவே பொறுப்பு கூற வேண்டிய அவசியமில்லை என்ற போக்கிலேயே ஐ.நாவின் பொறுப்பு கூறுதலுக்கான பிரேரணைகளில் இருந்து விலகுவதாக ஜனாதிபதி கோத்தாபாய தலைமையிலான அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்த இராணுவத்தினர் ஒருபோதும் மனித உரிமைகளை மீறவில்லை. எனவே இராணுவத்தினர் எவரும் மனித உரிமை மீறலுக்காக நீதிவிசாரணைக்கு உட்படுத்தப்படுவதைத் தாங்கள் அனுமதிக்கப் போவதில்லை என்று ராஜபக்சாக்கள் சூளுரைத்திருக்கின்றனர். அதன் அடிப்படையில் 2000 ஆம் ஆண்டு மூன்று குழந்தைகள் உட்பட 8 தமிழர்களைப் படுகொலை செய்ததாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தினால் 2015 ஆம் ஆண்டு மரண தண்டனை வழங்கி தண்டிக்கப்பட்ட முன்னாள் இராணுவ சார்ஜன்ற் சுனில் இரத்நாயக்காவை 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்தார்.

இது இலங்கையின் நீதித்துறையையும், ஐ.நா வலியுறுத்தியுள்ள யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டையும் கேலிக்கு உள்ளாக்கி இருக்கின்றது. அது மட்டுமன்றி இராணுவமயவாத ஆட்சிச் சிந்தனைப் போக்கைக் கொண்ட ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாட்டின் அரச நிர்வாகத்தையே படிப்படியாக இராணுவ மயமாக்கி வருகின்றார். இதனால் இலங்கையின் சிவில் நிர்வாகம் இனி மெல்லச் சாகும் என்ற நிலைமைக்கு ஆளாகி இருக்கின்றது.

தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற சூட்டோடு சூடாக முன்னாள் இராணுவ அதிகாரியாகிய மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமித்தார். இறுதி யுத்தத்தில் முக்கிய பங்கேற்று மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த இவர், 2020 ஆம் ஆண்டின் இறுதியில் இராணுவத்தின் ஜெனரலாக ஜனாதிபதியினால் தரம் உயர்த்தப்பட்டிருக்கின்றார். அதேவேளை சர்வதேச மட்டத்தில் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள இராணுவத் தளபதியும் கொரோனா தடுப்புக்கான நடவடிக்கைக் குழுவின் தலைவருமாகிய லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவையும் ஜெனரலாக ஜனாதிபதி தரம் உயர்த்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்துகின்ற சுகாதாரத்துறை சார்ந்த செயற்பாட்டின் தலைமை அதிகாரியாக இராணுவத் தளபதியே சர்வ வல்லமை கொண்டவராக நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மேலாக இராணுவமே நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கின்றது. இது இராணுவத்தைப் பயன்படுத்தி சுகாதாரத்துறை சார்ந்த கொரோனா தொற்று என்ற தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்ற இராணுவ மயச் சிந்தனையின் அடையாளமாகும்.

அது மட்டுமல்லாமல் நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று நிலைமையைக் கையாள்வதற்கு நாட்டின் 25 மாவட்டங்களுக்கும் இணைப்பதிகாரிகளாக இராணுவ அதிகாரிகளையே அரசாங்கம் நியமித்திருக்கின்றது. மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் இவர்களில் 16 பேர் முக்கிய பங்கேற்றிருந்தவர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

யுத்தத்தின்போது இராணுவத்தினர் வேண்டுமென்றே குண்டுத்தாக்குதல்கள் மற்றும் எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டனர் என்றும், வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடத்தி, அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோகத்தைத் தடுத்து மக்களைப் பட்டினி போட்டதுடன், உயிர் காக்கும் மருந்துகளை மறுத்த அதே இலங்கை இராணுவ அதிகாரிகள் தற்போது மக்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது என்று நீதிக்கும் சமாதானத்துக்குமான சர்வதேச அமைப்பின் பணிப்பளார் ஜஸ்மின் சூக்கா இந்த இராணுவ அதிகாரிகளின் நியமனம் குறித்து கருத்துரைக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

“அவர்களது நியமனமானது கோவிட்டின் (கொரோனா வைரஸின்) அவரசரகால நிலையைப் பயன்படுத்தி ஒரு கறைபடிந்த அமைப்பினை சுத்தம் செய்யும் ஓர் இழிவான முயற்சியாகும்” என ஜஸ்மின் சூக்கா வர்ணித்துள்ளார்.

அத்துடன் சர்வதேச சமூகத்திற்கும் இது ஒரு பாரதூரமான பிரச்சினையை ஏற்படுத்துகின்றது. இராஜதந்திரிகளும் நன்கொடை வழங்கும் நாடுகளும் சிவில் நிர்வாகம் அகற்றப்பட்டு -வலுவற்றதாகச் செய்யப்படும் இந்தச் செயற்பாட்டிற்கு துணை போகக்கூடாது என்பது அவரது கோரிக்கை.

சிவில் நிர்வாகத்திற்குப் பொறுப்பாக இராணுவ கட்டளை அதிகாரிகளை நாடு முழுவதற்கும் நியமித்திருப்பது தற்போதுள்ள அரசாங்க அதிகாரிகளின் அதிகாரத்தை வலுவிழக்கச் செய்வதாக உள்ளது. சுகாதாரம் தொடர்பான அவசர நிலை ஒருபோதும் ஜனநாயகத்தை அழிப்பதை நியாயப்படுத்த மாட்டாது என நீதிக்கும் சமாதானத்துக்குமான சர்வதேச அமைப்பின் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா இடித்துரைத்துள்ளார்.

அவருடைய இந்தக் கூற்று இலங்கையின் இராணுவமயமான ஆட்சிப் போக்கின் ஆபத்தான நிலைமை குறித்த எச்சரிக்கையாகக் கொள்ளத்தக்கது.

கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை நாடளாவிய ரீதியில் கையாள்வதற்கு மட்டுமல்லாமல் சுகாதார அமைச்சு, விவசாய அமைச்சு உள்ளிட்ட அமைச்சுக்கள் சிலவற்றிற்கும் இராணுவ அதிகாரிகளே செயலாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர். போதாக்குறைக்கு வாகன ஓட்டுநர் உரிமைப் பத்திரம் தயாரிக்கின்ற பிரசுர பணிகளும் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. பாடசாலைகளில் ஆங்கிலம் போதிப்பதற்காக் கடற்படையினரை நியமிக்கின்ற நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுத்திருக்கின்றது.

கைதிகள் நிரம்பி வழிகின்ற சிறைச்சாலைகளின் நிர்வாகத்தை சீர்செய்வதற்காக இராணுவ கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. சிறைச்சாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்து சிறைக்குள்ளே இருந்தவாறு போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகச் செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற பாதாள உலகக் குழுவினரைக் கட்டுப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை என்பதே இதற்கான அரச தரப்பின் விளக்கம்.

இத்தகைய நடவடிக்கைகள் யுத்த காலத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வரையறையற்ற அதிகாரங்களின் அனுகூலங்களை சுய இலாபத்திற்கும் ஊழல் செயற்பாடுகளுக்கும் பயன்படுத்திய இராணுவத்தினரின் நலன்களை யுத்தத்தின் பின்னரும் பேணுவதற்காகவே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

மொத்தத்தில் இராணுவத்தின் நலன்களை வரையறையற்ற போக்கில் அதிகரிக்கின்ற ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவின் இராணுவமய ஆட்சியானது நாட்டை முழுமையான சர்வாதிகார நிலைமையை நோக்கி நகர்த்திச் செல்வதையே நிதர்சனமாகக் காண முடிகின்றது.

 

 

Exit mobile version