முஸ்லிம் திருமணச் சட்டத்தில் திருத்தம் : விஜித ஹேரத் விளக்கம்

முஸ்லிம் திருமணச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை. அவ்வாறானதொரு தீர்மானத்தை மேற்கொள்ளப் போவதும் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகச் சந்திப்பு நேற்று புதன்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

”1951 ஆம் ஆண்டு முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் (MMDA) குறித்து பல முஸ்லிம் அமைப்புகள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளன. அவர்களுக்கு அதற்கான உரிமை உள்ளது. அதை அரசாங்கம் மதிக்கிறது.

முஸ்லிம் திருமணச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை. அவ்வாறானதொரு தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டிய தேவையும் அரசாங்கத்துக்கு இல்லை.

மதச் சட்டங்களுக்கு திருத்தங்கள் தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட மதத்தின் மதத் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னரே அவை மேற்கொள்ளப்படும். எந்தவொரு மதச் சட்டத்திலும் மாற்றங்களை மேற்கொள்ள முன்னர் குறித்த மதத்தின் தலைவர்களின் பரிந்துரைகளைப் பெற்ற பின்னரே மாற்றம் செய்யப்படும்.” என்றார்.