முள்ளிவாய்க்கால் படுகொலையின் கொடிய வேர்களை இலங்கையின் நீண்டகால அரசியல், சமூக, பொருளாதார கட்டமைப்புகளில் காண முடிவது எப்படி? (பகுதி 1)- மு.திருநாவுக்கரசு

தூய இலட்சியங்களினாலும், தர்ம போத னைகளினாலும், ஓசோனை உடைக்கவல்ல ஒப்பாரிகளினாலும், வரலாற்றை நிர்ணயிக்க முடியாது. சிங்கத்தின் பிடியில் யானையின் அலறல் காட்டைப் பிளந்து ஓசோனை உடைக்கும்.  ஆனாலும் கூட, யானையைக் கூறு போட்டுச் சிங்கங்கள் உண்ணத் தவறுவதில்லை.

“எதனையும் அரசியலாகப் பார்க்க வேண்டும்; அனைத்தும் அரசியலுக்குக் கீழ்ப்பட்டவையே”

அரசியல் என்பது நலன்களைக் கையாள்வது பற்றிய இயங்கியல் ஆகும். உறவுகள் நலன்களால்  ஆனவை. நலன்கள் கொடுக்கல், வாங்கல் அல்லது ஆக்கிரமிப்பாலானவை. தாய்க்கும் – பிள்ளைக்கும், காதலனுக்கும் – காதலிக்கும், அயலவனுக்கும் – அயலவனுக்கும், அண்டை நாட்டுக்கும் – அயல் நாட்டுக்கும், உள்நாட்டுக்கும் – வெளிநாட்டுக்கும் இப்படி எதனை எடுத்துக்கொண்டாலும் அனைத்து உறவுகளும் நலன்களால் கட்டியெழுப் பப்படுபவை. தேவையே தர்மம் நலன்களே   அரசியல் அரசியல் இன்றி அணுவும் அசையாது.

தேவையில் இருந்து நலனும்,  நலனில் இருந்து  தேவையும், தேவையிலும் நலனிலும் இருந்து அதிகாரமும், அதிகாரமே அரசியலாகவும் வடிவம் பெறுகின்றன. அதிகாரத்தின் உச்சம் இறைமையாகவும் இறைமைக்கான நிறுவன பீடம் அரசாகவும் கட்டமைப்பாகின்றன. இந்த அரசைக் கோலோச்சுவது  சார்ந்த நடப்பியலே அரசியலெனப்படுகிறது. இந்தவகையில், பூமியில் அனைத்துமே அரசியலுக்குக் கீழ்ப்பட்டவையே.

அதாவது, அரசு அதிகாரத்தைக் கையில் எடுப்பது பற்றிய வித்தைதான் அரசியலாகும். இந்த அரசியல் அதிகாரம் நீதி –  தர்மம் – நியாயங்களால் நிர்ணயிக்கப்படுவதில்லை. அது தேவைக்கு ஏற்ப சூழல் சார்ந்த பலத்தினால் நிர்ணயிக்கபடுகிறது. அதாவது, உள்ளடக்கத்தில் தேவையிலிருந்து சூழல் சார்ந்த பலத்தைக் கையாளும் வித்தையே  அரசியலாகும்.

இதன்படி அனைத்துவகையான புனிதப் பிரகடனங்களுக்கும் அப்பால், ‘வரலாறானது வெற்றி  பெற்றவர்களால் எழுதப்படுகிறது’ (‘History is written by victors’)  என்பதே நடைமுறை உண்மையாகும்.

பூமியில் இருந்து கல்லை மேல் நோக்கி  எறிந்தால், அது கீழ் நோக்கி விழுகிறது. இப்படி கல் கீழ் நோக்கி விழுவதற்குப் பெயர் தர்மம் அல்ல அது இயற்கை விதி. ஆதலால், இந்தப் பிரபஞ்சத்தில் அனைத்துமே குறிப்பிட்ட விதிகளின் வழியே பயணிப்பவை என்பதால்  தேவையிலிருந்து   நலனைத்   தெரிவு செய்து,  தேவை +  நலன் என்ற கூட்டு இணைப்பை விதிக்கு உட்படுத்தி, விதி வழியே இலக்கை அடையுமாறு வரலாறு கட்டளையிடுகிறது.

மொத்தத்தில், அனைத்துமே அரசியல். அரசியலின் உள்ளடக்கம் தேவைகளும் அதன் வழி நலன்களுமே. தேவைகளும் நலன்களும் ஏதோ ஒரு விதிக்கு உட்பட்டவை.

அவ்விதியை அடையாளம் காண்பதற்கான கருவி அறிவியல். இதனால் அரசறிவியல் வாழ்வில் நிர்ணயகரமான ஒன்றாய்க் கோலோச்சுகின்றது. அந்த அறிவார்ந்த செங்கோலைக் கையில் ஏந்தித் தலைவிதியை நிர்ணயிக்க வேண்டும் என்பதே வரலாற்று நியதி.

இனப்படுகொலையை ‘கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை’ என்று ஏன் சொல்கிறோம்?

இனப்படுகொலை ஏதோ ஒரு நாளில் திடீரென்று நடந்துவிடுவதல்ல. இனப்படுகொலை என்பது எப்போதும் கட்டமைக்கப்பட்ட ஒன்றுதான். கோட்பாட்டு அல்லது வரலாற்றுப் பரிமாணமின்றி ஒருபோதும் இனப்படுகொலை நிகழ முடியாது.  அதன்படி, இனப்படுகொலை என்பது எப்போதும் கட்டமைக்கப்பட்ட  இனப்படுகொலையே ஆகும். இனப்படுகொலையானது தெளிவான தத்துவ அடிப்படையைக் கொண்டிருக்கும். ஆதலால், எப்போதும் இனப்படுகொலை என்பது தவிர்க்க முடியாதவாறு ஒரு தத்துவப் பிரச்சினையா யும் அமைந்திருக்கும்.

‘கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை’ என்ற பதம் இங்கு  வெறும் சட்டப்  பதமாக ( Legal Term) மட்டும் பயன்படுத்தப்படவில்லை. கட்ட மைக்கப்பட்ட இனப்படுகொலை, சூழல் சார்ந்த காரண -காரியங்களுடன் நிகழ்கின்றது. நீண்ட வர லாற்றுப் பரிமாணங்களுடன்  கூடிய அரசியல் –  பொருளாதார – சமூகத் தேவைகளின் நிமித்தம் அரங்கேறுகின்றது.

கட்டமைப்பு(structure) என்பது இங்கே அரசு, அரசியல் யாப்பு, சட்டங்கள், ராணுவம், போலீஸ், நிர்வாகம் போன்ற ஒரு அரசின் அடிப்படைக் கட்டமைப்பையும், சந்தைகள், வேளாண்மை, உற்பத்தி, கல்வி, சுகாதாரம் போன்ற சமூக, பொருளியல் அடிப்படை கட்டமைப்பு களையும் சேர்த்து குறிக்கிறது.

ஒரு தெளிவான தனித்துவம் கொண்ட   பண்பாட்டு மக்கள் இனத்தின் தனித்துவத்தை இன,  மத,  மொழி, பிரதேச அடையாளங்களை, வாழ்வியலை, கட்டமைப்பு ரீதியாக  அழிப்பதுடன், அரசியல் ரீதியாக அவர்களுக்கென்ற அரசியல் அதிகாரம்,  அதிகாரத்தில்  பங்கு வகித்தல்   என்பனவற்றை  எல்லாம் தோலிருக்க சுளை  பிடுங்கு வது போல் ஒவ்வொன்றாகப் பிடுங்கிவிடுவது.  இந்த வகைப்பாடானது  உயிர் அழிப்பல்லாது, பண் பாட்டு இன அடையாளங் களை கட்டமைப்பு ரீதியாக, படிப்படியாக, நீண்டகால நோக்கில் அழித்தொழிப்பது என்ற போக்கிற்குரியது. இத்துடன் கூடவே  இரத்தம் தோய்ந்த இனப்படு கொலையும் பொலீஸ், இராணுவ, சமூக, பொரு ளாதார, கல்வி ஒடுக்குமுறைகளும் கூட்டுச் சேரும்.

அதாவது, ஒரு மக்கள் கூட்டத்தின் தனித்துவத்தை, அவர்களின் அடையாளத்தை, அரசியல் – பொருளாதார இருப்பை  கடல், நிலம் வாழ் அதிகாரத்தை, உயிர் வாழ்வை கொஞ்சம் கொஞ் சமாகவும், பின்பு மொத்தமாகவும் அழிப்பது உட்பட  அனைத்தையும் உள்ளடக்கிய வகையில், ஓர் உடலின் அனைத்து உடற்கூறுகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து முழு வடிவம் பெற்றுள்ளது போல, அனைத்தையும் தழுவிய (Holistic) முழுமைப்பட்ட இத்தகைய அழித்தொழிப்பு அணுகுமுறைக்கு ‘கட்டமைக் கப்பட்ட  இனப்படுகொலை’ என்ற பதம் எடுத் தாளப்படுகிறது.

கட்டமைக்கப்பட்ட  இனப்படுகொலை யானது  ஒரு முறைமை (System) என்ற  வகையில் அது அதற்கே உரிய தர்க்கபூர்வப் போக்கைக்  (Logical development) கொண்டிருக்கும். முறைமை, தர்க்கபூர்வப் போக்கு  என்பன நல்மனம் கொண்ட ஒரு சிலரின் அல்லது தனிமனித  விருப்பு – வெறுப்புகளுக்கு அப்பால்  தன்னகத்தே செயற் படும் வல்லமை கொண்டவை. இது தொடர்பாகப் பின்வரும் கோட்பாட்டு வகையான பார்வை கவனத்திற்குரியது.

“What is structural genocide?

Therefore, if adhering to the logic of a social system inevitably results in structural violence that causes death on a mass scale, then it is apparent that structural genocide is an intentional outcome of human behaviors that adhere to that logic.”

‘ஒரு சமூக அமைப்பில் காணப்படும் தக்கபூர்வ விதிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் அது தவிர்க்க முடியாத வகையில் பாரிய அளவு வன்முறைகளையும் அதனால் மரணங்

களையும் ஏற்படுத்தும்  என்றால், அது அவ் விதிகளை மாற்றாது   தொடர்ந்து  அப்படியே கடைப்பிடித்துவரும்   மனிதர்களின் நடத்தை களினால்,  வேண்டுமென்றே, திட்டமிட்ட வகை யில்  நிகழ்த்தப்படும்   கட்டமைப்பான இனப் படு கொலை என்பது   வெளிப்படை’ அதா

வது புவியியல், பொருளாதாரம், அரசியல், வாழ்க்கை முறை, பழக்க வழக்கம், வரலாறு மற்றும் வரலாற்றியல் ஆகியவற்றால் ஒரு சமூகம் இனப்படுகொலைக்கு உரிய வகையில் கட்டமைப்புச் செய்யப்பட்டு, அந்தச் சமூக அமைப்பு ஒரு முறைமையாகச் செயற் படும் இடத்தில் அந்தச் சமூக அமைப்பு முறையை மாற்றாமல், கட்டமைக்கப்பட்ட இனப்படு கொலைக்குத் தீர்வு காண முடியாது  என்பதே தத்து வார்த்த அரசியல் உண்மையாகும்.

இந்தவகையில், ‘இனப்படுகொலைக்கான பரிகாரம் பிரிந்து செல்லல் மட்டுமே’

(Genocide can be compensated only by secession) என்ற கூற்றும் கவனத்திற்குரியது.

தொடரும்…