முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

மே 18   நினைவு தினத்தினை அனுஷ்டிக்க  இராணுவத்தினர், காவல்துறையினர், புலனாய்வுதுறையினர்    இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர். 

முள்ளிவாய்க்கால் மண்ணில் கொல்லப்பட்ட தமிழ்மக்களை நினைவுகூர்ந்து பல தடைகள், சவால்களுக்கு மத்தியிலும் மே 18 அன்று நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருவது வழக்கமான விடயமாகும்.

இந்நிலையில் இம் முறையும் மே 18 நினைவு நாளை நினைவு கூர்வதற்கு காவல்துறையினர், பொதுமக்கள், அரசியல் கட்சியினருக்கு தடையுத்தரவினை வழங்கியிருந்த நிலையில் இன்றைய தினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு நீக்கப்பட்டு, கோவிட் 19 சுகாதார விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் நாளைய தினம்  அஞ்சலி செலுத்தலாம் என கட்டளை பிறப்பிக்கப் பட்டிருந்தது.

IMG20210517182359 01 முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

இந்நிலையில் ஊடகவியலாளர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடத்திற்கு  சென்றவேளை இராணுவத்தினர் தடைவிதித்துள்ளனர். குறித்த நினைவேந்தல் இடத்திற்கு செல்வதற்கு மூன்று வீதிகள் இருக்கின்றது. மூன்று வீதிகளிலும் இராணுவத்தினர், புலனாய்வுதுறையினர், காவல்துறையினர் பாதுகாப்பு எனும் பெயரில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து குறித்த இடத்திற்கு  சென்ற ஊடகவியலாலர்களை நினைவேந்தல் இடத்திற்கு செல்லமுடியாது என கூறி அவர்களுடைய மோட்டார் சைக்கிள் இலக்கங்களை பதிவுசெய்த பின்னர்  திருப்பியனுப்பியுள்ளார்கள் இராணுவத்தினர்.

இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றினால் நினைவேந்தலுக்கு நாளைய தினம்  அனுமதி வழங்கப்பட்ட போதும் இராணுவத்தினர், காவல்துறையினர் மற்றும் புலனாய்வு துறையினர் குறித்த இடத்திற்கு மக்கள் செல்வதற்கு தடைவிதித்திருப்பது சட்டத்தை அவமதிக்கும் செயற்பாடு என்பதும் குறிப்பிடதக்கது.