முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மே 18 இல் நடைபெறும் – பொதுக் கட்டமைப்பு அறிவிப்பு

434 Views

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் நிகழ்வு வரும் மே 18ஆம் திகதி இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்யும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“முள்ளிவாய்க்கால், தமிழினப் படுகொலை நினைவேந்தல் நினைவு வழமைபோன்று, திட்டமிட்டபடி, இவ்வாண்டும் மே 18ஆம் திகதியன்று சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, முற்பகல் 10.30 மணிக்கு, தமிழினப் படுகொலை, நினைவேந்தல் முற்றமான முள்ளிவாய்க் காலில் ஒழுங்கமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்வ தோடு தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கு மகாணங்களிலும் ஏனைய இடங்களிலும் கறுப்புக் கொடியைப் பறக்கவிட்டும், மே 18 அன்று மாலை 6 மணிக்கு ஆலயங்களிலும், கோவில்களிலும் மணி ஒலித்து அகவணக்கம் செலுத்தி, வீடுகளுக்கு முன் விளக்கேற்றி தமிழ்த் தேசிய துக்க நாளை கடைப்பிடிக்கும் படி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினர் கேட்டு நிற்கின்றனர்.

முள்ளிவாய்க்கால் அனுபவத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதற்காக மே 18 அன்று முள்ளிவாய்க்கால் கஞ்சியை பரிமாறுவதோடு, தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டிய பயணத்தில் வேறுபாடுகளைக் களைந்து, ‘ஈழத் தமிழ்த்தன்மையில்’ ஒன்றிணைந்து முள்ளிவாய்க்கால் மையத்தில் மக்கள் இயக்கமாதலின் அவசியத்தையும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினர் வேண்டி நிற்கின்றனர்.

தயவு செய்து தாயகத்தில் ஒருங்கிணைக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக உள்ளூரிலும், புலம்பெயர் தேசத்திலும் நிதி சேகரிப்பில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு விநயமாக வேண்டி நிற்கின்றனர்” என்றுள்ளது.

Leave a Reply