முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு பதிலாக ‘அமைதித் தூபி’ அமையும் – பல்கலைக்கழகப் பேரவை அதற்கே அனுமதி

652 Views

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடித்தழிக்கப்பட்ட போர்க்கால முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை ‘அமைதித் தூபி’ என்ற பெயரில் மீண்டும் கட்டியெழுப்ப பல்கலைக்கழகப் பேரவை அனுமதி வழங்கியிருக்கிறது.

மாதத்தின் இறுதி சனிக்கிழமையான நேற்று நடைபெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவைக் கூட்டத்தில் இந்த விடயம் ஆராயப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது.

தூபி விவகாரம் தொடர்பில் நடந்தவற்றை துணைவேந்தர் சிறிசற்குணராஜா  நீண்ட அறிக்கை ஒன்றின் மூலம் பேரவை உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தினார். அதன் பின்னர் முன்னைய தூபி இருந்த இடத்தில் அமைதித் தூபியை அமைப்பதற்கான அனுமதியைப் பேரவை வழங்கியது.

இறுதிப் போரில் உயிரிழந்த தமிழர்களின் ஞாபகார்த்தமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, இராணுவம், பொலிஸ் ஆகிய தரப்புகளின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாகவே தூபியை இடிக்க வேண்டியேற்பட்டது என்று துணைவேந்தர் தெரிவித்திருந்தார்.

தூபி இடித்தழிக்கப்பட்ட சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் உணர்வுக் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. தூபி இடிக்கப்பட்டத்தை எதிர்த்தும் அழிக்கப்பட்ட தூபி அதே இடத்தில் மீளவும் கட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் மாணவர்கள் சிலர் பட்டினிப் போராட்டதில் குதித்தனர். அரசியல்வாதிகள் மற்றும் பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் இந்தப் போராட்டத்திற்குப் பேராதரவு வழங்கினர்.

தூபி இடிப்பைக் கண்டித்து வடக்கு கிழக்கு மாகாணம் முழுவதும் ஒரு நாள் கடையடைப்புப் போராட்டமும் நடத்தப்பட்டது. தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட இந்த மிகப் பெரிய கொந்தளிப்பு நாடுகளைக் கடந்து, இந்தியா மற்றும் மேற்கு நாடுகளுக்கும் விரிவாக்கம் பெற்றது. இதனால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக தூபியை மீளக் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைவேந்தர் சிறிசற்குணராஜா பல்கலைக்கழக மாணவர்களுக்கு உறுதிமொழி வழங்கினார். அதனை உறுதிபடுத்தும் விதமாக மாணவர்களோடு இணைந்து புதிய தூபிக்கான அடிக்கல்லையும் நட்டுவைத்து மாணவர்களின் பட்டினிப் போராட்டத்தை முடித்து வைத்தார்.

இவை அனைத்தும் நடந்த பின்னர் நடைபெற்ற முதலாவது பேரவைக் கூட்டத்தில் தூபியை மீண்டும் நிறுவுவதற்குரிய முறையான அனுமதியை பேரவை வழங்கியது. முன்னர் அமைக்கப்பட்டிருந்த தூபி யாழ். பல்கலைக்கழக நிர்வாகத் தரப்பு அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆகியவற்றின் முறையான அனுமதியின்றிக் கட்டப்பட்டிருந்தது. இதனைக் காரணமாகக்காட்டி, சட்டத்திற்கு முரணான அந்தக் கட்டுமானத்தை அகற்றவேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

 

Leave a Reply