Home செய்திகள் முல்லைத்தீவு குமுளமுனை ஆண்டான்குளம் கிராமத்தை சேர்ந்த மக்களை வனஜீவராசிகள் திணைக்களம் அச்சுறுத்தி கைது

முல்லைத்தீவு குமுளமுனை ஆண்டான்குளம் கிராமத்தை சேர்ந்த மக்களை வனஜீவராசிகள் திணைக்களம் அச்சுறுத்தி கைது

முல்லைத்தீவு குமுளமுனை ஆண்டான்குளம் கிராமத்தை சேர்ந்த மக்களை  வனஜீவராசிகள் திணைக்களம் அச்சுறுத்தி கைது செய்த சம்பவம்  இடம்பெற்றுள்ளது. 
தமது பூர்வீக காணிகளில் அபிவிருத்தி வேலைகளை செய்து குடியேறுவதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மேற்கொண்டு வந்த நிலையில் வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் இராணுவம், வன திணைக்களம் இணைந்து மக்களுக்கு தடை ஏற்படுத்தியுள்ளதோடு குடும்ப பெண்ணொருவரை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி தாக்க முற்பட்டுள்ளதோடு  ஒருவரை கைது செய்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
IMG 20210326 WA0181 முல்லைத்தீவு குமுளமுனை ஆண்டான்குளம் கிராமத்தை சேர்ந்த மக்களை வனஜீவராசிகள் திணைக்களம் அச்சுறுத்தி கைது
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குடும்பஸ்தரின் மனைவி நந்தினிதேவி நடந்த சம்பவத்தை பற்றி இவ்வாறு கூறினார்,
கடந்த 1984 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் தமது கிராமத்தை விட்டு குமுளமுனை ஆண்டான்குளம் கிராம மக்கள் விரட்டி அடிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வேறு பகுதிகளில் 30 வருடங்களுக்கும் மேலாக வசித்து வந்த நிலையில் மீண்டும் போருக்கு பின்னர் எமது கிராமம் மீள்குடியேற்றம் செய்த போதிலும் அங்கு சென்று குடியேறவோ தற்காலிக வீடுகளை அமைத்து குடியேறவோ இராணுவம் வன திணைக்களம் என்பன தடைகளை ஏற்படுத்தி வந்தனர்.
இருந்த போதிலும் எமது சொந்த  பூர்வீக  கிராமத்துக்கு சென்று காணிகளை சுத்தம் செய்து தற்காலிகமாக வீடுகளை அமைத்து குடியேற தற்போது தயாராகிவந்த நிலையில் இராணுவம் வன ஜீவராசிகள் திணைக்களம் இணைந்து எமக்கு தடைகளை விதித்து எனது கணவரை பலவந்தமாக கைது செய்து கொண்டு சென்று வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இராணுவம், காவல்துறை, வனஜீவராசிகள் திணைக்களத்தினர் வருகைதந்து காணியில் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த எம்மை அச்சுறுத்தி கட்டாயமாக தற்காலிக வீட்டின் உள்ளே இருந்த பொருட்களை   எடுத்து சென்றதோடு எனது கணவரையும் இன்னொருவரையும் கைது செய்து கொண்டு சென்றனர். உடனடியாக காணியை விட்டு வெளியேறவேண்டும் இங்கு யாரும் குடியமர நினைக்கக்கூடாது என அச்சுறுத்தி தனிமையில் எனது கணவரோடு பெண்ணாக இருந்த என்னை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி தாக்க வந்தார்.
1984 ஆம் ஆண்டு எனக்கு 12 வயதாக இருக்கும்போது எமது கிராமத்தில் உள்ள வீடுகள் அனைத்துக்கும் நெருப்புவைத்து எம்மை இராணுவம் விரட்டி அடித்தது நாங்கள் எந்தவித ஆவணங்களையும் எடுத்து செல்லாது அயல்கிராமத்துக்கு சென்று குடியேறினோம். அன்றிலிருந்து வேறு கிராமங்களில் அகதியாக வாழ்கிறோம். இந்த ஊரில் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்ததற்கான ஆதாரமாக அடையாள அட்டை கூட இதே ஊரின் பெயரில் எம்மிடம் இருக்கிறது .இருந்த போதிலும்  எமது சொந்த ஊருக்கு வருவதற்கு திட்டமிட்டு எமக்கு தடை ஏற்படுத்த படுகின்றது. என தெரிவித்தார்.
இந்த சம்பவத்துக்கு பின்னர் அப்பகுதிக்கு வருகைதந்த கரைதுறைப்பற்று காணிப்பகுதி அதிகாரிகள் எதிர்வரும் 14 நாட்களுக்கு எந்தவிதமான அபிவிருத்தி வேலைகளிலும் கிராம மக்களை ஈடுபடவேண்டாம் எனவும் இங்கு மக்களின் காணிகள் தொடர்பாக அடையாளம் காண்பித்த பின்னர் வேலைகளை செய்யலாம் என கூறி சென்றுள்ளனர் என கிராம மக்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்றையதினம் குறித்த பகுதிக்கு வருகைதந்த இராணுவம் ,காவல்துறை ,புலனாய்வாளர்கள் மக்களின் ஆவணக்களை வாங்கி பதிவு செய்யும் வேளைகளில் ஈடுபட்டதோடு விபரங்களையும் பதிந்து கொண்டனர்.
Exit mobile version