11.08.2024 ஆங்கில இந்து நாளேட்டில் (பக்.14) நோபல் பரிசுப் பெற்ற பொருளியல் அறிஞர் ஜோசப் ஸ்டிக்லிசின் நேர்காணல் வெளியிடப்பட்டது. நேர்காணலை எடுத்த திரு.பிரசாந்த பெருமாள் எழுப்பிய நான்கு கேள்விகளுக்கு ஸ்டிக்லிசு விடையளித்துள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளில் உலகமயமாக்கல் பற்றியும், சந்தைப் பொருளாதாரம் ஒரு சார்பாக இயங்குவது பற்றியும் ஏழு நூல்களை ஸடிக்லிசு எழுதியுள்ளார்.
இந்நூல்களில் வளர்கின்ற நாடுகளி லிருந்து வளர்ந்த நாடுகள் இயற்கை வளங்களைச் சுரண்டுவதால், சுற்றுச்சூழலும் வளர்கின்ற நாடுகளின் மக்களும் பெரிதும் பாதிக் கப்படுகின்றனர் என்ற கருத்தை வழங்கியுள்ளார்.
தனது (Free-fall – Free Markets and Sinking of the Global Economy) ‘தடையற்ற வீழ்ச்சி’ என்ற நூலில், “வாஷிங்டன் கொள்கைத் திட்டமும், அதன் தொடர்பான அதிதீவிர சந்தைப் பொரு ளாதாரமும் இறந்துவிட்டன. இதற்கு முன்பு வளர்ந்த நாடுகளுக்கும், வளர்கின்ற நாடுகளுக்கும் சரிசமமான போட்டி போன்ற கருத்து விவாதம் முற்றுப் பெற்றுவிட்டது. பணக்கார நாடுகள் தங்கள் நாடுகளின் தனியார் நிறுவனங்களை எவ்வகையில் காப்பாற்ற முயற்சிக்கின்றனவோ, அதே கொள்கையை ஏழை நாடுகள் பின்பற்ற முடியாது. மோசமான முறையில் மேலாண்மை செய்யப்பட்ட உலகமயமாதல் இடர்களை இந்த நாடுகள் உணர்ந்துவிட்டன” என்று குறிப் பிட்டுள்ளார்.
“சமத்துவமின்மையின் விலை – இன்றைய சமூகம் எவ்வாறு நமது எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறது” (The Price of Inequality – How today’s divided Society Endangers our Future),என்ற நூலில் ஸ்டிக்லிட்சு, “அமெரிக்காவின் அரசியலமைப்பு பணக்காரர்கள் பக்கம் சாய்ந்துவிட்டது. அதனால் ஏற்றத்தாழ்வுகள் பெருமளவில் பெருகியுள்ளன.” அமெரிக்காவின் ஒரு விழுக்காட்டு மக்களின் நலனிற்காக ஒரு விழுக்காட்டினர் ஆட்டிப் படைக்கின்ற, ஒரு விழுக்காட்டினரின் ஆட்சிதான் நடக்கின்றது என்றும் சுட்டியுள்ளார்.
இத்தகைய முதலாளித்துவ விமர்சனக் கருத்துக்கொண்ட ஸ்டிக்லிட்சு, இந்து நாளி தழுக்கு அளித்த பேட்டியில்,முற்போக்கு முத லாளித்துவத்தைப் பின்பற்றுவதற்குப் பெரும் வாய்ப்புகள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளது நகைச்சுவைதானோ என்று எண்ணம் தோன்றுகிறது.
‘ஓநாய்களின் சுதந்திரம் என்பது ஆடுகளின் மரணம்தான்’ என்ற தத்துவ அறிஞரான இசைய்யா பெர்லின் கருத்தை மேற்கோள் காட்டியுள்ளார்.
மேலும், ‘ஏழைகளின் செலவில்தான் பணக்காரர்கள் பலனடைகின்றனர்’ என்ற கருத்தையும் கூறியுள்ளார். இதே போன்று மற்றொரு கேள்விக் கான பதிலில்,
‘தீவிரமான முதலாளித்துவ அமைப்பு முறையில் அதிக அளவிற்கு ஏற்றத்தாழ்வுகளும், சுரண்டலும், முற்றுரிமை அதிகாரமும், பொரு ளாதார நிறையற்றத்தன்மையும், சுற்றுச்சூழல் பாதிப்பும் மோசமாகவே இருக்கும் என்ற கருத்தைக் குறிப்பிடுகிறார். சந்தைப் பொருளாதாரம் சரியான போட்டியில் அமையாது என்ற கூறுவதும், அது பாடத்திட்டத்தில் உள்ள ஏட்டுக்சுரைக்காய் போன்றது என்ற கேள்விக்கு, “நமது சந்தையில் போட்டியுள்ளது. கூகுள் மைக்ரோசாப்ட், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் போட்டித்தன்மையில்தான் செயல் படுகின்றன என்றும் குறிப்பிட்டு விட்டு,“சந்தையில் போட்டித்தன்மையில் ஏற்படும் சிறிதளவு சரிவு கூட பொருளாதாரத்தில் திறமையற்றத் தன்மையும், பெருமளவிலான சுரண்டலுக்கு வழிவகுத்து விடும்” என்று குறிப்பிடுகிறார்.
முற்போக்கான முதலாளித்துவம் இந்தியாவிற்கு எவ்வகையில் பொருத்தமாக அமையும் என்ற கேள்விக்கு ஸ்டிக்லிட்சு, “இந்தியா பெரு மளவிற்குத் தாராளமயமாக்கல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நிதித்துறையில் தாராள மயமாக்கல் உள்ளது. ஆனால் சுகாதாரம்,வீட்டு வசதி போன்ற துறைகளில் உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை. தங்களது நியாயமான வரிப் பங்கினை அரசிற்குச் செலுத்தாத பெரும் கோடீசுவரர்கள் உருவாக அரசு வழிவகுத்துள்ளது. எனவே, நான் கூறுகின்ற முற்போக்கான முதலா ளித்துவம் வளர்வதற்கு வாய்ப்புள்ளது” என்று பதிலளித்துள்ளார்.
இந்தக் கேள்வி பதில்களில் பெரும் முரண் பாடுகள் உள்ளன. 2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மட்டும் வேலையில்லா இளைஞர்களின் எண்ணிக்கை 9 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்று இந்தியப் பொருளாதாரக் கள ஆய்வு மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இது கடந்த 8 ஆண்டுகளில் காணப்படாத வேலையின்மையின் அளவாகும். உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் திட்டங்கள் பெரும் தோல்வியைத் தழுவி வரு கின்றன என்பதற்கான புள்ளிவிவரங்களை 2023ஆம் ஆண்டின் உலக முதலீட்டு அறிக்கையில் சுட்டப்பட்டுள்ளது.
உலகமயமாக்கல் திட்டத்தை நடைமுறைப் படுத்திய 1990ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டு முதலீடு 0.1 விழுக்காடாக இருந்தது. 2020ஆம் ஆண்டில் 6.5 விழுக்காடாக உயர்ந்தது.ஆனால் இத்தகைய முதலீடுகளைப் பெறு வதற்காக ஒன்றிய அரசு அளித்த நேர்முக, மறைமுக வரிச்சலுகைகளைக் கணக்கிட்டால் பல இலட்சம் கோடி ரூபாய்களைத் தாண்டும்.
இவற்றைத் தவிரப் பன்னாட்டுப் பெரு நிறுவனங்களுக்காக அளிக்கப்பட்ட நிலங்கள், மின் இணைப்பு, சாலை வசதி, நீர் வழங்கல் போன்ற அடிப்படை வசதிகளை வழங்குவதற்கு அரசு பல இலட்சம் கோடிகளை இழந்துள்ளது.
இத்தகைய இழப்புகளுக்குப் பிறகு வெளிநாட்டு முதலீடுகள் கடந்த பத்தாண்டுகளில் படிப்படியாகக் குறைந்தே வருகிறது. உலக முதலீட்டு அறிக்கையின்படி வெளிநாட்டு முதலீடு 2023ஆம் ஆண்டில் 2.2 விழுக் காடாகச் சரிந்துள்ளது.
இதைத் தவிர வெளிநாட்டு முதலீடுகள் இருப்பிலும் இந்தியா பெரும் சரிவினை நோக்கி பயணம் செய்கிறது. வெளிநாட்டு முதலீடுகள் இருப்பில் (Foreign direct investment stock) நெதர்லாந்து, 5.5. விழுக்காடு, சிங்கப்பூர் 5.4 விழுக்காடு, ஆனால், இந்தியாவின் வெளிநாட்டு முதலீடு இருப்பு 1.1. விழுக்காடே ஆகும்.
உள்நாட்டு வெளிநாட்டு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகளைத் தொடர்ந்து ஒன்றிய அரசு வாரி வழங்கி வருகிறது. சான்றாக, நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் நேர்முக வரியைப் (Corporation Income Tax) புதிதாகத் தொடங்கும் நிறுவனங்களுக்கு 22 விழுக்காட்டிலிருந்து 15 விழுக்காடாக ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019ஆம் ஆண்டில் குறைத்தார்.
இதன் காரணமாக, 2023-24ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த வருமான வரி வருவாய் 10 விழுக் காடாகக் குறைந்துள்ளது. பல இலட்சம் கோடி வரிச்சலுகைகளை அளித்த பிறகும் புதிய முதலீடுகளைப் பெற இயலவில்லை என்பதற்கு இது சரியான சான்றாகும்.
அதே நேரத்தில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அரசு, தனி ஊழியர்கள் ஆகி யோர் வருமான வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கையும் வரு மான வரி வழியாக வந்த வருவாயும் ஒன்றிய அரசிற்கு அதிகரித்துள்ளது.
இந்த நடுத்தர வருமானப் பிரிவினரின் எண்ணிக்கை 2013-14 முதல் 2022-23 வரை 3.6 கோடியிலிருந்து 7.5 கோடி அளவிற்கு உயர்ந்துள்ளது. ஏழை நடுத்தர வருமானப் பிரிவினரின் குடும்பச் சேமிப்பு 2021ஆம் ஆண்டில் 34 இலட்சம் கோடியாகும். 2023இல் குடும்பச் சேமிப்பு அளவு 17 இலட்சம் கோடியாக இந்தியாவில் சரிந்துள்ளது.
இதே காலகட்டத்தில், 2023இல் ஏழை நடுத்தரப் பிரிவினரின் கடன் 47 இலட்சம் கோடி யாக உயர்ந்துள்ளது. 2024இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகுச் சென்ற மாதம் ஒன்றிய அரசு அளித்த நிதிநிலை அறிக்கையில் சுகாதாரம், கல்வி போன்ற மானுட வளத்தைப் பெருக்கும் துறைகளுக்கு நிதியளவு குறைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால் ஸ்டிக்லிட்சு எதை முற்போக்குப் பொருளாதாரம் என்று அழைக்கிறார்? ஸ்டிக்லிட்சு நேர்காணலில் குறிப் பிட்ட தீவிர முதலாளித்துவத்தைவிட இந்தியாவில் கொடுங் கோன்மையான பொருளாதாரம் தான் தற்போது இயங்கி வருகிறது. நிதி நிறு வனங்களின் மோசடி, பங்குச் சந்தையில் மோசடி, அரசு வங்கிகளில் பெற்ற கடன்களைத் திருப்பியளிக்காமல் முதலாளிகள் செய்யும் மோசடிகளைத்தான் முற் போக்கு முதலாளித்துவம் என்று ஸ்டிக்லிட்சு குறிப்பிடுகிறார்.
இந்தியாவில் நடைமுறையில் நாம் காண்பது மோசடி முதலாளித்துவம்.ஒரு வேளை மோசடி முதலாளித்துவத்தைத் தான் முற்போக்கு முதலாளித்துவம் என்று ஸ்டிக்கிலிசு கூறுகிறாரா?ஒன்று மட்டும் உண்மை- 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கடன் அளவு நாட்டு ஓட்டு மொத்த வருமானத்தை விட 100 விழுக்காடு கடந்து விட்டது.
கடன் மட்டும் பெருகவில்லை விலை உயர்வு, வேலையின்மை, மக்களிடம் வருமான, செல்வ ஏற்றத் தாழ்வு ஆகியன பெருகி, அமெரிக் கப் பொருளாதாரம் 1930களில் ஏற்பட்ட பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இத்தகைய போக்கினையும் முற்போக்கு முதலாளித்துவம் என்று ஸ்டிக்கிலிசு அழைப்பாரா?