Tamil News
Home ஆய்வுகள் முருகன் வள்ளியை சந்தித்த கபிலித்தை என்ற வனம் நோக்கிய பயணம்-பகுதி 2

முருகன் வள்ளியை சந்தித்த கபிலித்தை என்ற வனம் நோக்கிய பயணம்-பகுதி 2

தற்போது மாலை 4 மணி ஆகி விட்டது. மதியச்  சாப்பாட்டை சாபிட்டோம். கொண்டுவந்த நீர் முழுவதையும் வரும் வழியிலேயே குடித்து முடித்து விட்டோம். இனி நீர் தேவை எனின், ஆற்றில் பூவல் தோண்டி அதில் இருந்து தான் எடுக்க வேண்டும்.

சாப்பிட்டுவிட்டு 4.45 மணியளவில் ஆதிவாசிகளின் சம்பிரதாயங்களை நாமும் கடைப்பிடிக்க தயாரானோம். அனுபவம் வாய்ந்த திருச்செல்வம் ஐயா எமக்கு அனைத்துக்கும் வழிகாட்டியாக இருந்தார்.

ஆதிவாசிகளின் சடங்கு என்றால், இலை குழைகளை கட்டிக்கொண்டு தான் இருந்திருப்போம் என்று நினைக்க வேண்டாம். காலத்துக்கேற்ப மாற்றம் தேவை தானே எனினும் பழமையையும் விட்டுவிட முடியாது.

குமுக்கன் ஆற்றின் கரையோரத்தில் 7 வட்ட வடிவமான கிணறுகளை தோண்டினோம். அவை ஒவ்வொன்றும் அண்ணளவாக 1 1/2 அடி அகலமும் 10-15 சென்ரி மீட்டர் ஆழமுமாக இருந்தன.

ஒவ்வொரு கிணற்றினுள்ளும் மஞ்சள் தூள், 7 வர்ண பூக்கள் இட்டு 7 தடவைகள் ஒவ்வொரு கிணற்றிலும் நீராட வேண்டும். அப்படி தோண்டிய 7 கிணற்றினுள்ளும் மொத்தமாக 49 தடவை நீராடிய பின்னர் குமுக்கன் ஆற்றில் இறங்கி நீராட வேண்டும்.

பின்னர் வீரபாகு தேவருக்கு முன்னே உள்ள பத்தினி அம்மன் கோவிலுக்கு ஈர உடையுடனே சென்று வழிபட வேண்டும். இது அவர்களது மரபு.

நாம் நீராடிய பின்னர் துடைத்து விட்டு உலர்ந்த வேட்டி அணிந்து கொண்டே பத்தினி அம்மன் கோவிலுக்கு சென்றோம். அங்கே சென்றதும் பெரியதொரு ஏமாற்றம். பத்தினி அம்மன் இருந்த இடத்தில் தற்போது புத்தர் சிலைகள் மட்டுமே வைக்கப்பட்டிருந்தது.

மனம் தளரவில்லை. அவ்விடத்தில் இருந்த புத்தபகவானை – பத்தினி அம்மனை(அம்மனாக) நினைத்தே வழிபட்டோம்.

குமுக்கன் ஆற்றில் ஆழமான பகுதிகளில் நீர் மட்டம் இடுப்பளவுக்கும் குறைவாகவே இருந்தது. பெரும்பாலான பகுதிகளில் பாதம் நனையும் அளவு நீர் தான் ஓடிக்கொண்டிருந்தது. காட்டில் எங்கேனும் மழை பெய்தால், நீரோட்டம் சில நிமிடங்களிலேயே உச்சத்தை அடையலாம் எனவும் கூறப்பட்டது.

இங்கு வழிபாடுகளை முடிக்கும் போதே மணி 6.15 ஆனது அவசர அவசரமாக குமுக்கன் ஆற்றை கடந்து முருகனின் புனித வனத்துக்குள் செல்ல முயன்ற போது, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் எமக்கு வனத்துக்குள் செல்ல அனுமதி வழங்க முடியாது என கூறினர்.

வன விலங்குகள் நடமாட்டம் நேரம் செல்லச் செல்ல அதிகமாகிவிடும். அங்கே எமக்கு பாதுகாப்பு இல்லை என அந்த அதிகாரி கூறினார். நாம் 10 மணி நேரத்துக்கு அதிகமாக பயணம் செய்து வந்துள்ளோம் என நிலைமையை அவருக்கு சிங்களத்தில் கூறினோம். பின்னர் 10 நிமிடம் மட்டுமே அனுமதி தந்தனர்.

வழக்கமாக சிங்கள மக்கள் முதல் நாள் குமுக்கன் ஆற்றங்கரையோரம் வந்தடைந்தாலும் அன்றே புனித வனப்பகுதிக்குள் செல்வதில்லை. அடுத்த நாள் அதிகாலையிலேயே எழுந்து சம்பிரதாயங்களை முடித்துவிட்டு தான் புனித வனத்துக்குள் வருவார்கள்.

உள்ளே ஒற்றையடி பாதை போல் அல்லாது பாதை சற்று பெரிதாகவே இருந்தது. ஒரு ஜீப் வண்டி வந்து போகக் கூடிய அளவு பாதை. வனத்தின் நிலம் களிமண் தரை போன்றது. பாதையில் செல்லும் வழியெங்கும் பெரிய மரங்களின் வேர்கள் மேலெழும்பியபடியே மினுமினுப்பாக இருந்தது.

உதயன் ஐயாவும் குகன் ஐயாவும் அனைவரும் நீராட சென்று வந்த நேரத்துக்குள்ளே பிரசாதமாக வைக்க அவலையும் எடுத்துக்கொண்டு பயணத்தை தொடர்ந்தோம்.

இருட்டி விட்டது. மரங்களும் அடர்த்தியாக இருந்ததால், வெளிச்சம் சற்று குறைவாகவே இருக்கிறது. தூரத்தில் முருகன் சிலைகள் வெளிச்சமாக தெரிவதால் வந்து விட்டோம் என அருகில் செல்கிறோம்.

சிங்களத்தில் யாரையோ ஒருவர் அதட்டிக் கொண்டிருக்கும் பாணியில் சத்தம் கேட்கிறது. திடீரென எமக்கு ஒரு கறுப்பு உருவம் தெரிகிறது. பயமாக தான் இருந்தது. என்றாலும் நாம் எதிர்பார்த்தது தான் நடந்துகொண்டிருக்கிறது. கபிலித்தையின் பிரதான காவல் காரன் அவர் தான். அவரது கண்களை நாம் அண்ணார்ந்து தான் பார்க்க வேண்டும் அவ்வளவு பெரியவர்.

கையில் ஒரு மெல்லிய கம்பு ஒன்று தான் இருந்தது. கம்பின் உயரம் 6 -7 அடிகள் இருக்கும் முனைப்பகுதி சற்று கூராக இருந்தது. அங்கு நின்ற யானை ஒன்றை துரத்துவதற்கே அவர் அவ்வாறு சத்தம் போட்டார். நாம் அப்போது நின்றுகொண்டிருந்த இடம் சற்று வெளியான பகுதி (மரங்கள் சுற்றி வட்ட வடிவமாக உள்ளது) நடுவில் பெரிய களியால் செய்யப்பட்ட விளக்கு ஒளிர்ந்துகொண்டிருந்தது. பெரியதொரு பிள்ளையார் சிலை கறுப்பு நிறத்தில் இருந்தது. சந்தனக் குச்சிகளின் வாசனை காட்டின் வாசனையுடன் கலந்து மனதை மயக்கியது. எமக்கு நேராக வட்ட வடிவத்தில் கம்பிகளால் காவலிடப்பட்டவாறு மிகவும் பாதுகாப்பாக கருங்கல் முருகன் சிலை ஒன்று இருந்தது. அந்த சிலை 1 1/4 அடி உயரம் இருக்கும்.

கம்பி அடித்திருந்த இடமெல்லாம் மக்கள் நேர்த்திக்கடனாக கொண்டு வந்த வேல்களும் , சிவப்பு வெள்ளை என துணிகளால் கட்டப்பட்ட காசுகளும் நிரம்பி காணப்பட்டது.

அந்த கம்பி அடிக்கப்பட்ட இடத்தினை மையமாக வைத்து சுற்றிவர சில முருகன், பிள்ளையார் சிலைகளும், உடைந்த லிங்கம் ஒன்றின் மேற்பகுதியும், ஒரு மரத்தினால் செய்யப்பட்ட சிலையும், சீமெந்தினால் செய்யப்பட்ட சிலையும் இருந்தது. (இவற்றின் பெயர் என்னவென்று தெரியவில்லை).

தேங்காய் உடைப்பதற்கெனவும் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டு, உடைக்கும் தேங்காய் வெளியே தெறிக்காமல் இருப்பதற்காக மரப்பலகையால் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சற்று நேரம் பயத்துடன் அந்த இடத்தில் நின்றவாறு, கொண்டு வந்த பிரசாதத்தையும் அங்கே இருந்த பீடத்தில் வைத்து வணங்கும் போது தான் திருச்செல்வம் ஐயா, “நாம் பார்க்க வந்த இடம் இது அல்ல இன்னும் சற்று தூரம் செல்ல வேண்டும்” என்று கூறினார்;

மேலும் யானை அந்த இடத்தில் இருந்து நகர்ந்தால்தான் உள்ளே செல்ல முடியும் என்றார். சிறிது நேரத்தில் யானையும் சற்று நகர்ந்து வழிவிட்டது. அந்தவொரு சிறிய கணநேர இடைவெளிக்குள் நாம் சிலபேர் உள்ள சென்றுவிட்டோம். யானை மீண்டும் பாதையை அடைத்து விட்டது.

இதுவரை இல்லாத அமைதியை இப்போது எங்களால் உணர முடிந்தது. இந்த இடத்தில் யாருமே கதைக்கக்கூடாது என திருச்செல்வம் ஐயா கூறியதற்கிணங்க அனைவரும் அமைதியாக முருகனும், வள்ளியும் சந்தித்த அந்த புளியமரத்தினை வந்தடைந்தோம்.

வருபவர்கள் எல்லோரும் மரத்தினை தொடுவதை தவிர்ப்பதற்காக ஒற்றை கம்பியினால் வேலி போன்ற அமைப்பினை ஏற்படுத்தியிருந்தனர். உள்ளே செல்ல தான் வேணும் என நினைப்பவர்களுக்கு அது ஒன்றும் தடை இல்லை. எனினும் புனிதத்தன்மையை பேணுவதற்கு ஒத்துழைக்க வேண்டியது அனைவரதும் கடமையே.

இந்த மரத்தில் தான் கபிலித்தையில் மிகவும் பழைமையான ஆதிவாசிகள் வைத்து வணங்கிய மரத்தினால் செய்யப்பட்ட முருகன் சிலை உள்ளது. ஒரு ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக இருக்கிறது. அதை பாத்தாலே மனதுக்கு சந்தோசமாக தான் இருந்தது. இத்தனை துன்பங்களையும் தாங்கிக்கொண்டு வந்தது இந்த இடத்தினை பார்க்கத்தானே..

பயணம் தொடரும்….

– மட்டுநகர் திவா-

Exit mobile version