முரண்பாடுகளை விடுத்து தேசமாக ஒன்றிணைவோம் – மட்டு.நகரான்

தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினை வேந்தல் வடக்கு கிழக்கில் உணர்வு பூர் வமாக அனுஸ்டிக்கப்பட்டது. ஒரு வைத்தியராகயிருந்து பல்வேறு வசதிகளுடன் தனது குடும்பத்தினையும் தனது உறவுகளையும் கவனித்துக்கொண்டு சுகபோகத்துடன் வாழா மல் தனது இனத்திற்காக வாழ்ந்து அந்த இனத்திற்காகவே மடிந்த ஒரு போராளியாக மட்டுமல்லாமல் ஒரு தியாகத்தின் முழு உருவமாக அவரை பார்க்கின்றோம்.

அதேபோன்று அந்த இனத்திற்காக உடம்பில் குண்டுகளை பொருத்திக்கொண்டு எதிரி மீது பாய்ந்து தமது இனம் என்றாவது விடுதலையடையும் என்ற கனவுடன் காவிய மான ஆயிரமாயிரம் கரும்புலிகளையும் போராளிகளையும் எங்கள் விடுதலைக்காக ஆகுதியாக்கி யதை நாங்கள் காண்கின்றோம்.

இவ்வாறான தியாகங்களை கடந்து எமது விடுதலைப்போராட்டத்தினை இன்று நாங்கள் எவ்வாறு நோக்குகின்றோம் என்பதை அனைவரும் ஒரு கணம் சிந்திக்கவேண்டிய நிலை யிலிருக்கின்றோம். இன்று தமிழர்களுக்கு கிடைத்துள்ள இறுதி சந்தர்ப்பமாக இதனை பார்க்கின்றேன்.வெறுமனே தமிழர்கள் அபிவிருத்திக்காகவும் வேலைவாய்ப்புக்காகவும் சோத்துக்காகவும் இந்த நாட்டில் போராடவில்லையென்பதை தமிழர்கள் ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ளவேண்டும். தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்படும் இந்நாளில் தமிழர்கள் தீர்க்கமான அரசியல் முன்னெடுப்புகளை செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளது.

தமிழ் தேசிய அரசியல்தான் தமிழர்களின் பலம்.தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் அரசியல்ரீதியான போராட்டம் இராஜதந்திரரீதியில் முன்னெடுக்கப் பட்டுவருவதாக கூறப்பட்டாலும் வடக்கு  கிழக்கினைப் பொறுத்த வரையில் நிராகரிக் கப்பட்ட அரசியலாகவும் தோல்வி அடைந்த அரசியலாகவுமே தமிழ் தேசிய அரசியல் இருந்து வருகின்றது.

வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தினைப் பொறுத்த வரையில் தமிழ் தேசியம் சார்ந்த சிவில் சமூக கட்டமைப்புகள் இன்றுவரையில் பலம்பெறாத நிலையில் தமிழ் தேசிய அரசியலை மட்டுமே நம்பவேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளோம். அதன்காரணமாகவே தமிழ் தேசிய அரசியலானது இன்று வாக்கு அரசி யலாக மாற்றம் பெற்றிருக்கின்றது. அண்மையில் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பும் கிழக்கு மாகாணத்தில் எந்தளவுக்கு உறுதியாக நிற்கின்றது என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

அதிலும் அந்த கட்டமைப்பில் உள்ளவர்கள் எத்தனைபேர் தமிழர் தாயகப்பகுதியில் சமூக மயப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுக்கிறார்கள்? அல்லது சமூகத்துடன் இணைந்து செயற்படுகின்றார்கள் என்பது கவலைக்குரியதாகவேயிருக்கின்றது.

இவ்வாறான நிலையிலேயே தற்போது இலங்கையில் ஒரு அரசியல் மாற்றம் ஏற் பட்டுள்ளது.இந்த அரசியல் மாற்றம் தொடர்பில் தமிழர் பகுதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில் நாங்கள் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானதாகவே கருதவேண்டியுள்ளது. இந்த நாட்டில் மாறிமாறிவந்த ஆட்சியாளர்களை துரத்தியடித்து புதிய ஆட்சியாளர் ஒருவரை சிங்கள சமூகம் முன் கொண்டுவந்துள்ளது.

இந்த ஆட்சியாளரை சிங்கள சமூகம் மாற்றமாக கொண்டு வந்துள்ளது.அதாவது சிங்கள தேசத்தில் நடந்த ஊழல்கள் நிறைந்த ஆட்சியை மாற்றவேண்டும் என்ற நோக்கில் சிங்கள தேசம் இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ள நிலையில், இந்த மாற்றத்தினை தமிழர் தேசம் தமக்கான விடிவாக கொள்ளமுடியுமா என்றால் அது இல்லையென்றே நாங்கள் கருதவேண்டியுள்ளது.

இந்த நாட்டினை பொறுத்தவரையில் எந்த சிங்கள கட்சியும் தமிழர்களின் உரிமை தொடர்பான கோரிக்கையினை ஏற்றுக்கொண்டதாக வரலாறு இல்லை.சொந்த இனத் திற்குள்ளேயே கிளர்ச்சிசெய்து இடதுசாரி கொள்கையுடன் பயணிப்பதாக கூறும் அன்று மக்கள் விடுதலை முன்னணியாகவும் இன்று தேசிய மக்கள் சக்தியாகவும் உள்ள கட்சியானது வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தில் தமிழர்கள் சகல உரிமைகளுடனும் நிம்மதியாகவும் வாழ வேண்டும்   என்றும் கூறியதில்லை. மாறாக கடந்த காலத்தில் தமிழர்களின் போராட்டத்தினை அடக்கு வதற்கு இலங்கை சிங்கள அரசுகளுக்கு தொடர்ந்து உதவியே வந்திருக்கின்றது.

இன்றைய தேசிய மக்கள் சக்தியிடம் இனவாதமில்லை,இந்த நாட்டு மக்களை ஒரே கண்ணுடன் நோக்குகின்றார்கள் என்று கூறுகின்ற போதிலும் தாங்கள் பதவியேற்ற காலத்தில் இந்த நாட்டில் அவர்களின் நிலைப்பாடு ஆளுநர் நியமனத்தில் வெளிவந்துள்ளது. கடந்த ஆட்சியில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது பெயருக்காவது வடக்கு கிழக்கில் தமிழ் ஆளுநர்களை நியமித்து தமிழர்களுக்கான உரிமை தொடர்பில்  வெளிப்படுத்தியிருந்தார்.

ஆனால் தேசிய மக்கள் சக்தியின் ஆளு நர் நியமனத்தில் வடக்குக்கு தமிழரையும் கிழக்கிற்கு ஒரு சிங்களவரையும் நியமித்து கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களுக்கான அங்கீகாரத்தினை வழங்கும் செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளது.

இதனை நாங்கள் சாதாரணமாக கடந்து செல்ல முடியாது.சிறுபான்மை மக்கள் பெரும் பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் ஒருவரை கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கமுடியாத ஜனாதிபதியா வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தில்  எவ்வாறு தமிழர்களுக்கு தீர்வினை தரப்போகின்றார்.

தேசிய மக்கள் சக்தியை தமிழர்களின் மீட்பர்கள்போன்று பார்க்கும் நிலை இன்று தமிழர் கள் தாயகத்தில் ஏற்பட்டுள்ளது.இந்த நிலைமையானது பெரும் ஆபத்தாக தமிழ் தேசத்தில் மாறும் முன்பாக அதற்கான மாற்றுவழியை மேற்கொள்ளவேண்டிய பாரிய பொறுப்பு தமிழர் தேசத்தில் உள்ள அனைத்து தமிழ் தேசிய சக்திக்கும் இருக்கின்றது.

தனக்கு கிடைத்துள்ள வாய்ப்பினை பயன்படுத்தி வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய அரசியலையும் இல்லாமல்செய்யும் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றதா? என்ற சந்தே கம் தற்போது எழுந்துள்ளது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் பகுதிகளில் புத்தி ஜீவிகளை களமிறக்கி தமிழ் தேசிய அரசியலை சிதைப்பதற்கான  திட்டமிட்ட பணிகள் முன் னெடுக்கப்படுகின்றன.

அதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக் கப்பட்டுள்ளன.மறுபுறத்தில் தமிழ் தேசிய அரசியல் பரப்பில் உள்ள கட்சிகளும் பொதுக்கட்டமைப்பும் தங்களுக்குள் மோதிக்கொண்டு தமிழர் அரசி யலை சிதைப்பதற்கான நடவடிக்கைகளை முன் னெடுத்துவருகின்றன.

இவ்வாறான நிலையென்பது தமிழர்களின் அரசியலை கேள்விக்குட்படுத்தும் செயற்பாடுகள்.  தமிழர்களின் அரசியல் என்பது சிங்கள் கட்சிகளை நோக்கிச் செல்லுமானால் வடக்கு கிழக்கில் தமிழர்களின் இருப்பினை பாதுகாக்கமுடியாது கைகட்டி வேடிக்கைபார்க்கும் நிலைமையினை தோற்றுவிக்கும்.

சிங்கள தேசம் இன்று தன்னை பலமானதாக காட்டிக்கொள்ளும் நிலையில் தமிழர் தேசம் தன்னை பலவீனப்படுத்திக்கொண்டு நிற்குமானால் அது தமிழர்களின் இருப்பினை அழிப்பதற்கு சாத்தியமான நிலையினை ஏற்படுத்திக்கொடுக்கும் என்பதை அனைவரும் உணரவேண்டும்.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தேய்ந்து வரும் தமிழ் தேசிய அரசியலை முன்னிறுத்தி தமிழர்களின் அரசியல் போராட்டத்தினை வேகத்துடன் முன்னெடுக்கவேண்டிய தேவை ஒன்று எழுந்துள்ளது. கிழக்கில் முரண்பட்டு நிற்கும் அனைத்து தமிழ் தேசிய அரசியல்வாதிகளையும் ஒன்றி ணைத்து முன்கொண்டுசெல்லவேண்டும். அதற் கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின் னம் என்பது வெறுமனே ஒரு கட்சிசார்ந்த அடையாளமாக நாங்கள் நோக்கவில்லை. தமிழர்களின் சுயநிர்ணயத்தின் அடையாளமாக நோக்கவேண்டியுள்ளது. அதன்காரணமாகவே தேசிய தலைவரினால் வீட்டுச்சின்னம் தெரிவுசெய்யப்பட்டு தமிழர்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டு அன்று தலைவருக்கு வேறு ஒரு சின்னத்தில் ஒரு கட்டமைப்பினை உருவாக்கும் பலம் இல்லாமல் இருக்கவில்லை. ஆனால் தமிழர்களின் உரிமைக்கான கோசத்தில் வீட்டின் பாகம் என்பது பிரிக்கமுடியாத ஒன்றாகயிருக் கின்றது. ஆனால் இன்று களைகள் நிரம்பிய நிலையில் தமிழ் தேசியத்தின் அரசியல் இருப்பினை இல்லாமல்செய்யும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. அந்தக் களைகள் களையப் பட்டு தமிழ் தேசிய அரசியல் வீட்டுச்சின்னத்தில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இதுவெறுமனே ஒரு அரசியல் கட்சிசார்ந்த பதிவல்ல. மாறாக ஒரு சமூகத்தின் இன்றைய தேவை நோக்கிய அரசியல் தேவைப்பாட்டினை கூறவேண்டிய பொறுப்பு எங்களுக்கும் உள்ளது.

இன்று நாங்கள் வேறு சின்னத்தில் வேறுவிதமான செயற்பாடுகளை முன்னெடுப் பதானது எதிர்காலத்தில் தமிழர்களின் வடக்கு  கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமைக்கான எமது கோரிக்கையினை வலுவிழக்கச்செய்யும் என்பது இன்று வடக்கு கிழக்கு மக்களின் மனநிலையினை கொண்டு வெளிப்படுத்துகின்றேன்.

இன்று பொதுவேட்பாளருக்காக ஒன்றிணைந்த புலம்பெயர் அமைப்புகள் வீட்டுச் சின்னத்தின் கீழ் தமிழ் தேசிய கூட்டமைப்பாக அனைத்து தமிழ் தேசிய கட்சிகளையும் ஒருங் கிணைக்கவேண்டிய பொறுப்பு உள்ளது. அதற்கு அப்பால் வீட்டுச்சின்னம்,குத்துவிளக்கு,சங்கு,சைக்கிள் என பிரிந்து நிற்போமானால் கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரையில் எந்த தமிழ் தேசிய கட்சியும் வெல்லமுடியாத சூழ்நிலை  நூறு வீதம் காணப்படும். இதனை உணர்ந்துசெயற்பட அனைவரும் முன்வரவேண்டும்.