Tamil News
Home செய்திகள் முப்பது ஆண்டுகள் களத்திலேயே நின்ற பெரும் வரலாறு ஈழத் தமிழ் மக்களுக்குத் தான் உண்டு ...

முப்பது ஆண்டுகள் களத்திலேயே நின்ற பெரும் வரலாறு ஈழத் தமிழ் மக்களுக்குத் தான் உண்டு – பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் என் அன்பு வணக்கம். அந்த முள்ளிவாய்க்கால் துயரம் நடந்து 12 ஆண்டுகளை நாம் கடந்து விட்டோம். அது நம் போராட்டத்திற்கான ஒரு பின்னடைவுதான். அதே நேரத்தில் உலகில் எந்த ஒரு விடுதலைப் போராட்டமும் ஒரே நேர் கோட்டில் பயணித்ததில்லை. முன்னும் பின்னுமாகத் தான் அந்த நகர்வுகள் இருந்திருக்கின்றன. இருப்பினும் 2009 ஆம் ஆண்டு வரையில் ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் களத்திலேயே நின்ற பெரும் வரலாறு ஈழத் தமிழ் மக்களுக்குத் தான் உண்டு.  உலகில் வேறு எந்த விடுதலைப் போராட்டக் குழுவிற்கும் இல்லாத அளவுக்கு முப்படைகளையும் வைத்திருந்ததும் தமிழீழ விடுதலைப் புலிகள் தான். மூன்று தலைமுறை களத்தில் நிற்பது என்பது அத்தனை எளிதன்று. அத்தனை துயரங்களை சந்தித்து நேர்முகமாகக் கொண்டு வாழ்ந்த அந்த மக்கள் ஒரு பின்னடைவிற்கு போராட்டத்தில் ஆளானார்கள் என்பது வருத்தத்திற்குரியது.

இது ஈழ மக்களுக்கான துயரம் மட்டுமல்ல. உலகத் தமிழர்கள் அத்தனைபேருக்குமான துயரம். இந்தத் துயரங்கள், சோகங்கள் எல்லாம் சேர்ந்து தான் எந்த ஒரு இனத்தின் வரலாறாகவும் அமையும். எனவே ஈழ வரலாற்றில் இது ஒரு கட்டம். இது ஒரு பெரிய வரலாற்றுப் புள்ளி. இங்கிருந்தும் வரலாறுகள் மறுபடியும் தொடங்கும் தொடரும் ஒவ்வொரு அனுபவத்திலிருந்தும் நாம் கற்றுக் கொள்வதற்கு எவ்வளவோ இருக்கிறது. பொதுவாகச் செல்வார்கள் வெற்றியைப் பெற்றுக் கொள்ளலாம் தோல்வியிலிருந்து தான் கற்றுக்கொள்ள முடியும் என்று.  எனவே கற்றுக் கொள்வதற்கு ஏராளமாக இருக்கிறது இன்னமும் இந்த உலக நாடுகளினுடைய மௌனம் உடைத்தெறியப்படாமல் தான் இருக்கிறது.  அதற்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் தான் தங்களின் பணிகளை ஆற்ற வேண்டியிருக்கும்.

புலம்பெயர்ந்த தமிழர்கள், ஈழத் தமிழர்கள், உலகத் தமிழர்கள் என்று மூன்று வகை தமிழர்களும் ஒருங்கிணைந்து மறுபடியும் நம் உரிமைகளை மீட்டெடுக்க உறுதி கொள்கிற நாளாக இந்த நாளை நாம் எண்ணிப் பார்க்கலாம். இந்த முள்ளிவாய்க்கால் துயரத்தை அத்தனை எளிதில் எழுதிவிட முடியாது. அது எழுத்தில் அடங்காது.  சொற்களிலும் அடங்காது. ஒரு மாபெரும் துயரம். ஒரு இனத்தினுடைய வரலாற்றுத் துயரம். அதையும் கடந்து தான் நாம் இன்றைக்கு வந்து கொண்டிருக்கிறோம்

எனவே இந்த காலகட்டத்தில் நம்முடைய போராட்டங்கள் பல படிநிலைகளைக் கடந்து வந்திருக்கின்றன என்பதை உணர்ந்து   இதனை  எப்படி    மேலும் செழுமைப் படுத்துவது எப்படி செம்மைப் படுத்துவது எப்படி மக்களுக்கு பயன்படும் வகையில் செய்வது என்பதை எண்ணி முடிவெடுக்க வேண்டிய ஒரு கட்டாயம் நம் எல்லோருக்குமே இருக்கிறது. இந்த துயர நாளில் நாம் நினைவுகளை மறுபடியும் ஒரு முறை எண்ணிப் பார்க்கிறோம். வெறும் நினைவுகூருவதற்காக மட்டுமல்ல. எதிர்காலத்தை திட்டமிடுவதற்காகவுமே இந்த சந்திப்பு. இந்த சிந்தனை என்று கருத வேண்டி இருக்கிறது.

எனவே இந்த நாளில் நாம் அத்தனை பேரும் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் ஒருங்கிணைந்து ஒரே   சிந்தனையில் நின்று நம் தமிழீழ மக்களின் எதிர்கால வாழ்விற்கு, எதிர்கால உரிமைகளுக்கு திட்டமிட வேண்டும். அதற்கு உங்களோடு தமிழகத்தில் இருக்கிற நாங்களும் என்றும் கைகோர்த்து நிற்போம்.

 

 

Exit mobile version