முப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானம்!

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை மீள் பரிசீலனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போது இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை நிறுத்த கடற்படையின் உதவியைப் பெறுதல், வடக்கு மற்றும் கிழக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பான பிரச்சினைகள் போன்ற பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புடைய பல்வேறு பிரச்சினைகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.

அதன்படி, நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை ஜனாதிபதி வழங்கியுள்ளார். இதன்போது முப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளின் சில விபரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

குறித்த காணிகள் தொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட வேண்டும் என்பதால் இது தொடர்பான விசேட குழுவொன்றை நியமிக்குமாறும் இதன்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அனைத்து இராணுவ முகாம்களும் அமைந்துள்ள காணிகள் குறித்து மீளப் பரிசீலனை செய்து அறிக்கை ஒன்றினை வழங்குமாறு ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தியுள்ளார்.
அந்த அறிக்கை கிடைத்தவுடன் அதன் அடிப்படையில் மீண்டும் கலந்துரையாடல் நடாத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.