முடிவுக்கு வருமா ரஷ்யா உக்ரைன் போர்: அதிபர் புதினுடன் ட்ரம்ப் பேச்சு!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இந்த உரையாடலின்போது உக்ரைன் போரை மேலும் தீவிரப்படுத்த வேண்டாம் என அவர் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. புளோரிடாவில் உள்ள லாகோ எஸ்டேட்டில் இருந்து ட்ரம்ப், புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அண்மையில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் 270 என்ற இலக்கு எளிதில் வசமாகிவிட்டது வரலாற்று வெற்றியாக கருதப்படுகிறது. அவர் ஜனவரி 6-ம்திகதி அதிபராகப் பொறுப்பேற்றுக் கொள்கிறார். இந்நிலையில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதிலிருந்து அவர் உலகத் தலைவர்கள் பலருடன் பேசி வருகிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் உக்ரைன் – ரஷ்யா போரை 24 மணி நேரத்தில் முடிவுக்குக் கொண்டு வருவேன் என்று ட்ரம்ப் கூறியிருந்தார். அந்த வகையில் புதினுடனான அவரது பேச்சு கவனம் பெற்றுள்ளது.

பெப்ரவரி 24, 2022-ல் ரஷ்யா உக்ரைன் மீது முதன்முதலில் தாக்குதலைத் தொடங்கியது. உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கை என்று பிரகடனப்படுத்தியே ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியது ஆனால் இன்றுவரை உக்ரைன் மீது கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது.

அமெரிக்காவின் ஆயுத உதவி, நிதியுதவி மூலமாகவே தற்போது ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் போரை நடத்தி வருகிறது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதும் உக்ரைனுக்கான ஆயுத உதவி, நிதியுதவியை குறைப்பார் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவின் உதவி கிடைக்காத சூழலில் உக்ரைன் அரசு அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்பும் என்று ட்ரம்புக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உக்ரைன் – ரஷ்யா போர் எப்போது முடிவுக்கு வரும் என்று உலக நாடுகள் எதிர்பார்த்து வரும் சூழலில் ரஷ்ய அதிபர் புதின் – அமெரிக்க அதிபராகவுள்ள ட்ரம்ப் தொலைபேசி உரையாடல் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.