Tamil News
Home ஆசிரியர் தலையங்கம் மீண்டும் ‘பழைய’ உபாயம்?

மீண்டும் ‘பழைய’ உபாயம்?

கோத்தாபய ராஜபக்ஷ சிங்கள மக்களுடைய வாக்குப் பலத்தில் ஆட்சியைப் பிடித்துவிட்டாலும், சர்வதேச ரீதியான அழுத்தங்கள் அவர்களுக்கு நெருக்கடியைக் கொடுப்பதாகத்தான் போகின்றது. குறிப்பாக பெப்ரவரி இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ள ஜெனீவா கூட்டத் தொடரைத் தாண்டிச் செல்வது அவர்களுக்குச் சவாலானதுதான். 2015, 2017 இல் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முன்னேற்றம் குறித்து ஜெனீவாவில் ஆராயப்படவுள்ளது. வழங்கப்பட்ட கால அவகாசமும் முடிவுக்கு வருகின்றது. அதனால்தான், ராஜபக்‌ஷக்களுக்குப் பதற்றம் தொற்றிக்கொண்டிருக்கின்றது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயப்போவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அறிவித்திருப்பது இதனால்தான். இலங்கைக்கான ஐ.நா.வின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹன்னா சிங்கர், மகிந்தவைச் சந்தித்துப் பேசியபோதே, இதனை அவர் கூறியிருக்கின்றார். இது ஒரு உள்ளூர்ப் பொறிமுறையாக இருப்பதால், உள்நாட்டில் அதனை நியாயப்படுத்த முடியும் என்பது அவரது கணிப்பாக இருக்கலாம்.

2009 இல் போர் முடிவுக்கு வந்த போது, யுத்தக் குற்றங்கள் குறித்த விசாரணை முன்னெடுக்கப்படும் என்ற வாக்குறுதி அப்போது ஜனாதிபதியாக இருந்த மகிந்தவினால் ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு வழங்கப்பட்டது. அது குறித்த அழுத்தங்கள் அதிகரித்து தனியான விசாரணை ஒன்றை முன்னெடுப்பதற்கு ஐ.நா. முயன்றபோதுதான் இந்த ஆணைக்குழுவை மகிந்த அமைத்தார். போர் முடிவடைந்து ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில் – 2010 மேயில்தான் ஆணைக்குழு அமைக்கப்பட்டது. போர் இடம்பெற்ற சூழ்நிலை குறித்து ஆராய்வதும், அதன் அடிப்படையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவதும்தான் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட பொறுப்பு.

18 மாதகாலமாக விசாரணைகளை முன்னெடுத்த குழு, 2011 நவம்பரில் அதன் இறுதி அறிக்கையைக் கையளித்தது. எதிர்பார்க்கப்பட்டதைப்போல, அரசாங்கத்துக்கு சாதகமான அறிக்கை ஒன்றையே இந்தக் குழு வெளியிட்டிருந்தது. குறிப்பாக, அரசாங்கப் படைகள் வேண்டுமென்றே பொதுமக்கள் மீது தாக்குதலை நடத்தவில்லை என்பதும், பொதுமக்களைப் பாதுகாப்பதில் அரச படைகள் கவனம் செலுத்தின என்பதும் இந்த அறிக்கையின் முக்கிய அம்சம்.

இந்த அறிக்கை குறித்து மனித உரிமை அமைப்புக்கள் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்த நியாயமான காரணங்கள் இருந்தன. ஆணைக்குழு சுயாதீனமாகச் செயற்படவில்லை. சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை. சர்வதேச தராதரங்களுக்கு இசைவானதாக விசாரணைகள் இருக்கவில்லை. ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட ஆணை வரைவறுக்கப்பட்டதாக இருந்தது. இந்தக் காரணங்களால் ஐ.நா. நிபுணர் குழு உட்பட மனித உரிமை அமைப்புக்கள் இந்த அறிக்கையை முற்றாக நிராகரித்திருந்தன.

இந்த அறிக்கையின் பரிந்துரைகள் படிப்படியாக நிறைவேற்றப்படுவதாகச் சொல்லியே மகிந்த அரசாங்கம் 2015 வரை காலத்தைக் கடத்தியது. 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அப்போதைய சிரேஷ்ட அமைச்சர் மகிந்த சமரசிங்க, ”ஏற்கனவே 99 வீதமான பரிந்துரைகளை அரசு அமுல்படுத்தியுள்ளதுடன், இதனைக் கொண்டு ஜ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படவுள்ள அமெரிக்க ஆதரவு பிரேணைக்கு முகம்கொடுப்பதற்கு தயாராகிக்கொண்டிருக்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.

ஆக, ஆணைக்குழுவின் அறிக்கை சர்வதேசததைச் சமாளிப்பதற்கான ஒரு உபாயமாகத்தான் அரசாங்கத்தினால், பயன்படுத்தப்பட்டுள்ளதே தவிர, நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல. இப்போது, மகிந்தவும் அந்த அறிக்கையைத் தூசி தட்டி எடுத்திருப்பது நல்லிணக்கத்துக்காகவல்ல. வரப்போகும் ‘ஜெனீவா’ என்ற நெருப்பாற்றை நீந்திக் கடந்துவிடுவதற்காகத்தான்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் போர்க் குற்றங்களில் சம்பந்தப்பட்ட படையினரைப் பாதுகாப்பதைத்தான் இலக்காகக் கொண்டிருந்தது. அதனைக்கூட அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை. அதனால்தான் ஜெனீவாவில் இரண்டு தீர்மானங்கள் அதன்பின்னர் கொண்டுவரப்பட்டன. அதுகூட, தமிழர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றக் கூடியதாக இருக்கவில்லை.

இப்போது, பழைய உபாயத்தையே மீண்டும் பயன்படுத்தி சர்வதேசத்தை திசைதிருப்ப அரசாங்கம் முற்படுவதைத்தான் மகிந்தவின் அறிவிப்பு உணர்த்துகின்றது. இவ்விடயத்தில் சர்வதேசம் அவதானமாக இருப்பது அவசியம். தமிழத் தரப்பினரும் இதற்கு இடம்கொடுக்காமல், சர்வதேச சமூகத்துக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமாகவே தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

-இலக்கிய மின்னிதழ் ஆசிரியர் தலையங்கம்-

Exit mobile version