மிருசுவில் உசன் சந்தியில் நேற்றிரவு கோர விபத்து; மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர் பலி

மிருசுவில், உசன் சந்தியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தொன்றில் இளைஞர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் நோக்கிச் சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது.

விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் அம்புலன்ஸ் மூலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டபோதும் அங்கு உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சோரன்பற்று, இயக்கச்சியைச் சேர்ந்த 18 வயதான கண்ணதாசன் கஜீபன் என்பவரே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவேளை உயிரிழந்தார். அவரது உடல் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திலேயே உயிரிழந்த 18 வயதேயான தங்கராசா சுவேந்திரனின் சடலமும் பின்னர் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. திடீரென ரயர் வெடித்ததில் ஒரு பக்கத்துக்கு இழுபட்ட டிப்பர் எதிரே வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியதால் இந்த விபத்து இடம்பெற்றது.