Tamil News
Home உலகச் செய்திகள் மியான்மர் மக்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு – ஐநா கண்டனம்  

மியான்மர் மக்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு – ஐநா கண்டனம்  

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராகவும் ஆங்சான் சூகி உள்ளிட்ட தலைவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தலைநகர் நேபிடா, யாங்கூன் மற்றும் மண்டலே நகரங்களில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துகிறார்கள்.

இராணுவம் விதித்துள்ள தடையை மீறி இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.‌ போராட்டத்தை ஒடுக்குவதற்கு இராணுவம் அடக்குமுறையை கையாண்டு வந்தாலும் நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. நேற்று மண்டலே நகரில் உள்ள கப்பல் தளத்தில் உள்ள ஏராளமான தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியபோது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.

மியான்மர் இராணுவத்தின் இந்த ஒடுக்குமுறைக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமைதியாக போட்டம் நடத்துவோருக்கு எதிராக உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் படைகளை பயன்படுத்துவது, மிரட்டல் மற்றும் துன்புறுத்தல் ஆகியவை ஏற்றுக்கொள்ள முடியாதது என ஐநா பொதுச்செயலாளர் கூறி உள்ளார்.

அமைதியான கூட்டத்திற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என்று கூறிய அவர், தேர்தல் முடிவுகளை மதித்து மக்களாட்சிக்கு திரும்புமாறு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

வன்முறையை சுட்டிக்காட்டி மியான்மர் இராணுவத்தின் பிரதான பக்கத்தை பேஸ்புக் நிறுவனம் நீக்கி உள்ளது.

Exit mobile version