மியான்மர்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக அறிவித்த இராணுவம்

மியான்மரில் இராணுவ ஆட்சியை நடைமுறைப்படுத்தியுள்ள அந்நாட்டு இராணுவம், ஆங் சான் சூகி அரசில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது.

இராணுவ ஆட்சிக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கம் தொடங்க காரணமாக இருந்ததோடு அதற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதால் முந்தைய அரசின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  மற்றும் அரசியல்  தலைவர்கள் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மியான்மர் இராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும் மியான்மரின் நிழல் அரசாக இயங்கும் சி.ஆர்.பி.எச்-சால் கடந்த வாரம் அமைக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு படையும் பயங்கரவாத இயக்கமாக மியான்மர் இராணுவம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள சிறுபான்மை இன குழுக்கள் மற்றும் ஜனநாயக சக்திகளை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட இந்த மக்கள் பாதுகாப்பு படை மத்திய ஒற்றுமை இராணுவத்தின் முன்னோடியாக செயல்படும் என சி.ஆர்.பி.எச். கடந்த வாரம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இராணுவத்திடம் இருந்து தப்பிய ஆளும் கட்சி  நாடாளுமன்ற உறுப்பினர்கள் பைடாங்சு ஹுலுட்டாவ் (மியான்மர் நாடாளுமன்றம்) பிரதிநிதிகள் குழு (சி.ஆர்.பி.எச்) என்கிற குழுவை தொடங்கினர். இந்தக் குழுவின் தலைவராக   மான் வின் கைங் தான் உள்ளார். மியான்மரின் நிழல் அரசாக செயல்பட்டு வரும் இந்த சி.ஆர்.பி.எச்., நாட்டின் மக்களாட்சி அரசாக செயல்பட சர்வதேச அங்கீகாரத்தை கோரியுள்ளது.

ஆனால் மியான்மர் இராணுவம் சி.ஆர்.பி.எச்-சை சட்ட விரோத குழுவாக கருதுகிறது.