மியான்மரில் மற்றொரு பிரபலம் கைது

மியான்மரில் இராணுவ ஆட்சியை எதிர்த்து நடைபெற்று வரும் போராட்டங்களில் கலந்து கொண்ட அந்நாட்டின் பிரபல தற்காப்பு கலை வீரர் ஃபோ தாவை(Phoe Thaw) (36) இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.

கடந்த பெப்பிரவரி 1ஆம் திகதி மியான்மரின் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு இராணுவம்  ஆட்சியை கைப்பற்றியுள்ளது முதல் இராணுவத்திக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.

இந்த போராட்டங்களில் கலந்து கொண்ட சிறுவர்கள் உள்ளிட்ட  772 பேரை இராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது.   அதே நேரத்தில் 3,738 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி  இராணுவத்திற்கு எதிரான போராட்டங்களை ஆதரித்தமைக்காக பிரபல நடிகர் பைங் தாகோன்  கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், பிரபல தற்காப்பு கலை வீரர் ஃபோ தாவை இராணுவம் கைது செய்துள்ளது. இது குறித்து, இராணுவத்தின் தொலைக்காட்சியான (Myawaddy TV ) மியாவாடியில் வெளியிடப்பட்ட செய்தியில், ரங்கூனில் உள்ள மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த போது ஃபோ தா கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   விபத்து ஒன்றில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் போராட்டங்களில் கலந்து கொண்ட ஃபோ தா, இராணுவ தலைவரை சண்டைக்கு அழைக்கும் புகைப்படம் பிரபலம் அடைந்தமை என்பது  குறிப்பிடதக்கது.