வழக்கமாக மலேசிய குடிவரவுத் தடுப்பு முகாம்களில் உள்ள குடியேறிகளை நாடுகடத்தும் அங்கமாகவே மியான்மரிகளை நாடுகடத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது என குடிவரவுத்துறை இயக்குநர் ஜெனரல் கைரூல் டஸ்மி தெரிவித்துள்ளார்.
முன்னதாக மியான்மரில் ஜனநாயக அரசு கலைக்கப்பட்டு இராணுவ ஆட்சி ஏற்பட்டுள்ள நிலையில், மலேசியாவின் பிடியில் உள்ள 1,200 மியான்மர் நாட்டவர்களை நாடுகடத்த மலேசிய அரசு திட்டமிட்டிருக்கிறது. இந்த நிலையில் மலேசியாவில் தஞ்சம் கோரிய அகதிகளாக உள்ள எவரையும் மியான்மருக்கு நாடுகடத்தக் கூடாது என ஐ.நா. அகதிகள் முகமை தெரிவித்திருந்தது.
மலேசியா குடிவரவுத் தடுப்பு முகாம்களில் உள்ள மியான்மர் நாட்டவர்களை அழைத்துக் கொள்ள 3 கடற்படை கப்பல்களை அனுப்புவதாக மியான்மர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து மலேசியா இவர்களை ஒப்படைக்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்றைய நிலையில் மலேசியாவில் மியான்மரைச் சேர்ந்த 154,000 தஞ்சக்கோரிக்கையாளர்கள் தங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மியான்மர் தற்போது இராணு ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே மியான்மரில் இடம்பெற்ற ரோஹிங்கியாக்களுக்கு எதிரான வன்முறையைத் தொடர்ந்து அங்கிருந்து அண்டை நாடுகளுக்கு புலம்பெயர்ந்த ரோஹிங்கியாக்கள் தற்போது நாடு திரும்புவதற்கு அச்சம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.