தேசியம் (Nationalism) என்பது ஒரு ஆன்மா. அந்த ஆன்மாவின் மகிமையை உணர்ந்து அந்த ஆன்மாவால் மக்கள் இயங்குகின்ற பொழுது அவர்கள் தேசஇனமாக (Nation) உயர்ச்சி காண்பர்.
இந்த தேசியம் என்னும் ஆன்மாவை உருவாக்குகின்றனவாக நேற்றும் இன்றும் திகழ்கிறது. நேற்று என்பது உயர்வான நினைவுகள் ஊடாக உயர்வான பாரம்பரியம் ஒன்றிக்கு மக்களைச் சொந்தக்காரர்கள் ஆக்குகின்ற பொழுது, அந்த உயர்வான பாரம்பரியத்தைப் பேணிடும் பொதுமை உணர்வு காரணமாக அம்மக்கள் இன்றும், என்றும் கூடிவாழும் விருப்புடையவர்களாக மாறுவர்.
தங்களுடைய முன்னோர்களின் உயிர்த் தியாகங்களினதும், உழைப்பினதும் தொடர்ச்சியாகத் தாங்கள் உள்ளதாகக் கருதி, அந்தத் தியாகத்தின் பலனை உழைப்பின் பெறுதியைத் தாங்கள் தொடர்ந்தும் போற்ற, முன்னெடுக்க வேண்டும் என்னும் உறுதிப்பாடு என்கிற தேசியத்தால் தனியாட்கள் தங்களை மக்கள் (People) என்னும் தொகுதியாகப் பரிணாமம் அடையச் செய்கின்றனர்.
இந்தத் தேசிய உணர்வால் இணைந்த மக்கள், தாம் அந்தத் தேசியத்தைப் பேணி வளர்க்க உறுதி பூணுகின்ற பொழுது, அது அவர்களுக்கான அரசியல் எதிர்காலத்தை அவர்களே அமைத்துக் கொள்கிற; அவர்களில் இருந்து பிரிக்க இயலாத தன்னாட்சி (Self – determination) என்னும் அடிப்படை மக்கள் உரிமையாகித்; தேசத்தை அவர்களே கட்டியெழுப்பும் செயல்முறையாக (Nation building process) இயல்பாகி, அம்மக்கள் தேசமக்களாகப் (Nation) பரிணாமமடைகின்றனர்.
இவ்வாறு மக்களைத் தேசியத்தால் இணைய வைத்து, மண்ணையும், மக்களையும் காக்கும் உறுதியுள்ளவர்களாக மாற்றும் ஆற்றலாளர் தேசியத் தலைவராவார். ஆகத் தேசியத் தலைவர் மக்களின் ஆன்மாவாக இலங்குபவர். தேசியத் தலைவரின் தோற்றம் என்பது தேசத்தின் விழிப்பின் மானிடக் குறியீடு.
ஈழத்தமிழ் மக்களின் வரலாற்றில் தேசியத்தலைவர் என்ற போற்றுதற்குரியவராக 26.11.1954இல் ஈழமண்ணில் மலர்ந்து 1972 முதல் 2009 வரை 37 ஆண்டுகளாக ஈழத்தமிழ் மக்களின் தேசிய சுதந்திரம் என்பதையே தனது இலட்சிய வேட்கையாகவும், தணியாத ஆன்மீகத் தாகமாகவும் கொண்ட விடுதலைப் போராட்டத்தை உருப்பெறவைத்து அந்த விடுதலைப் போராட்டத்தையே தனது வாழ்க்கையாகவும், தனது வாழ்க்கையையே விடுதலைப் போராட்டமாகவும் மாற்றிய தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஈழமக்களின் உரிமைகளை அடைய வைக்கும் விடுதலைப் பேரொளியாக ஈழமக்கள் வரலாற்றில் விளங்குகின்றார்.
இஸ்ரேலிய மக்களுடைய வரலாற்றில் “காரிருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடர் ஒளி உதித்துள்ளது” என கிறிஸ்துவின் வருகையைப் பற்றி எசயா இறைவாக்கினர் கிறிஸ்து பிறப்பதற்கு எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் கூறிய வார்த்தைகள் ஈழமக்கள் வரலாற்றிலும் மெய்மையானது.
கடவுள் மனிதன் வாழும் வாழ்வின் வளி வெளிப்படும் பேராற்றலாக மனித இல்வாழ்க்கை வழி உணரப்படுமொன்றாக அல்லாது கல்லைக் கும்பிட்டு அடையும்; பொருள் அல்ல என்கிற தமிழர் ஆன்மீகத்தை வள்ளுவர் “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந் தெய்வத்துள் வைக்கப்படும்” எனத் தெளிவாகக் குறிப்பிட்டார்.
இத்தகைய தெய்வமாதலுக்காக வாழும் முயற்சியே தவம் என்பதை வள்ளுவர் “தன்னுயிர் தானறப் பெற்றானை யேனைய மன்னுயி ரெல்லாந் தொழும்” என எடுத்தியம்பினர். “உற்றநோய் நோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை யற்றே தவத்திற் குரு” என ஏற்பட்டுள்ள துன்பங்களை மாற்றவும், உயிர்கள் துன்பமுறாதவாறு தடுப்பதும் ஆகிய மனித முயற்சியே தவம் எனவும் இந்தத் தவமுடையோரே தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர் என்றும், இவர்களே தம்நிலையில் தாழா பெருவாழ்வு வாழ்ந்து தெய்வத்தால் தாழ்வு வந்த விடத்தில் உயிர்வாழா மானமுடைமையால் மக்களுக்கு வழிகாட்டும் ஒளியாக மாறுவார் என்பதும் வள்ளுவ சிந்தனை.
இந்த ஒளி வாழ்வுடையோரோ “இளிவரின் வாழாத மானமுடையார் – ஒளி தொழுதேத்து முலகு” என உலகினரால் வணங்கப்படும் ஒளியாவார், அவ் ஒளிக்குரியோர் திருவுருவே தெய்வ உருவாகக் கொண்டாடப்படும் என அழகாகத் தமிழரின் முதல் நூலாக இன்று கிடைக்கும்; எண்ணாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தொல்காப்பியமும் எடுத்துரைக்கிறது. தொல்காப்பியம் பொருளதிகாரம் 63ஆவது நூற்பாவாகவும் புறத்திணை இயல் 5ஆவது நூற்பாவாகவும் உள்ள வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்” எனத் தொடங்கும் நூற்பாவின் இறுதியில் வரும்,
“காட்சி கல்கோள் நீர்ப்படை நடுதல் சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தலென்று”
என்னும் வரிகள் தமிழரின் எண்ணாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடர்ந்து வரும் தங்கள் மாவீரர்களுக்கு நடுகல் நட்டு வாழ்த்திப் போற்றும் தமிழர் பண்பாட்டைப் பதிவு செய்துள்ளது.
இங்கு காட்சி என்பது போர்க்களத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களின் புகழைக் கல்லில் நிலைத்து நிற்குமாறு எழுதி வழிபடுவதற்காக, அதற்கு ஏற்புடைய நடுகல்லைக் கண்ணில் தேடிக் காணுதல் காட்சியாகும். இது கல்கோளின் முதல் நிலையாகும். அவ்வாறு தேடிக்கண்ட கல்லினை மறவர்கள் தம்முயற்சியால் எடுத்து வருதல் கல்கோள் எனப்படும்.
இது கல்கோளின் இரண்டாவது நிலையாக உள்ளது. கண்டு கொண்டு வந்த கல்லை நீரினால் மாசு கழுவித் தூய்மை செய்தல் நீர்ப்படை என்னும் மூன்றாவது கல்கோள் ஆகிறது. அடுத்து கழுவித் தூய்மை செய்த கல்லை வேந்தன் முன்னிலையில் நட்டுவைத்தல் நடுகல் என்னும் சிறப்புப் பெயரைப் பெறுகிறது. இது கல்கோளின் நாலாவது நிலையாகிறது. அவ்வாறு நட்ட கல்லுக்குக் கோயில் எடுத்துச் சிறப்பித்தல் ‘பெரும்படை’ எனப்பட்டது.
இது ஐந்தாவது கல்கோள் நிலையாகும். இறுதியாக ஆறாவது கல்கோள் நிலையில் அந்த நடுகல்லை வணங்கி வாழ்த்தி வழிபடுதல் ‘வாழ்த்தல்’ என அழைக்கப்பட்டது. இதன்வழி வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தவரை வானுறையும் தெய்வமாக வைத்து வழிபடும் வழிபாட்டுரிமையாக மாவீரர் துயிலக நடுகல் முறைமை அமைகிறது. இந்த தமிழரின் தொன்மையும் தொடர்ச்சியுமான வழிபாட்டு வளர்ச்சியே கந்தழி வழிபாடெனவும் சிவலிங்க வழிபாடெனவும் சைவசமய வழிபாடாகியது என்பதும் ஆய்வாளர்கள் கருத்தாக உள்ளது.
இந்தத் தமிழர் பண்பாட்டு வழி வந்த ஈழமக்களின் சமகால வீர்களைப் போற்றும் ‘மாவீரர் நாள்’ அவர்களின் பண்பாட்டுச் சுதந்திரமாக மட்டுமல்ல வழிபாட்டு உரிமையாகவும் உள்ளதால் இலங்கையின் அரசியலமைப்புக்கு கீழும் அனைத்துலகச் சட்டங்கள், வழமைகள், மரபுகள், ஒழுக்கலாறுகளின் அடிப்படையிலும் ஈழத்தமிழர்களின் பிரிக்கப்பட முடியாத மனித உரிமையாகவே போற்றப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.
இந்தப் பண்பாடு பேணும் வழிபாடு போற்றும் மரபே இன்று ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதலாவது வீரச்சாவடைந்த மாவீரர் சங்கரின் நினைவேந்தல் நாளாகிய கார்த்திகை 27ஆம் திகதியை ஒளியேற்றி ஈழமண்ணையே ஒளிப்பிரபையாக ஒளிரவைத்தும், ஆலய மணிகளை ஒலித்து, ஈழத்து வானை மாவீர்கள் புகழ்பாடும் தங்கள் வாழ்த்தொலியுடன் சேர்த்துப் பரவும் வீரமுழக்கமாக மாற்றியும், ஈழமக்களினதும், ஈழமண்ணினதும் விடுதலைக்காகத் தம்முயிரை ஈகம் செய்த மாவீரர் வணக்க நாளாக ஈழத்தாயகத்தின் தேசிய நினைவெழுச்சி நாளாக ஈழத்தமிழர்களைக் கொண்டாடச் செய்கிறது.
உலகெங்கும் தமிழர் வாழும் நாடுகளிலும் தமிழகத்திலும் கூட இந்தக் கார்த்திகை 27 இனமானத் தமிழர்களால் தேசிய நினைவெழுச்சி நாளாகவும் மாவீரரைப் போற்றும் மாவீரர் நாளாகவும் கொண்டாடப்படுகிறது. இது வலிசுமந்த நினைவுகளைத் தரும் நாளாக இருந்தாலும் அதற்கும் அப்பால் உறுதியின் உறைவிடமாகிய மாவீரர் துயிலகங்களில் தமிழ் வாழ, தமிழர் வாழ உறுதி எடுக்கும் ஈழமக்கள் உரிமைகள் மீட்புக்கான புத்தெழுச்சி நாளாகவும் அமைகிறது. ஈழத்தமிழர்கள் தேசமாக எழுந்ததையும் – உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தேசங்கடந்துறை ஈழமக்களைத் தங்கள் ஈழத்தாயகத்துடன் பெருமைப்படுத்தும் நாளாகவும் திகழ்கிறது.
இந்த தன் இனத்தின் மானமனிதரைக் கொண்டாடும் தன்மையைப் பழங்குடித்தன்மைக்கு வீழ்ச்சி வருகின்ற நேரத்திலும் கூட மறவாது கொண்டாடும் பண்பினை “வழங்குவ துள் வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி – பண்பிற் றலைப்பிரித லின்று” எனக் குடிமைக் கடனாகவே வள்ளுவர் சிறப்பித்துரைப்பதைக் காண்கிறோம். இதனால் மாவீரரைப் போற்றுதல் என்பது ஈழத்திலும் புலம்பெயர்ந்து உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களிடையிலும் குடிமைக் கடமையாகவும் திகழ்கிறது.
இவ்வாறு குடிமைக் கடமையாக மாவீரரைப் போற்றும் பண்பாட்டை முடியாட்சிக் காலம் முதல் இன்று வரை உலக அரசுக்களும், உலக அமைப்புக்களும் மக்கள் உரிமையாகவும் தேசக் கடமையாகவும் கருதுகிறார்கள் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக 1920 இல் 1ஆம் உலகப் போரில் உயிர்நீத்த வீரர்களைப் போற்றுவதற்கு பிரித்தானியாவின் 5ஆவது ஜோர்ஜ் மன்னர் தொடக்கி வைத்த பதினோராம் மாதம் பதினோராம் நாள் பதினோராவது மணி பதினோராவது நிமிடம் பிரித்தானியாவிலும் பொதுநலவாய நாடுகளிலும் இருநிமிட அமைதி வணக்கம் செய்யும் முறைமை இன்று வரை தொடர்வது சிறந்த உதாரணமாகிறது.
1ஆம் உலகப் போர்நடந்த புல்வெளிகளில் கொல்லப்பட்டவர் நினைவாக அந்த புல்வெளிகளில் மலரும் சிவப்புநிறப் பொப்பி மலரை கனடியக் கவிஞர் மாவீரர் குறியீடாக்கியது முதல் இன்று வரை சிவப்பு பொப்பி மலர் அணிந்து தங்கள் இதய நன்றியை மக்களும் தலைவர்களும் வெளிப்படுத்திக் கொள்ளும் வழமையும் கார்த்திகை மாதத்தில் தொடர்கிறது..
இவ்வாண்டு இந்த 1ஆவது உலகப் போரில் உயிர்நீத்த மாவீரர்க்கு அமைதி வணக்கம் தெரிவிக்கும் முறைமைக்கு நூற்றாண்டு நிறைவு என்பதனால் பிரித்தானியாவின் மாட்சிமைக்குரிய மகாராணி அவர்கள் தனது முதுவயதையும் கோவிட் -19 தொற்று அச்சத்தையும் பொருட்படுத்தாது, முதற்தடவையாத் தொற்று தாக்காது முகக்கவசம் அணிந்து வெஸ்ட்மினிஸ்டர் குருமட ஆலயத்தில் உள்ள பெயர் தெரியாத மாவீர்கள் துயிலகத்திற்குச் சென்று, அங்கு தான் முடிசூடிய 1952ஆம் ஆண்டு தனக்களிக்கப்பட்ட பூங்கொத்தையொத்த மலர்க்கொத்தை, அந்த மாவீர்கள் துயிலகத்தில் வைத்து, நினைவேந்தல் செய்தமை உலகம் எந்த அளவுக்குத் தன் மாவீர்களைப் போற்றுதலைத் தன் தலையாய கடமையாகக் கொள்கிறது என்பதற்கு மிகச்சிறந்த வெளிப்பாடாக அமைந்தது.
இந்த உலகப் பொதுமைக்கேற்பவே தங்கள் மாவீர்களுக்கு ஈழத்தமிழர்கள் கார்த்திகை 27 இல் துயிலகம் சென்று ஒளித்தீபம் ஏற்றித் தொழும் மாவீரர் நாளை ஈழத்தமிழர் தேசியப் பெருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக உலகெங்கும் உள்ள ஈழத்தமிழ் இளையோர்க்கு அவர்களின் ஈழத்தேசியத்தலைவர் என்ற அடையாளத்தை உறுதிப்படுத்தவும் அவர்களின் ஈழத்தமிழர் இனத்துவத்தை நிலைப்படுத்தவும் அவர்கள் உடைய தனித்துவத்தைப் பேணவும் உதவும் மிக முக்கிய நாளாக ஈழத்தமிழர் ‘மாவீரர் நாள்’ வரலாற்றில் தொடரும்.