மாற்றுத் தலைமைகளைத் தோற்கடிக்க வேண்டும் என்ற பரப்புரையின் பின்னணியில் பாரிய சதி; அருந்தவபாலன்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் உட்பட அதன் தலைவர்கள் மாற்று அணியினரைத் தோற்கடிக்க வேண்டும் என்று செய்துவரும் பரப்புரையின் பின்னால் எம்மக்களுக்கெதிரான பாரிய சதித்திட்டம் ஒன்று பின்னிக் காணப்படுகின்றது” எனக் கூறியிருக்கின்றார் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளரும், அதன் யாழ். மாவட்ட வேட்பாளருமான க.அருந்தவபாலன்.

கிளிநொச்சி விவேகானந்த நகர் மக்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார். இங்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் தெரிவித்தாவது:

“இவர்களின் இவ்வாறான கருத்துக்கள மூலம் தாம் வெற்றி பெற்று தமது பாராளுமன்ற கதிரைகளைத் தக்கவைப்பது மட்டும் அவர்களது நோக்கமல்ல. அதற்கும் மேலாக இலங்கையில் ஆட்சியாளர்களால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை விடயத்தை சர்வதேச அரங்கிற்குக் கொண்டு சென்று எம் மக்களுக்கான நீதி தேடும் முயற்சிகளை முறியடிப்பதும்தான் இதன் பின்னாலுள்ள திட்டமாகும்.

உங்களுக்குத் தெரியும்இ வடக்கு மாகாண சபையில் இனப்படுகொலைத் தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு பல வழிகளிலும் முட்டுக்கட்டை போட்டவர்கள் சம்பந்தனும் சுமந்திரனுமே. .எனினும் அவ் வரலாற்றுத் தீர்மானம் நீதியரசர் விக்கனேஸ்வரன் தலமையில் நிறைவேற்றப்பட்டது. இத் தீர்மானத்தை சர்வதேச அரங்கிற்கு முன் கொண்டு சென்று அதன் மூலம் எம் மக்களுக்கு நீதி தேடுவதை விடுத்து அத் தீர்மானத்துக்கு மாறாக இங்கு நடந்தது இனப்படுகொலை இல்லை என்ற நிறுவுவதிலேயே ஆட்சியாளர்களுடன் இணைந்து சுமந்திரன் தனது சட்ட அறிவை பயன்படுத்தி வருகிறார். இதன் மூலம் தமக்கு வாக்களித்த மக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாரிய துரோகமிழைத்து வருகின்றனர்.

ஆட்சியிலிருந்த கடந்த ரணில் அரசுடன் “டீல்” போட்டு ஐ.நா சபை தீர்மானத்தை நீர்த்து போக உதவியதுடன் அதன் தொடர்ச்சியாக இன்று மகிந்த ஆட்சியுடன் “டீல்” போட்டு எமது மக்கள் நீதி பெறுவதற்கான சர்வதேச கதவுகளை அடைப்பதற்கு உதவும் நோக்குடன் மாற்று அணியினர் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற கோசத்தை முன் வைத்து வருகின்றனர்.

முள்ளிவாய்க்கால் என்பது முடிவல்ல. அது எமது இனத்தின் இன்னொரு வரலாற்றுத் தொடக்கம். தமிழ் மக்களுக்கான நிலைமாறுகால நீதியையும் தன்னாட்சி அதிகாரத்தையும் பெறுவதற்கான அரியதொரு வாய்ப்பாக இனப்படுகொலை மற்றும் போர்க்குற்ற விசாரணை என்பன காணப்படுகிறன்றன.

இதனையே எமது புத்திஜீவிகளும் அரசியல் ஆய்வாளர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.அதனால்தான் இனப்படுகொலை புரிந்த ஆட்சியாளர்களும் அவர்களின் அரசியலறிஞர்களும் இதனை முறியடித்துஇ மூடி மறைத்துஇ சர்வதேச அரங்கிலிருந்து அகற்ற முயற்சிக்கினறனர். இவ்வாறு முயற்சிக்கும் இனப்படுகொலையாளரை தப்ப வைப்பதற்கு தமிழ்த் தேசிய கூட்டமப்பினர் தொடர்ந்து உதவி வருகின்றனர்.

தமிழ் மக்களுக்கெதிரான இந்த மகிந்த – கூட்டமைப்பு “டீலை” உடைத்து இனப்படுகொலை தீர்மானத்தைத் சர்வதேச அரங்கில் நிலை நிறுத்துவதன் மூலமே ஆட்சியாளர்க்கு அழுத்தங்களைப் பிரயோகித்து எம் மக்களுக்கான விடிவைப் பெறமுடியும்.அதனை செய்யக்கூடிய ஆற்றலும் உறுதியும் நிதியரசர் விக்னேஸ்வரன் தலைமையிலான எமது தமிழ்மக்கள் தேசியக் கூட்டணியினரிடமே இன்று காணப்படுகின்றது.

எனவே எமது மக்களை தொடர்ந்து ஏமாற்றிவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை நிராகரித்து தமிழ் மக்கள் தேசிய கூட்டணியை வலுப்படுத்துவதன் மூலமே இது சாத்தியமாகும்.”