மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் வடக்கு நடத்தப்படும் யுகத்துக்கு முடிவு கட்டுவோம் – சஜித் பிரேமதாச

image 6483441 5 மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் வடக்கு நடத்தப்படும் யுகத்துக்கு முடிவு கட்டுவோம் - சஜித் பிரேமதாச
“வடக்கு மாகாணம் இதுவரை மாற்றாந்தாய் கவனிப்பையே பெற்று வந்தது. இந்த யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்து, இந்த மாகாணத்தின், இந்த மாவட்டத்தின் அபிவிருத்தி யுகத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்போம்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன மன்னார் புனித ஜோசப் கல்லூரிக்கு வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற போது அதில் உரையாற்றுகையிலேயே அவா் இதனைத் தெரிவித்தாா்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது உரையில், “போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல மனித உயிர்கள் பலியாகியுள்ளன. யுத்தத்தின் பின்னர் இம்மாவட்டங்கள் அபிவிருத்தியின் விடியலை காணவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விரிவுபடுத்தி, இதுவரை எந்த தலைவர்களும் தலைமைத்துவம் வழங்காத சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்த நாம் நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்தாா்.

“இந்த உதவிகளைப் பெற்று, வடக்கு கிழக்கு இரு மாகாணங்களை மையமாகக் கொண்டு, முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்போம். வடக்கு மாகாணம் இதுவரை மாற்றாந்தாய் கவனிப்பையே பெற்று வந்தது. இந்த யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்து, இந்த மாகாணத்தின், இந்த மாவட்டத்தின் அபிவிருத்தி யுகத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்போம்” என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்தாா்.

“எமது நாட்டு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு மீனவ சமூகத்தினால் எமது மீனவ சமூகம் பாரிய பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த பிரச்சினைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் கலந்துரையாடி தொடர்ச்சியாக நிலவிவரும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படும்” என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தாா்.