Home ஆய்வுகள் மானுடத்தின் எசமான்கள் (பாகம்–03) – தமிழில்- ந. மாலதி

மானுடத்தின் எசமான்கள் (பாகம்–03) – தமிழில்- ந. மாலதி

பேராசிரியர் நோம் சொம்ஸ்கி ‘மானிடத்தின் எசமான்கள்’ என்ற தலைப்பில் கட்டுரையொன்றை எழுதியுள்ளார். இக் கட்டுரையில்   இன்றைய உலக அரசியல் பற்றி ஒரு அறிமுகம் தருகிறார். இதை ஐந்து பிரிவுகளாக (1) மேற்குலக அதிகாரத்திற்குள்ள அழுத்தங்கள்இ( 2) இன்றைய கிழக்கு-ஆசியா சவால்கள்இ 3) இன்றைய கிழக்கு-ஐரோப்பிய சவால்கள்இ (4) இன்றைய இஸ்லாமிய-உலக சவால்கள்இ (5) இரண்டாவது சக்தி) வெளியிட்டு வருகிறோம். அவ்வகையில் இதன் மூன்றாவது பகுதியை இங்கு தருகிறோம்.

இன்றைய கிழக்குஐரோப்பிய சவால்கள்

இன்று சவாலாக விளங்கும் இரண்டாவது பிராந்தியம் கிழக்கு-ஐரோப்பா. நேற்றோ(NATO) -ரசியா எல்லையில் பிரச்சனை ஒன்று வளர்ந்து கொண்டிருக்கிறது. இது ஒரு சின்ன பிரச்சனை அல்ல. “உக்கிரேயின் முன்னரங்கு: எல்லையில் பிரச்சனை” என்ற தனது திறமையான ஆய்வு நூலில் ரிச்சட் சக்வா (Richard Sakwa) என்ற ஆய்வாளர், “நேற்றோ ஆளுமை செலுத்தும் நிலப்பரப்பு விரிவடைவதை தடுப்பதற்கே ரசியா-ஜோர்ஜியா போர் மூண்டது. இது முதலில் 2008 இலும் பின்னர் 2014 இலும் வெடித்தன. மூன்றாவது போரை உலகம் தாங்குமா என்பது நிச்சயமில்லை.” என்று எழுதுகிறார். இவரது ஆய்வு நம்பக்கூடியதாகவே உள்ளது.

நேற்றோ விரிவாக்கம் தீமையற்றது என்றே மேற்குலகம் பார்க்கிறது. ரசியாவும், உலகின் ஏனைய நாடுகளும் இதை வேறுவிதமாக பார்க்கிறார்கள் என்பதும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மேற்கிலும் கூட சில முக்கியமானவர்கள் இவ்வாறுதான் பார்க்கிறார்கள். நேற்றோ விரிவாக்கம் “துயரம் நிறைந்த தவறு” என்று ஐ-அமெரிக்க ராஜதந்திரியான ஜோர்ஜ் கின்னன் ஆரம்பத்திலேயே எச்சரித்தார். அவரோடு சேர்ந்து மேலும் சில ஐ-அமெரிக்க உயரதிகாரிகள் சனாதிபதிக்கு எழுதிய ஒரு திறந்த கடிதத்தில் இதை “வரலாற்று தவறான கொள்ளை” என்று விபரித்தார்கள்.The enlargement of NATO 1949 மானுடத்தின் எசமான்கள் (பாகம்–03) - தமிழில்- ந. மாலதி

1991இல் பனிப்போர் முடிவுக்கு வந்த பின்னர் சோவித் குடியரசின் உடைவுடன் இப்பிரச்சனை ஆரம்பிக்கிறது. அப்போது இப்பிராந்தியத்தின் பாதுகாப்பையும் அரசியல்-பொருளாதார நிலைமையையும் பற்றி இரண்டு விதமாக எதிர்பார்ப்புகள் நிலவின. மேலே குறிப்பிட ரிச்சட் சக்வா தனது ஆய்வில் இது பற்றியும் சொல்கிறா். ஒரு பார்வையில் ஐரோப்பிய ஒன்றியத்தை மையமாக கொண்ட “விரிவடைந்த ஐரோப்பாவும்”, ஐரோப்பிய-அட்லான்டிக் பாதுகாப்பையும் அரசியல்-பொருளாதாரத்தையும் முன்னெடுக்கும் நேற்றோவும் இருந்தன.

இரண்டாவது பார்வையில் கிழக்கில் போத்துகல்லின் லிஸ்பனையும் மேற்கில் ரசியாவின் விலடிவோஸ்றோக்கையும் உள்ளடக்கிய, “பெரிய ஐரோப்பிய கண்டமும்”, அதில் பிரசல்ஸ், மொஸ்கோ, அங்காரா போன்ற பல மையங்கள் இருந்தாலும், காலம் காலமாக இக்கண்டத்தில் தொடரும் பிரிவினைகளை களைந்து அது ஒரு பொது நோக்கத்துடன் முன்னேறும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தன.

பெரிய ஐரோப்பிய கண்டம் என்ற சிந்தனையை முன்மொழிந்தவர்களில் பிரதானமானவர், சோவியத் குடியரசின் அன்றைய தலைவர் மிக்கேயில் கோபசோவ் (Mikhail Gorbachev). இச்சிந்தனையின் வேர்கள் இதற்கு முன்னரும் ஐரோப்பாவில் இருந்ததுள்ளது. பிரெஞ்சு தலைவர் டி-கோல் போன்றவர்களும் இச்சிந்தனையை கொண்டிருந்தார்கள்.

ஆனால் 1990களில் கொண்டுவரப்பட்ட திறந்த சந்தை மாற்றங்களின் தாக்கத்தினால் ரசியா விழுந்த போது, இச்சிந்தனையும் மழுங்கிப் போனது. இப்போது விளடிமிர் புட்டினின் தலைமையில் மீள எழும்பும் ரசியா உலக அரங்கில் தனக்கும் ஒரு இடத்தை தேடும் போது இச்சிந்தனை மீண்டும் உயிர் பெறுகிறது. புட்டினும் அவரது சக-அரசியல்வாதியமான டிமிற்ரி மேடவேடேலும் (Dmitry Medvedev) ”பெரிய ஐரோப்பிய கண்டத்தின்” ஒன்றிணைவை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார்கள்.

“இவர்களின் முன்னெடுப்புக்களை உதாசீனம் செய்யும் மேற்குலகம், இம் முன்னெடுப்புக்களின் பின்புலத்தில் ரசியாவின் விரிவாக்கமே மறைமுக நோக்கமாக இருக்கிறது என்று கருதுகிறது.

மேலும் வட-அமெரிக்காவுக்கும் மேற்கு ஐரோப்பாவுக்கும் இடையே பிரிவை கொண்டுவருவதும் இதன் நோக்கம் என்று மேற்குலகம் கருதுகிறது” என்று ஆய்வாளர் ரிச்சட் சக்வா தொடர்ந்து எழுதுகிறார். இக்கரிசனைகள் பனிப்போர் காலத்தியது. ஐரோப்பா மூன்றாவது சக்தியாக வளர்ந்துவிடும் என்ற பயமே இக்கரிசனைகளுக்கான காரணம்.

மேற்கு ஜெர்மனியும் கிழக்கு ஜெர்மனியும் இணைந்த ஜெர்மனி நேற்றோவில் இணைவதற்கு கோபச்சோவ் சம்மதித்தது வரலாற்றில் ஒரு பெரும் விட்டுக்கொடுப்பு. அப்போது அதற்கு பதிலாக நேற்றோ கிழக்கு நோக்கி ஒரு அங்குலம் கூட நகராது என்று கோபச்சோவுக்கு வாக்குறுதி கொடுக்கப்பட்டது. ஆனால் ரசியா பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்தபோது மேற்குலகம் அதை “வரலாற்றின் முடிவு” என்றும், மேற்கின் முதலாளித்துவ சனநாயகத்தின் இறுதி வெற்றியென்றும் கொண்டாடியது. கோபச்சோவுக்கு கொடுத்த வாக்குறிதியை மீறி, நேற்றோ விரிவாக்கம் உடனேயே ஆரம்பித்தது.

இணைந்த ஜெர்மனியின் எல்லையையும் தாண்டி நேற்றோ நகர்ந்தது. விரைவில் ரசியாவின் எல்லையையும் தொட்டுவிட்டது. நேற்றோவின் கொள்கையும் மாற்றமடைந்தது. அதன் மாற்றமடைந்த கொள்கையில், உலகத்தின் சக்திக்கான (energy) கட்டுமானங்களை அதாவது கடல் பாதைகளையும் அதனடியில் உள்ள பைப்புக்களையும் பாதுகாப்பதும் சேர்க்கப்பட்டது. இது நேற்றோ செயற்படும் பரப்பை உலகளாவிய பரப்பாக மாற்றியது. அதுமட்டுமல்ல, இன்று பெரிதாக பேசப்படும் “பாதுகாக்கும் பொறுப்பு” (“responsibility to protect”) என்ற கொள்கையையும் மேற்குலகம் மாற்றியமைத்தது. இதற்கான ஐநாவின் கொள்கையிலிருந்து இது மிகவும் மாறுபட்டது. இதனால் இப்போது நேற்றோ ஐ-அமெரிக்காவின் தலைமையில் உலகில் எங்கும் தலையிடும் படையாக இருக்கலாம் என்றாகியது.

குறிப்பாக நேற்றோ உக்கிரேனுக்குள் விரிவடைவது ரசியாவை பாதிக்கும் ஒரு திட்டமாக உள்ளது. ஏப்பிரல் 2008 இல் இடம்பெற்ற ஒரு நேற்றோ கூட்டத்தின் போது இத்திட்டங்கள் முடிவுசெய்யப்பட்டன. அப்போது உக்கிரேயினுக்கும் ஜோர்ஜியாவுக்கும் நேற்றோ அங்கத்துவம் கொடுக்கப்படும் என்றும் திட்டவட்டமாக கூறப்பட்டது. 2004 இல் போராட்டங்களின் விளைவால் மேற்குலகின் ஒரு நண்பர் உக்கிரேயினின் சனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போது, ஐ-அமெரிக்க பிரதிநிதி அங்கு விரைந்து சென்று “உக்கிரேயின் நேற்றோவில் இணைவதை தாம் ஆதரிப்பதாக” சொல்லியது விக்கிலீக்ஸ் ஊடாக வெளிவந்த இன்னுமொரு செய்தி.

ரசியாவின் கவலை விளங்கிக்கொள்ள கூடியதே. சர்வதேச விவகாரங்களின் முன்னணி இதழான Foreign Affairs இல் ஒரு ஆய்வாளர், “உக்கிரேயின் பிரச்சனையின் அடிவேர் நேற்றோ விரிவாக்கமும் உக்கிரேயினை ரசியாவின் செல்வாக்கிலிருந்து விலத்தி மேற்குலகத்தோடு இணைக்கு ஐ-அமெரிக்காவின் திட்டமுமே… ரசியாவின் மைய நலன்களுக்கு இவை எதிரானவை என்றே இதை ரசியாவின் தலைவர் புட்டின் கருதுகிறார்.“ என்று எழுதுகிறார்.

ஐ-அமெரிக்காவுக்கு ரசியாவின் நிலைப்பாடு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் ரசியாவின் நிலைப்பாட்டின் பின்னாலுள்ள காரணங்கள் புரியாமல் இருக்க முடியாது. ஏனெனில். தொலைவில் இருக்கும் ஒரு நாடு தனக்கு அண்மையில் இராணுவத்தை நிறுத்துதை ஐ-அமெரிக்கா பொறுத்துக்கொள்ளாது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

சீனாவின் நடவடிக்கைகளைப் போல, ரசியாவின் நடவடிக்கைகளையும் தர்க்கரீதியாக புரிந்து கொள்ளலாம். சீனாவைப் போலவே இங்கும் ரசியா எதிர்கொள்வது பாரதூரமானது. அதன் இருப்பையே கேள்விக்குறியாக்கும் சூழல் இது.

தொடரும் ….

மானுடத்தின் எசமான்கள் (பாகம்–02) தமிழில்- ந.மாலதி

மானுடத்தின் எசமான்கள் (பாகம்–01) – தமிழில் ந.மாலதி

Exit mobile version