மாகாணசபை முறைமையை ஒழித்து அதிகாரம் மத்தியிடம் வரவேண்டும் – சரத் வீரசேகர

200 Views

மாகாணசபை முறைமையை முற்றாக இல்லாதொழித்து, அந்த அதிகாரங்களை மத்திய அரசாங்கத்திடம் கையளிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“அரசமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் ஊடாகவே மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டது என்பதாலேயே நான் ஆரம்பத்திலிருந்து அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றேன். 13 ஆவது திருத்தம் எம் மீது வலுகட்டாயமாகத் திணிக்கப்பட்டதொன்றாகும். ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்து, பொதுமக்களைத் தாக்கி, நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தனியாக வரவழைத்துத்தான் இந்தத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

இந்தியாவால் எம் மீது பிரயோகிக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே அவ்வாறு செய்யப்பட்டது. ஆனால் உண்மையில் இந்திய – இலங்கை ஒப்பந்தம் வலுவிழந்துவிட்ட தாகவே நான் கருதுகின்றேன்.ஏனெனில் இந்தியாவால் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைப் பறிமுதல் செய்தல், விடுதலைப் புலிகளைத் தாக்குதல், வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களை மீளக் குடியமர்த்துதல் போன்றவை இந்தியாவால் செய்யப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் அவை எதனையும் இந்தியா செய்யவில்லை. மாறாக, விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக எமது தரப்பிலிருந்து சுமார் 29 ஆயிரம் பேர் மரணமடைந்தமையுடன் சுமார் 14 ஆயிரம் பேர் ஊனமுற்றமையால் இனி மேலும் இந்திய – இலங்கை ஒப்பந்தம் அமுல்படுத்தப்படக்கூடிய நிலையில் இல்லை என்பதே எனது நிலைப்பாடாகும்.

ஆகவே, அந்த ஒப்பந்தத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாணசபை முறைமையும் எமக்குத் தேவையில்லை. நாம் இலங்கையைத் தனியயாரு நாடு என்றே கருதுகின்றோம். அத்தகைய நாட்டில் அனைவருக்கும் பொதுவான தனியயாரு சட்டமே இருக்கவேண்டும். ஆனால் மாகாணசபை அமுலில் இருக்கும் பட்சத்தில் 9 மாகாணங்களுக்கும் வெவ்வேறு விடயங்கள் தொடர்பில் வெவ்வே றான சட்டங்களை உருவாக்கிக்கொள்ள முடியும். அவ்வாறெனின் இது ‘ஒருமித்த நாடாக’ இருக்காது. எமது நாட்டில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களனைவரும் ஒரு குடும்பமாக இருக்கவேண்டும்.

அனைவரும் தமக்கு விரும்பிய இடங்களில் வசிப்பதற்கும் தாம் விரும்பியதொழிலை செய்வதற்கும் சுதந்திரம் இருக்க வேண்டும். ஆகவே இந்த மாகாணசபை முறைமையை முற்றாக இல்லாதொழித்து, அந்த அதிகாரங்களை மத்திய அரசாங்கத்திடம் கையளிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்” என்றார்.

Leave a Reply