மஹர சிறைச்சாலை சம்பவங்கள்: பின்னணியும் விளைவுகளும் – பி.மாணிக்கவாசகம்

344 Views

சிறைச்சாலைகளில் உருவாகியுள்ள கொரோனா வைரஸ் கொத்தணி அரசாங்கத்தின் வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைச் செயற்பாடுகளை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கின்றது. அத்துடன் கொரோனா வைரஸ் தாக்கச் சூழலில் சிறைக் கைதிகளின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன. இதனால் அவர்கள்பால் காட்டப்பட வேண்டிய அரசின் மனிதாபிமான அணுகுமுறையும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கி இருக்கின்றது.

நாட்டில் பரவலாகத் தொற்றிப் பரவியுள்ள கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றது. இதற்கென விசேட சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்குப் பொறுப்பாக உள்ள காவல்துறையினர் இந்தச் சட்டங்களை இறுக்கமாகப் பின்பற்றிச் செயற்பட்டு வருகின்றார்கள். பொலிசாருக்கு உதவியாக இராணுவத்தினரும் களத்தில் செயற்பட்டு வருகின்றனர்.

சிறைச்சாலைகளில் அவற்றின் கொள்ளளவுக்கு மேலான எண்ணிக்கையிலான கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். இதனால் அங்கு இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கைதிகள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி இருக்கின்றார்கள். நெருக்கமாக இருக்கின்ற கைதிகள் மத்தியில் கொரோனா வைரஸைத் தடுப்பதற்கான இடைவெளி பேணுதல் முகக் கவசம் அணிதல், அடிக்கடி கைகழுவுதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வசதிகளற்ற நிலையிலேயே கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.

கைதிகளில் பலருக்கும் கொரோனா வைரஸ் இலகுவாகத் தொற்றிப் பரவுவதற்கான வாய்ப்பை  இந்த நிலைமை உருவாக்கி இருக்கின்றது. இத்தகைய பின்னணியிலேயே கைதிகள் மத்தியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

வைரஸ் தொற்று மற்றவர்களுக்கும் ஏற்படாத வகையில் தடுப்பதற்குரிய பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் என கைதிகள் கோரினார்கள். அந்த நியாயமான கோரிக்கையை சிறைச்சாலை நிர்வாகமும், அரசாங்கமும் கைதிகளுக்கு சாதகமான முறையில் பரிசீலிக்கத் தவறி இருந்தன.

இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு சிறைச்சாலை நிர்வாகத்திடம் வசதியீனங்கள் இருக்கலாம். ஆனால் வைரஸ் தொற்றிப் பரவுவதைத் தடுக்கின்ற நடவடிக்கை மையமும், சுகாதாரத் துறையினரும் சிறைக்கைதிகளின் விடயத்தில் தீவிர கவனம் எடுத்துச் செயற்பட வேண்டியது அவசியம். அது அவர்களின் தவிர்க்க முடியாத கடமை. கடப்பாடு. இதனை மேற்பார்வை செய்து நடைமுறைப்படுத்த வேண்டியதும் வழிகாட்டிச் செயற்பட வைப்பதும் சுகாதார அமைச்சினதும், அரசாங்கத்தினதும் தலையாய பொறுப்பாகும்.

அந்தப் பொறுப்பு உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை இதனால், தங்களுக்கு பிசிஆர் பரிசோதனை கோரிக்கையை வலியுறுத்தி கைதிகள் தமது போராட்டத்தைத் தீவிரப்படுத்தி இருந்தார்கள். வன்முறைகளிலும் ஈடுபட்டார்கள். சிறைகளில் இருந்து தப்பியோட முயற்சித்திருக்கின்றார்கள். அவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக அதிரடிப்படையினரும் காவல்துறையினரும் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் பதினொரு பேர் உயிரிழந்துள்ளார்கள். எழுபது பேர் வரையில் காயமடைந்துள்ளார்கள். அந்த அளவுக்கு சிறைச்சாலைகளில் நிலைமைகள் மோசமடைந்திருக்கின்றன.

சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தங்களுடைய விருப்பத்திற்குச் செயற்பட முடியாது. சிறைகளில் கூரை மீதேறி போராட்டம் நடத்துவதையோ, அரச உடைமைகளுக்குச் சேதம் விளைவிப்பதையோ ஏற்றுக் கொள்ள முடியாது. அந்தச் செயற்பாடுகள் சட்டத்திற்கு முரணானவை. சட்ட ரீதியாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டியவை. அரச தரப்பின் இந்த நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளக் கூடியதே.

ஆனால் உலகத்தையே ஆட்டிப்படைக்கின்ற உயிர்க்கொல்லி வைரஸாகிய கொரோனா வைரஸ் தொற்றிப் பரவுகின்ற ஆபத்தான ஒரு சூழலில் வெறுமனே சட்ட ரீதியானதும், இராணுவப் போக்கிலான அணுகுமுறை கொண்டதுமான ஒரு நிலைப்பாடும் அதன் விளைவாக முன்னெடுக்கப்படுகின்ற கடும் போக்கிலான நடவடிக்கையும் ஏற்புடையதல்ல.

சிறைக்கைதிகளும் மனிதர்களே. குற்றச் செயல்களில் ஈடுபட்டார்கள் என்பதற்காக அவர்களை நியாயமற்ற முறையில் நடத்தவோ தண்டிக்கவோ எவரும் முற்பட முடியாது. இது சர்வதேச சட்டரீதியான குற்றவியல் ஏற்பாட்டில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள முக்கிய அம்சமாகும். உள்ளூர் நீதித்துறை சார்ந்த சட்டங்களும் குற்றவியல் சட்டங்களும் இதனை வலியுறுத்துகின்றன. அந்த மனிதர்களின் அடிப்படை உரிமையும், மனிதாபிமான நிலைப்பாடும் அரசினால் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆட்சிமுறைப் பண்பாடாகும்.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களை மனிதாபிமான ரீதியில் நடத்த வேண்டும். அவர்கள் தாங்களாகவே அந்த வைரஸை உருவாக்கிக் கொள்ளவில்லை. அவர்கள் வேண்டுமானால் பொறுப்பற்ற தமது செயற்பாடுகளினால் அதன் தொற்றுக்கு ஆளாகி இருக்கலாம். அவர்களில் இருந்து மற்றவர்களுக்கு அந்த வைரஸ் தொற்றிப் பரவாமல் தடுக்க வேண்டியது சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்களின் தலையாய கடமையாகும்.

அதேவேளை தொற்றிப் பரவுகின்ற வைரஸைக் கொண்டிருப்பவர்களை – கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருப்பவர்களை எதிரிகளாகவோ குற்றவாளிகளாகவோ எவரும் கருத முடியாது. அவர்களை உதாசீனப்படுத்துவதும் ஏற்புடையதல்ல. அத்தகைய கருதுகோளில் எவரும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கவும் முடியாது.

இத்தகைய ஒரு நிலைமையிலேயே மஹர சிறைச்சாலையில் போராட்டம் நடத்திய கைதிகள் அதிகார தரப்பினரால் – அரச தரப்பினரால் அதிகார மேலாதிக்க நிலையில் அணுகப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் மீது அதிடிப்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதில் 11 கைதிகள் உயிரிழந்திருக்கின்றார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ள போதிலும் 71 பேர் படுகாயங்களுக்கு ஆளாகினார்கள். இவர்களில் இருவர் அதிகாரிகள் என்பதும் கவனத்திற்கு உரியது.

சிறைச்சாலை சம்பவத்தின்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு நடவடிக்கையை நியாயப்படுத்தும் வகையிலேயே அரசு தரப்பின் கருத்துக்கள் வெளியாகி இருக்கின்றன.  கொரோனா வைரஸ் தொற்றிப் பரவியதனால் ஏற்பட்ட அச்சம் காரணமாக தங்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டத்திலும் பின்னர் வன்முறைகளிலும் ஈடுபட்ட கைதிகள் சட்டத்தை மீறிச் செயற்பட்டார்கள் என்று அதிகாரிகள் வெளியில் உருவகப்படுத்தி உள்ளார்கள்.

கொரோனா வைரஸ் தொற்று குறித்து கைதிகள் மத்தியில் உயிர்ப்பாதுகாப்பு சார்ந்த அச்ச உணர்வு மேலிட்டிருந்தது. சிறைச்சாலைக்கு வெளியில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான சட்ட நடவடிக்கைகளினால் சிறைக்கைதிகளை அவர்களுடைய உறவினர்கள் பார்வையிடுவது தடுக்கப்பட்டிருந்தது. இதனால் வீட்டில் இருந்து அவர்களுக்குக் கிடைத்து வந்த அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற பொருட்களும் வீட்டு உணவும் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்திருந்தார்கள். இந்த நெருக்கடிகள் உளவியல் ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தி இருந்தது.

சிறைக்கைதிகளின் நெருக்கீடுகளையும் உளவியல் நிலைமைகளையும் அதிகாரிகளும் அரச தரப்பினரும் கவனத்திற்கொள்ளத் தவறிவிட்டனர். அந்த நிலைமைகளுக்கு ஏற்ற வகையில் அவர்களின் போராட்டத்தையும், வன்முறைகளையும் கையாள முயற்சிக்கவில்லை என்றே கூற வேண்டும். மாறாக அதிகார பலத்தின் மூலம் அவர்களை அடக்கிவிடலாம் என்ற முறையிலேயே அவர்கள் நடந்து கொண்டார்கள்.

இந்தத் துப்பாக்கிப் பிரயோக நடவடிக்கையை சாதாரண அசம்பாவித சம்பவம் என்றே காவல்துறை கருதி இருக்கின்றது. கொரோனா வைரஸ் சமூகத்தில் தொற்றிப் பரவாமல் தடுப்பதற்காகவே சிறைச்சாலைகளில் இருந்து தப்பியோட முற்பட்டவர்கள் மீது அதிகார பலம் பிரயோகிக்கப்பட்டது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண கூறியுள்ளார்.

ஏற்கனவே சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றிப் பரவி நிலைமைகளை மோசமடையச் செய்திருக்கின்றது. சமூகத்தில் இருந்தே சிறைக்கைதிகளுக்கும் சிறை அதிகாரிகளுக்கும்கூட கொரோனா தொற்றிப் பரவியுள்ளது. இந்த நிலையில் சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றிப் பரவுவதைத் தடுப்பதற்காகவே போராட்டத்திலும் வன்முறைகளிலும் ஈடுபட்டிருந்த கைதிகள் மீது அதிகார பலம் பிரயோகிக்கப்பட்டது என்ற கூற்று நகைமுரணான நிலையில் வெளியிடப்பட்டிருக்கின்றது.

ஜனாதிபதிக்கு அபகீர்த்தி ஏற்படுத்த பெரும் சூழ்ச்சியாக இந்தச் சம்பவம் அரங்கேற்றப்பட்டதாகவும் இரத்தத்தைப் பார்க்கத் தூண்டும் போதைப் பொருள் நுகரப்பட்டிருந்ததாகவும் அமைச்சர் விமல் வீரவன்ச கொதித்தெழுந்து கூறியுள்ளார்.

மன உளைச்சலுக்குப் பயன்படுத்தப்படும் குளிசைகளை போதைப் பொருளாக சிறைக்கைதிகள் பயன்படுத்தியதனாலேயே அங்கு மோதல்கள் ஏற்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையின் மருத்துவமனையை உடைத்து அருந்திய மனநோய் சம்பந்தமான மருத்துகளும் மற்றும் மருந்துகளுமே அங்கு இடம்பெற்ற பெரும் வன்முறைக்குக் காரணம் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க கூறியுள்ளார்.

அதேவேளை, இந்த சம்பவம் தொடர்பிலான கேள்வி ஒன்றுக்கு நாடாளுமன்றத்தில் பதிலளித்த அப்போதைய சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே இரண்டு மூன்று வாரங்களாக சிறைச்சாலைகளில் ஓர் அலையாக ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன என தெரிவித்தார்.

3c8275fd ede2 42ac be03 d5ce3fa60ec0 மஹர சிறைச்சாலை சம்பவங்கள்: பின்னணியும் விளைவுகளும் -	பி.மாணிக்கவாசகம்

(மஹர சிறைச்சாலை வன்முறைகள் 29 ஆம் திகதி இரவிரவாக இடம்பெற்றதையடுத்து, 30 ஆம் திகதி சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சுப் பொறுப்பில் இருந்து சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே அகற்றப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார சேவைகள், கொள்ளைநோய் மற்றும் கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டார். சிறைச்சாலைகள் நிர்வாகம் மற்றும் கைதிகளுக்கான புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ளார். இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணக் கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சராகவும் அவர் பொறுப்பு வகிக்கின்றார். இவருடைய மஹர சிறைச்சாலை சம்பவங்களை மூடி மறைப்பதற்கான நடவடிக்கைகளை வலுவான முறையில் முன்னெடுப்பதற்காகவே இந்த நியமனம் ஜனாதிபதியினால் செய்யப்பட்டுள்ளது என்று எதிரணியினர் சந்தேகம் வெளியிட்டிருக்கின்றனர்)

அத்துடன் சிறைச்சாலைகளில் 11 ஆயிரம்பேரே இருக்க வேண்டிய இடத்தில் 32 ஆயிரம் பேர் கைதிகளாக வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதை ஏற்றுக் கொண்டிருந்தார். அதேவேளை கொரோனா வைரஸின் இரண்டாவது அலை உருவாகியதையடுத்து, சிறைச்சாலைகளில் அது பரவாமல் தடுப்பதற்கான விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், ஒக்டோபர் 27 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து 1098 கைதிகள் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாகவும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கூறினார்.

இத்தகைய பின்னணியிலேயே சிறைச்சாலைகளில் கைதிகள் பலரும் தங்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடும் என அச்சமடைந்தார்கள். அதனையடுத்து, ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் வெடித்தன. கைதிகளுக்கு பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை சிறைச்சாலை அதிகாரிகள் நிலைமைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அதிகாரத்தைப் பயன்படுத்தி துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது,  உயிரிழப்புக்களும் பெரும் எண்ணிக்கையானோருக்குக் காயங்களும் ஏற்பட்டன.

கைதிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதல்களே பெரும் எண்ணிக்கையானவர்கள் காயமடைவதற்குக் காரணமாகியது என்பது அமைச்சரின் கருத்து. அரசாங்கத்தின் நிலைப்பாடு. ஆக 26 பேர் மாத்திரமே சூட்டுக்காயங்களுக்கு உள்ளாகினார்கள் என்பது அரச தரப்பின் விளக்கம்.

102ffb01 b8cc 41fc b084 18b71e49c37c மஹர சிறைச்சாலை சம்பவங்கள்: பின்னணியும் விளைவுகளும் -	பி.மாணிக்கவாசகம்

ஆனால் சிறைச்சாலைக்குள் வன்முறைகள் இடம்பெற்ற போது அங்கு வெளியில் குழுமிய கைதிகளின் உறவினர்களும் கைதிகளின் பாதுகாப்பு குறித்து கரிசனை கொண்டிருந்தனர். அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் அதிகாரிகளிடம் கோரியிருந்தனர். அத்தகைய ஒரு நிலையிலேயே அங்கு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்புக்கள் நேர்ந்திருந்தன.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தது என்றும் அரச தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. மருத்துவ பரிசோதனைக்கு முன்னதாகவே உயிரிழந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது என அதிகாரிகள் தெரிவித்திருப்பது அந்த சடலங்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தாமல் எரித்து விடுவதற்கான முன்னேற்பாடாகவே கருதப்படுகின்றது.

கொரோனா தொற்று இருப்பதாகக் கூறி அவசரமாக சடலங்களை எரித்து மஹர சிறைச்சாலை சம்பவங்கள் பற்றிய உண்மையான தகவல்களை அரசு மூடி மறைத்துவிடலாம் என்ற சந்தேகத்தை எதிர்க்கட்சியாகிய தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராகிய ஜேவிபி கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.
மஹர சிறைச்சாலை சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி உண்மையைக் கண்டறிவதற்குப் பக்கசார்பற்ற சுயாதீன விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் அரசாங்கத்திடம் கோரியிருக்கின்றனர்.

ஆனால், இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு குழு நிலையிலான விசாரணைகளுக்கே உத்தரவிடப்பட்டிருக்கின்றது. இதற்கமைய நான்கு குழுக்கள் விசாரணைகளை நடத்தும் என்று அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமாகிய உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். சிறைச்சாலை நிர்வாகம், சிறைச்சாலை இராஜாங்க அமைச்சு, நீதி அமைச்சு, புலனாய்வுப் பிரிவு ஆகிய நான்கு பிரிவுகளின் குழுக்கள் இந்த விசாரணைகளை நடத்தவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த விசாரணைகளின் பின்பே அடுத்த கட்ட நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலை சம்பவம் குறித்து ஐ.நா மன்றமும் சர்வதேச மன்னிப்பச் சபையும் கவனம் செலுத்தி உள்ளன. இலங்கைக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநி ஹனா சிங்கர் உரிய விசாரணைகளின் மூலம் இந்தச் சம்பவம் தொடர்பான உண்மை நிலைமைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை தேவை என சர்வதேச மன்னிப்புச்சபை கோரியுள்ளது.

சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்துவதற்கு இதுவோர் உரிமை மீறல் சார்ந்த ஒரு விடயம் என்பதே காரணம். அதுவும் சிறைச்சாலையில் அரச பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆயுத ரீதியானதொரு நடவடிக்கை என்பதும் இதற்கு வலு சேர்த்துள்ளது.

மொத்தத்தில் உள்ளூரிலும், சர்வதேச அளவிலும் மஹர சிறைச்சாலை சம்பவம் அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை உருவாக்கி உள்ளது. குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் இந்தச் சம்பவம் அரசுக்கு எதிரான மன உணர்வை ஏற்படுத்துவதற்கு வழி வகுத்திருப்பதையே காண முடிகின்றது.

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் யுத்தம் நிறைவடைந்து பதினொரு ஆண்டுகள் முடிவடைந்துவிட்ட போதிலும், அரசு பாராமுகமாகவும் அவர்களைப் பழிவாங்கும் போக்கிலும் நடந்து கொள்கின்ற சூழலில் சிங்களக் கைதிகள் மீது மஹர சிறைச்சாலையில் கட்டவிழ்த்து விடப்பட்ட அதிகார முறையிலான அடக்குமுறை நடவடிக்கையானது, அரசாங்கத்தின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தி உள்ளதாகவே கருதப்படுகின்றது.

கொரோன வைரஸ் தடுப்புச் சட்ட நடைமுறைகளை சிறைக்கைதிகள் விடயத்தில் அரசு கையாண்டுள்ள சூழலில் தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை என்ன, அவர்கள் எத்தகைய சிரமங்களுக்கும் கஸ்டங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளாகி இருக்கின்றார்கள் என்பது தனியாக ஆராயப்பட வேண்டிய விடயமாகும்.

Leave a Reply