மலையக சமூகத்தில் அழுத்தத்தை அதிகமாக்கியுள்ள கொரோனா – துரைசாமி நடராஜா

உலகில் பின்தங்கிய சமூகங்களின் வரிசையில் மலையக மக்களும் உள்ளீர்க்கப் படுகின்றனர். இவர்கள் பல்துறை சார்ந்த அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு இன்னும் பகீரதப் பிரயத்தனத்தையும்  மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனிடையே கொரோனா பேரிடர் மலையக மக்கள் உள்ளிட்ட பின்தங்கிய சமூகங்களின் மேலெழும்புகையில் கணிசமான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்கங்கள் எத்தகையன ? என்பதனை உலக சுகாதார நிறுவனமும், யுனிசெப் நிறுவனமும் பட்டியல்ப்படுத்தியுள்ளன. இவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் அந்நிறுவனங்கள் கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும் .

கொரோனாவின் உக்கிரம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா உலகிற்கு எப்போது விடை கொடுக்கும் என்று மக்கள் ஏங்கித் தவிக்கின்றனர். உலகலாவிய ரீதியில் அன்றாடம் இலட்சக் கணக்கானோர் புதிதாக தொற்றுக்கு உள்ளாகின்றனர், அத்துடன் மரணங்களின் தொகையும் வேகமாக அதிகரித்து வருகின்றது. கொரோனாவின் உக்கிரத்தால் பசி, பட்டினி, பஞ்சம் என்பன தலைவிரித்தாடுகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் கேள்விக்குறியாகி இருக்கின்றது. இதனிடையே இந்தியாவின் நிலைமைகள் நமது கண்களையும் குளமாக்கிக் கொண்டிருக்கின்றன. தமது உறவுகள் கண்முன்னே கதறித் துடித்து உயிர்விடும் கொடுமை அன்றாடம் அங்கு நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இதனிடையே சில வக்கிர எண்ணம் கொண்டவர்கள் திருட்டு உள்ளிட்ட பல்வேறு சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றபோதும், மனிதம் இன்னும் மரணிக்கவில்லை என்பதற்கு சாட்சியாக நல்லுள்ளம் கொண்டவர்கள் பலர் தம்மாலான உச்சகட்ட உதவியினை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த முன்மாதிரியான நிகழ்வு பலருக்கும் எடுத்துக் காட்டாக உள்ளது.

மலையக நிலை

கொரோனா பின்தங்கிய மக்களின் வாழ்க்கையை மேலும் அதள பாதாளத்திற்கு தள்ளியுள்ளது. இதில் மலையக மக்களும் விதிவிலக்காகி விடவில்லை. ஏற்கனவே பொருளாதாரம், சமூக வாழ்க்கை, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளிலும் மலையக மக்கள் பின்தங்கிய வெளிப்பாட்டினைக் கொண்டுள்ள நிலையில், கொரோனா இந்நிலைமைகளை மேலும் அதிகரிக்கச் செய்திருக்கின்றது. மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பதற்கு ஒப்பாக கொரோனாவின் இந்தச் செயற்பாடு அமைந்திருக்கின்றது. கொரோனாவின் தாக்கம் காரணமாக தோட்டத் தொழிற்றுறையில் தொழில் புரிவதற்கு தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளார்கள். தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு குறைவாக உள்ள நிலையில், இதனை அதிகரிப்பதற்கான அழுத்தங்கள் நீண்ட காலமாகவே இடம்பெற்று வருகின்றன. எனினும் நிலைமைகள் இன்னும் சாத்தியப்படாது முன்னைய நிகழ்வுகளே தொடர்ந்து கொண்டிருக்கின்றன.  .

பின்தங்கிய சமூகம் என்ற அடிப்படையில் மலையக மக்களின் குரல்வளையைக் கொரோனா அதிகமாகவே நசுக்கி வருகின்றது. நுவரெலியா, கண்டி, பதுளை, மாத்தளை என்று மலையக மாவட்டங்களை கொரோனா இப்போது ஆக்கிரமித்துள்ளது. நுவரெலியாவில் இன்ஜஸ்ரி, போடைஸ் போன்ற பல  இடங்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொத்மலை, கம்பளை போன்ற பல இடங்களிலும் கொரோனா நோயாளர்கள் அதிகமாக இனங்காணப்பட்டுள்ளனர். நுவரெலியாவில் வசந்த காலத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட மக்களின் வருகை அதிகரிப்பு கொரோனா தீவிரமடைவதற்கு வழிவகுத்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது. கொரோனா பயத்தினால் மலையகத்தின் பல நகரங்கள் வெறிச்சோடியுள்ளன. இதனிடையே மலையகத்தில் உரியவாறு கொரோனா பரிசோதனைகள் இடம்பெறாததால் மேலும் பலருக்கும் கொரோனா தொற்று இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகின்றது. இந்நிலையில் பெருந்தோட்டப் பகுதிகளில் பி.சி.ஆர்.பரிசோதனைகளை விஸ்தரிக்க வேண்டுமென்று புத்திஜீவிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே கொரோனாவின் ஆதிக்கத்தால் பின்தங்கிய சமூகங்கள் எதிர்நோக்கியுள்ள சவால்களை உலக சுகாதார நிறுவனமும், யுனிசெப் நிறுவனமும் பட்டியலிட்டுக் காட்டியுள்ளன. இவையனைத்தும் மலையக மக்களுக்கும் பொருந்துவதாக உள்ளது.

கலாச்சாரத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பயனுள்ள விடயங்களை சமூகத்திற்கு பெற்றுக் கொடுப்பது கல்வி என்பார்கள். மனிதர்களிடையே மறைந்திருக்கும் திறமைகளை கல்வி வெளிக்கொணர்கின்றது. இந்த நிலையில் பூரணத்துவமான கல்வியைப் பெற்றுக் கொள்வதில் பல்வேறு சவால்கள் காணப்படுகின்றன. இதனடிப்படையில் கொரோனா பின்தங்கியோரின் கல்விக்கு ஆப்பு வைத்திருக்கின்றது. மலையக மாணவர்கள் உள்ளிட்ட பின்தங்கிய மாணவர்களுக்கு பாடசாலைக் கல்வியைத் தவிர வேறு பிரதான மார்க்கங்கள் எதுவுமில்லை. இணையவழிக் கல்வி என்பது மலையக மாணவர்களைப் பொறுத்தவரையிலே பூரண வெற்றியளிக்கவில்லை என்பதனை கடந்த கால ஆய்வுகள் பலவும் வெளிப்படுத்தியுள்ளன. பாடசாலையானது கல்வியோடு மேலும் பல சேவைகளையும்  மாணவர்களுக்கு வழங்குகின்றது. இந்த சேவைகளுக்கு கொரோனா முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றது. ஒரு சமூகம் கல்வியில் மேலெழும்பாத போனால், அதன் அபிவிருத்தி கேள்விக்குறியாகும். இந்த நிலையில் கொரோனாவின் தீவிரம் மலையக கல்விக்கு இடையூறாகி இருக்கின்றது.

ceylon tea plantations sri lanka மலையக சமூகத்தில் அழுத்தத்தை அதிகமாக்கியுள்ள கொரோனா - துரைசாமி நடராஜா

மாணவர்களின் உளவியல் சார்ந்த பிரச்சினைகளுக்கு பாடசாலைகள் தீர்வினைப் பெற்றுக் கொடுக்கின்ற அதேவேளை உடலியல் சார்ந்த அபிவிருத்திக்கும் தோள் கொடுக்கின்றன.பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் ஆலோசனை வழிகாட்டல் செயற்பாடுகள் மாணவர்களின் உளவியல் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக் கொடுத்து கல்விப் பாதையில் அவர்களைப் பயணிக்கச் செய்கின்றன. மலையக மாணவர்கள் அதிகளவு கல்விச் சிக்கல்களை  எதிர்கொள்ளும் போது பாடசாலைகளின் மூடுகையானது அவர்களின் உளவியல் பிரச்சினைகளை அதிகமாக்கியுள்ளது.

பாடசாலைகள் பலவற்றில் போசாக்கு உணவு வழங்கப்படுகின்றது. மலையக பின்தங்கிய பாடசாலைகள் இதில் அதிகமாகவே உள்ளீர்க்கப்பட்டுள்ளதனைக் காணலாம். இந்திலையில் கொரோனாவால் பாடசாலைகள் மூடப்படுவதால் மாணவர்களின் போசாக்கு நிலைமைகள் சரிவடைகின்றன. இது அவர்களின் கற்றல் நடவடிக்கைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. ஆசிரியர்கள் பாடத்திட்டத்தை பூர்த்தி செய்வது தொடர்பில் பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு வருகின்றார்கள். மாணவர்கள் பாடசாலைகளுடன் தொடர்பற்று காணப்படுவதானது திட்டமிட்ட அடிப்படையில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு குந்தகமாக அமைந்துள்ளது. இதனால் ஆசிரியர்கள் குழப்பகரமான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். மேலும் தொழிநுட்பம் சார்ந்த அறிவு சில ஆசிரியர்களுக்கு காணப்படாத நிலையில், சமகாலத்தில் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் அவர்கள் இடர்ப்படுகின்றார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கான விசேட கற்பித்தல் ஏற்பாடுகளும் கொரோனாவால் தடைப்பட்டுள்ளன.

மலையகப்  பெற்றோர்களின் கல்வி நிலைமைகள் திருப்தி தராத நிலையில், அவர்கள் மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்கு உதவக்கூடிய வாய்ப்புகள் காணப்படவில்லை. இந்நிலையில் அவர்கள் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை வீட்டில் இருந்து முன்னெடுப்பதற்கு இயலாதவர்களாக உள்ளனர். தொலைக்கல்வி போன்ற பல செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு அம்மக்களின் வறுமை நிலை தடையாக உள்ளது. பிள்ளைப் பராமரிப்பிலும் பல இடைவெளிகள் தோன்றுகின்றன. பாடசாலைக்குச் செல்லாத பிள்ளைகள் வீட்டில் தங்கி இருக்கின்றார்கள். ஆனால் பெற்றோர்கள் வேலைக்குச் சென்று விடுகின்றனர். இந்நிலையில் பிள்ளைகளின் நடவடிக்கைகள் எவ்வாறு அமைகின்றன? என்பது குறித்து பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவர்கள் வீட்டில் இருந்து படிக்கின்றார்களா? என்பதற்கு எவ்விதமான உத்தரவாதமும் கிடையாது. சகபாடிகளின் அழுத்தங்களுக்கு அவர்கள் அதிகமாகவே உள்ளாகின்றனர். இதனிடையே பெற்றோர் வேலைக்குச் செல்லும் போது வீட்டில் தங்கி இருக்கும் பிள்ளைகள் பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கும் உள்ளாகி வருவதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா நிலைமை காரணமாக நகர்ப் புறங்களில் வேலை இழந்து தற்போது மலையகத்திற்கு வருகை தந்துள்ள இளைஞர்களின் வருகை இதனை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. பிள்ளைகள் மீதான சுரண்டல்கள், வன்முறைகள் அதிகமாகியுள்ளன.

லயத்து வாழ்க்கை

unnamed 7 மலையக சமூகத்தில் அழுத்தத்தை அதிகமாக்கியுள்ள கொரோனா - துரைசாமி நடராஜா

பெற்றோர் பிள்ளைகளை பல துஷ்பிரயோகங்களில் இருந்தும் பாதுகாப்பதற்கு வீட்டில் இருக்க வேண்டி நேரிடின், அவர்களின் பொருளாதாரச் சுமை பன்மடங்கு அதிகரிக்கும் அபாயமுள்ளது. பின்தங்கிய சமூகம் என்ற வகையில் சுகாதார பராமரிப்பு முறைகளில் மலையக மக்கள் குறைபாடுகள் பலவற்றையும் கொண்டிருக்கின்றனர். கொரோனா போன்ற நிலைமைகளை அதிகரிக்கச் செய்வதில் அவர்களின் வாழ்விடம் அதாவது லயத்து வாழ்க்கை நிலைமைகள் கணிசமான தாக்கம் செலுத்துகின்றன. லயன் அறைகளில் நிலவும் சுகாதார சீர்கேடுகள் கொரோனா பரவுகையை அதிகப்படுத்துகின்றன. பாடசாலைகள் அடிக்கடி மூடப்படுவதன் விளைவால் மாணவர்களின் கல்வி ஈடுபாடு குறைவடையும். மாணவர் இடைவிலகல் நிலைமைகள் அதிகரிப்பதற்கும் இது உந்துசக்தியாகும். இதனிடையே மாணவர்களை மீளவும் பாடசாலைக்குள் உள்வாங்குவதென்பது மிகவும் சிரமமான காரியமாகும். அவர்களின் கவனம் வேறு திசைகளில் செல்லுவதுடன், மீண்டும் கல்வி அல்லது பாடசாலை மீதான கவனத்தை நிலை நிறுத்தச் செய்வது இலகுவான காரியமல்ல.

பாடசாலைகளில் மனித இடைத் தொடர்புகள் காணப்படுகின்றன. இது மாணவர்களின் கல்வி அபிவிருத்தி உட்பட மேலும் பல அபிவிருத்திகளுக்கும் அச்சாணியாக அமைகின்றது. பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் இடைத் தொடர்புகள் செயலிழந்திருக்கின்றன. இதனால் மாணவர்களின் மேம்பாடு வீழ்ச்சி கண்டிருக்கின்றது. கற்றலில் முக்கியமான ஒரு விடயமாக அளவீடு காணப்படுகின்றது. எனினும் பாடசாலை செயற்படாமையானது மாணவர்களின் கல்வியை அளவிடுவதற்கான வாய்ப்புகளைத் தட்டிப் பறித்துள்ளது. இப்போது அளவீடுகளுக்கு இடமில்லாமல் போயிருக்கின்றது.

பிள்ளைகளுக்கும், பெற்றோர்களுக்கும் இடையிலான அழுத்தங்கள் இப்போது அதிகரித்திருக்கின்றன. பிள்ளைகள், பெற்றோரின் கருத்துக்களை புறந்தள்ளுகின்ற அல்லது பெற்றோருக்குக் கீழ் படியாத ஒரு நிலைமையுமுள்ளது. இது முரண்பாடுகள் தலைதூக்குவதற்கு இடமளித்திருக்கின்றது. இவற்றோடு பிள்ளைகள் சிறுவர் தொழிலாளர்களாக செல்லுகின்ற ஒரு நிலைமையும் காணப்படுவதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலைமையானது பாரிய பின் விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடியதாகும். சமூகத்தின் வீழ்ச்சிக்கு இத்தகைய நிலைமைகள் அடித்தளமாகும். உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெப் நிறுவனம் கொரோனாவின் பலவித பாதிப்பு குறித்து சுட்டிக்காட்டியுள்ள நிலையில் இவற்றிலிருந்து மீண்டெழுந்து கல்வி மற்றும் சமூக மேம்பாட்டிற்கு வித்திடுதல் வேண்டும்.       .

மலையகக் கல்வி ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்து மேலெழுந்து இப்போது ஒரு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. ஆரம்பப் பிரிவு கல்வி நிலை வளர்ச்சி கண்டுள்ளபோதும் இடைநிலை மற்றும் உயர்கல்வி தொடர்பில் இன்னும் பல்வேறு அபிவிருத்தி இலக்குகளையும் அடைய வேண்டியுள்ளது. பல்கலைக்கழகம் செல்லும் மலையக மாணவர் தொகையையும் அதிகரிக்க வேண்டியுள்ளது. இத்தகைய ஒரு நிலையில் கொரோனா மேலெழும்பும் கல்விச் சூழலையும், ஏனைய பல துறைகளையும் மழுங்கடிக்கச் செய்துள்ளது என்று கூறும் பேராசிரியர் சோ. சந்திரசேகரன், தொலைக்கல்வி மற்றும் தொழில்நுட்பத்துறையில் கல்விச் சமூகத்தினரும், பெற்றோரும் விழிப்புணர்வு பெற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா எப்போது உலகை விட்டுப் போகும் என்று சொல்ல முடியாதுள்ளது. இந்நிலையில் மலையக மக்கள் உரிய சுகாதார வழிமுறைகளைப் பேணி அதிலிருந்தும் பாதுகாப்பு பெற்றுக் கொள்ள முனைய வேண்டும். அதாதோடு கொரோனாவுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தமது செயற்பாடுகளை திட்டமிட்டு முன்னெடுக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்.