Tamil News
Home செய்திகள் மலையகம்: தீர்மானிக்கும் சக்தி-  துரைசாமி நடராஜா

மலையகம்: தீர்மானிக்கும் சக்தி-  துரைசாமி நடராஜா

புதிய உலகை சிருஷ்டிக்கும் சிற்பிகளாக இளைஞர்கள் காணப்படுகின்றனர். இவர்களால் வரலாறு நல்லபடியாக மாற்றியமைக்கப்படுகின்றது.

இந்த வகையில் இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள இளைஞர் விழிப்புணர்வு நாட்டின் ஜனநாயக உறுதிப்பாட்டிற்கும் ஊழலற்ற அரசியல் கலாசாரத்திற்கும் வித்திடுவதாக அமையும் என்று நம்பப்படுகின்றது.

இதனிடையே மலையக இளைஞர் குறித்து நோக்குகையில் இவர்களிடையே ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டு அரசியல் உள்ளிட்ட சகல துறைகளினதும் அபிவிருத்திக்கு அது அத்திபாரமாக அமைய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இலங்கையின் இளைஞர் சமூகம் கடந்த காலத்தில் பல்வேறு நெருக்கீடுகளையும் சந்தித்திருக்கின்றது.இப்போதும் சந்தித்து வருகின்றது. முப்பது வருடங்களுக்கும் மேலாக இலங்கையின் வடபகுதியில் நிலவிய கொடிய யுத்தம் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உயிரிழப்பதற்கு ஏதுவானது.

இதேவேளை எஞ்சியுள்ள இளைஞரிடையேயும் புதிதாக இளைஞர் பரம்பரையில் சேருவோரிடையேயும் இவை ஒரு வித மனச்சோர்வையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளதாக பேராசிரியர் மு.சின்னத்தம்பி குறிப்பிடுகின்றார்.

மேலும் இதன் விளைவாக அவர்களிடையே தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.வறுமை, வேலையின்மை, கல்வியறிவின்மை, இன் ரீதியானதும், அரசியல் ரீதியானதுமான பாரபட்சங்கள், அரசியல் பழிவாங்கல்கள், இன மற்றும் சாதி அடக்குமுறைகள், முக்கிய தீர்மானங்களை மேற்கொள்வதில் அவர்களுக்குப் பங்கின்மை போன்ற சமூக பொருளாதார காரணிகள் அவர்களிடையே பொதுவானதொரு அமைதியின்மையை உருவாக்கியுள்ளன.

மனவிரக்தி, பல்வேறு காரணங்களால் திருமண வயது பின்போடப்படல், இளைஞரிடையே ஏற்படும் காதல் விவகாரங்களை மரபு சார்ந்த சமூகப் பெறுமானங்கள் காரணமாக பெற்றோர் புறக்கணித்தல் போன்றனவும் அவர்களிடையே பொதுவாக காணப்படும் பிரச்சினைகளாகவுள்ளன என்றும் பேராசிரியர் சின்னத்தம்பி குறிப்பிடுகின்றார்.

எமது நாட்டு இளைஞர்களின் கருத்துக்கள் அங்கீகரிக்கப்பட்டு  உரிய  இடமளிக்கப்படாமை, தலைமைத்துவ பதவிகளில் அவர்கள் மீதான புறக்கணிக்கப்பு, இளைஞர்களுக்கு எல்லா துறைகளிலும் உரிய வழிவிடாமை என்பன போன்ற பல நிலைமைகள் இளைஞர்களின் அதிருப்திக்கு வித்திடுகின்றன என்பதனையும் மறுப்பதற்கில்லை.

இதனால் மேலெழும்பும் விபரீதங்கள் நாட்டை ஆட்டம் காண வைத்துவிடுவதோடு சர்வதேசத்தின் மத்தியில் தலைகுனியும் நிலையையும் ஏற்படுத்தி விடுகின்றது. இலங்கையின் நிலைமைகள் இதற்கு அதிகமாகவே  சான்று பகர்வதோடு இளைஞர்களை புறக்கணித்ததால் இலங்கையின் தேகத்தில் ஏற்பட்ட தழும்புகளும் இன்னும் மாறவில்லை.

கீழ்நிலைத் தொழில்

இதனிடையே மலையக இளைஞர்கள் தொடர்பில் நாம்  நோக்குகின்றபோது  இவர்களின் பிரச்சினைகள் பல்வேறு பரிமாணங்களையும் கொண்டதாக அமைந்திருக்கின்றன.தொழில் நிலையில் இவர்களுக்கான வாய்ப்புகள் பெரிதும் விரிவுபடுத்தப்படாத நிலையில் கீழ்மட்டத் தொழில்களிலேயே இவர்கள் அதிகமாக இருந்து வருகின்றமையும் தெரிந்ததாகும்.

கல்வி நிலைப் பின்னடைவு, தொழில் ரீதியான பயிற்சியின்மை என்பனவும் இதில் தாக்கம் செலுத்துகின்றன.ஒருவனது கல்வியறிவும் அவன் செய்யும் தொழிலுமே அவனது சமூக அந்தஸ்தை நிர்ணயிக்கும் இரு பிரதான காரணிகளாகும்.இந்த நிலையில் ஏனைய சமூகங்களோடு ஒப்பீட்டு ரீதியில் நோக்குகையில் தோட்டத்துறை சார்ந்த இளைஞர்கள் இந்த இரண்டிலுமே பின்தங்கியுள்ளனர் என்பதும் புத்திஜீவிகளின் கருத்தாகவுள்ளது.

இத்தகைய இளைஞர்களின் அபிவிருத்தி கருதி மலையக அரசியல்வாதிகளோ அல்லது தொழிற்சங்கவாதிகளோ எத்தகைய காத்திரமான முன்னெடுப்புக்களையும் மேற்கொண்டதாக இல்லை.தேர்தல் காலத்தில் இளைஞர்களை மயக்க நிலையில் வைத்திருக்கும் அரசியல்வாதிகள் கொடி கட்டுவதற்கும் , தம்மைப் பற்றி துதிபாடுவதற்கும் இவர்களை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.தேர்தல் முடிந்தவுடன் தாம் வழங்கிய வாக்குறுதிகளை அரசியல்வாதிகள் காற்றில் பறக்கவிடுவதனைப் போன்றே இளைஞர்களையும் பறக்கவிட்டு விடுகின்றனர்.தமக்கு உதவிய இளைஞர்களின் முகத்தில் சேறு பூசுவதே அவர்களின் வாடிக்கையாக உள்ளது. போதாக்குறைக்கு சாதியை மையப்படுத்தி இளைஞர்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும் கைங்கரியத்திலும் சில அரசியல்வாதிகள் ஈடுபட்டு வருவதும் புதிய விடயமல.

தேசிய ரீதியில் இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பலவும் இடம்பெறுகின்றன.இவ்வேலைத்திட்டங்களில் கிராமிய இளைஞர்கள் அதிகமாக உள்ளீர்க்கப்பட்டு அவர்களின் நலன்கள் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றன.சுயதொழில் வாய்ப்புக்கான உதவிகள் பலவும் இதில் உள்ளடங்கும்.எனினும் பெருந்தோட்ட இளைஞர்கள் தேசிய வேலைத்திட்டங்களில் பெரும்பாலும் உள்ளீர்க்கப்படாத ஒரு நிலையே காணப்படுகின்றது.

பெருந்தோட்ட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர்  தரிசு நிலங்கள் காணப்படுகின்றன. இத்தரிசு நிலங்களில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேனும் இளைஞர்களுக்கு இடமளிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.இது குறித்த தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு கம்பனியினர் தொடர்ச்சியாகவே செவிசாய்க்காதுள்ளனர்.இதனால் சமகால பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இளைஞர்களின் பொருளாதாரம் மேலும் இறுக்கமடைந்துள்ளது.

மலையக இளைஞர்கள் ஆளுமை மிக்கவர்களாக விளங்குகின்றனர். அவர்களுக்கு சரியான பாதை காண்பிக்கப்படுமிடத்து வெற்றியின் உச்சத்தை தொடக் கூடிய வாய்ப்பு அவர்களில் பலருக்கு இருக்கின்றது. எனினும் இதனை மையப்படுத்திய செயற்பாடுகள் இடம்பெறாத நிலையில் அவர்களை மழுங்கடிக்கும் செயற்பாடுகளே தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இளைஞர்களின் எழுச்சி கருதி  அனைவரும் புரிந்துணர்வுடன்  செயற்படுவது அவசியமாகும்.

நாட்டின் சமகால அரசியல் நாற்றமெடுத்துள்ளது.சீனா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிடம்  மேலும் மேலும் கடன் மேல் கடன் வாங்கி குவித்துக் கொண்டிருக்கும் இலங்கை, வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றது.இதனால் பொருளாதாரம் சீர்குலைந்து நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது .இலங்கைக்கு எல்லா திசைகளிருந்தும் அடிமேல் அடி விழுந்து கொண்டிருக்கின்றது. தமது நலன்களுக்காக இனவாதத்தை பரப்பி அப்பாவி மக்களை வைத்து குளிர்காய்ந்த ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளால் நாடு தள்ளாடிக் கொண்டிருக்கின்றது.

எனினும் இனவாதத்தை தோற்கடித்து ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி, ஊழலற்ற அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் தற்போது நாட்டின் இளைஞர் சமுதாயம் துடிப்புடன் களமிறங்கி இருக்கின்றது.பல்வேறு அர்ப்பணிப்புகளுக்கும் மத்தியில் இளைஞர்கள் மனவுறுதியுடன்  பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்களின் திறமைகளுக்கு ஒரு களமாக ஏற்கனவே காலிமுகத்திடல் அமைந்திருந்ததோடு அரசுக்கு எதிரான தமது எதிர்ப்புக்களை அவர்கள் பல்வேறு முறைகளிலும் வெளிப்படுத்துகின்றனர்.

காலிமுகத்திடலில் தேசிய கீதத்தை தமிழில் இசைத்தமை, நோன்புபெருநாள் விருந்துபசார நிகழ்வில் கலந்து கொண்ட ஓமல்பே சோபித்த தேரர் உட்பட்டோருக்கு கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் தானம் வழங்கியமை, சர்வமத வழிபாடுகள், சர்வமத தலைவர்களின் ஒன்றிணைந்த உறுதிமொழிகள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் இனவாதம் பேசுவோரை வாயடைக்கச் செய்திருந்தன. அத்தோடு இனியும் இந்த நாட்டில் அரசன் முதல் ஆண்டி வரை இனவாதம் எடுபடாது என்ற செய்தியினை உலகறியச் செய்துமுள்ளன.போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆற்றல்மிக்க இந்த இளைஞர்களின் செயற்பாடுகள் மலையக இளைஞர்களுக்கு ஒரு பாடமாகும்.

தீர்மானிக்கும் சக்தி

மலையக சமூகத்தின் நிறைவேற்றப்படாத தேவைகள் அதிகமுள்ள நிலையில் மலையக அரசியல்வாதிகளின் வகிபாகம் இத்தேவைகளை நிறைவேற்றுவதில் எந்தளவுக்கு உள்ளது என்பது குறித்து பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகின்றன.இந்திய வம்சாவளி மக்களின் பிரசாவுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து இம்மக்கள் அரசியலில் அஸ்தமன நிலையினை அடைந்திருந்தனர்.

எனினும் 1988 இல் மீண்டும் ஐ.தே.க. பிரசாவுரிமை மற்றும் வாக்குரிமை என்பவற்றை வழங்கியதைத் தொடர்ந்து அரசியலில் மலையக மக்கள் ஆழக்கால் பதிக்கும் நிலைமை மேலெழுந்தது.எனினும் இந்த ஆழக்கால் பதிப்பு எந்தளவுக்கு மலையக மக்களின் தேவைகளை தீர்த்து வைத்தது என்ற வினா மேலெழும்புகின்றது.

தற்போது பொதுஜன முன்னணி அரசியல் ரீதியாக ஓரங்கட்டப்படும் அபாயம் மேலெழுந்துள்ள  நிலையில் எதிர்கட்சி மலையக அரசியல்வாதிகள் இப்போது அடுத்து வரும் ஆட்சியில் அமைச்சுப் பதவியினை பெற்றுக் கொள்ளும் முனைப்பில் உள்ளனர்.இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மஹிந்தவுடனான 15 வருட  காதலை முறித்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் கை கோர்த்து செயற்படுகின்றது.

மலையக அரசியல் நிலவரம் இவ்வாறாக போய்க் கொண்டிருக்கும் நிலையில் மலையக இளைஞர்கள் அடுத்த அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக உருப்பெற வேண்டும்.நேர்மையான அரசியல் கலாசாரம், பணத்துக்கு விலைபோகாத பண்பு, பொது நோக்கு, உரிமைக்க்கு உத்தரவாதம் என்பவற்றை தாரக மந்திரமாக கொண்ட அரசியல்வாதிகளை தெரிவு செய்யவேண்டும்.

மலையக இளைஞர்களும் பணத்துக்கு அடிமையாகிவிடக் கூடாது.”புத்திசாலிகள் அரசியலுக்கு செல்லாவிட்டால் முட்டாள்கள் நம்மை ஆளநேரிடும்” என்று சொல்லக் கேட்டிருக்கின்றோம்.இந்த கருத்தை மலையக இளைஞர்கள் ஆழமாக மனதிறுத்திக் கொள்ள வேண்டும்.மலையக இளைஞர் சமூகம் தற்போது கல்விமையச் சமூகமாக உருவெடுத்து வருகின்றது. எனவே அரசியலில் இளைஞர்களின் கால்பதிப்பு பல்வேறு சாதக விளைவுகளுக்கும் அடித்தளமாக அமையும். அரசியலோடு மட்டுமே நின்றுவிடாது ஏனைய துறைகளின் அபிவிருத்தி கருதியும் இளைஞர்களின் கவனம் திரும்ப வேண்டியதும் மிகவும் இன்றியமையாததாகும்.

Exit mobile version