“மலாலா, உங்களுக்கும் உங்கள் தந்தைக்கும் நாங்கள் கொடுக்க வேண்டியுள்ளது. நாங்கள் இரண்டாவது முறை உங்கள் வாழ்க்கையை எடுக்கும்போது அதில் எந்தத் தவறும் இருக்காது” என்று (Malala Yousafzai) மலாலா யூசுப்சாயைத் தலையில் சுட்ட தலிபான் தீவிரவாதி, அவருக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பதிவு சமூக வலைதளத்தில் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் ட்விட்டர் அப்பக்கத்தை முடக்கியது.
This is the ex-spokesperson of Tehrik-i-Taliban Pakistan who claims responsibility for the attack on me and many innocent people. He is now threatening people on social media. How did he escape @OfficialDGISPR @ImranKhanPTI? https://t.co/1RDdZaxprs
— Malala (@Malala) February 16, 2021
இதனைத் தொடர்ந்து மலாலா அந்தப் பதிவைக் குறிப்பிட்டு, “இவர் தலிபான்களின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் இஹ்ஸானுல்லா இஹ்சன் . நான் உட்பட பல அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்குக் காரணமானவர். இவர் எவ்வாறு சமூக வலைதளத்தில் மக்களை மிரட்ட முடியும். அவர் எவ்வாறு சிறையிலிருந்து தப்பித்தார்” என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானைக் குறிப்பிட்டுக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தானைத் சேர்ந்த மலாலா யூசுப்சாய், பெண்களின் கல்விக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். 15 வயதுச் சிறுமியாக இருந்த அவரை 2012-ம் ஆண்டு தலிபான் தீவிரவாதிகள் சுட்டனர். கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில், உயர் தப்பினார் மலாலா.
உயிருக்கு ஆபத்து ஏற்பட்டபோதிலும் தொடர்ந்து பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காகக் குரல் கொடுத்தார் மலாலா. இதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்குக் கிடைத்தது. உலகிலேயே மிகவும் இளம் வயதில் நோபல் பரிசு பெறுபவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனார்.
இந்நிலையில் தற்போது ஐநா சபை, கடந்த 10 ஆண்டுகளில் உலகிலேயே மிகவும் பிரபலமான பதின்பருவத்தினர் என்ற விருதை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.