மற்றொரு இனப்படுகொலைக்கு திட்டமா? கொரோனா பாதுகாப்பில் காட்டப்படும் பாரபட்சம் எழுப்பியுள்ள கேள்விகள் – அகிலன்

403 Views

சென்ற வார மின்னிதழ் கட்டுரை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஆரம்பமாகியுள்ள நிலையில், கொரோனா தொற்றைப் பயன்படுத்தி மற்றொரு இனப்படுகொலைக்கு அரசாங்கம் திட்டமிடுகின்றதா என்ற கேள்வி தமிழ்த் தரப்பினரால் எழுப்பப்பட்டிருக்கின்றது. கொரோனா தொற்று இலங்கை முழுவதிலும் வேகமாகப் பரவி வருவதற்கு அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் தான் காரணம் என்பதை சிங்கள மக்களும் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளமைதான் அரசுக்கு இன்றுள்ள பிரச்சினை.

சிங்கள மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியுள்ள ஒரு நிலையில்தான், வடக்கில் புதிய பிரச்சினைகளைக் கிளப்புவதில் அரசின் கவனம் திரும்பியுள்ளது. இதன் மூலம் சிங்கள மக்களின் எதிர்ப்பைச் சிதறடிப்பது அரசின் நோக்கம். முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அடித்து நொருக்கப்பட்டது இந்தப் பின்னணியில் தான். இராணுவத்தினர் சூழவுள்ள நிலையில், அவர்களுக்குத் தெரியாமல் இந்தச் சம்பவம் இடம் பெற்றிருக்க முடியாது என்பது பொதுவான கருத்து. முள்ளிவாய்காலில் ஒரு சர்ச்சையை உருவாக்க அரசாங்கம் முற்பட்டிருப்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றியவர்களே இன்று அரசுக்கு எதிராக போர்க் கொடி தூக்கியுள்ளார்கள். “ஆட்சியாளர்களை நம்பிய பொது மக்கள் இறுதியாக வீதிகளில் இறந்து கிடக்கும் நிலையை உருவாக்கிவிட வேண்டாம்” என அரசாங்கத்துக்கு கடும் எச்சரிக்கையை விடுத்திருப்பவர் வேறு யாருமல்ல. இந்த அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றிய நாராஹென்பிட்டி அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்ததேரர் தான்  அவர்.

download 4 மற்றொரு இனப்படுகொலைக்கு திட்டமா? கொரோனா பாதுகாப்பில் காட்டப்படும் பாரபட்சம் எழுப்பியுள்ள கேள்விகள் - அகிலன்

2015 இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ராஜபக்சாக்கள் கடும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருந்த நேரத்தில் மஹிந்த ராஜபக்ச ஊடகவியலாளர்களைச் சந்திக்கும் இடமாக இருந்தது இந்த நாராஹென்பிட்டி அபயராம விகாரைதான். சிறீலங்கா சுதந்திரக் கட்சி மைத்திரியின் கைகளுக்குள் சென்றுவிட்ட நிலையில், கட்சியும் இல்லாமல் – அலுவலகமும் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ச புத்துயிர் பெறுவதற்குக் களம் அமைத்துக் கொடுத்தவர் அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தான்.

இன்று அரசாங்கத்தை – அதன் செயற்பாடுகளை விமர்சிப்பவர்களில் முதலாவது இடத்தில் இருப்பவரும் அவர் தான். ராஜபக்சவை ஆதரித்தவர்கள் – அவர்களைப் பதவிக்குக் கொண்டு வருவதற்காகப் பாடுபட்டவர்கள் இன்று கடும் விரக்தியில் இருக்கின்றார்கள் என்பதற்கு முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் கருத்துக்கள் ஒரு உதாரணம். கொரோனாவைக் கட்டுப்படுத்தத் தவறியது மட்டுமன்றி, அது கட்டுமீறி நாட்டுக்குள் பரவுவதற்கு வழிவகுத்ததும் அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகள் தான்.

கொரோனா அச்சுறுத்தலை இராணுவத்தை முன்னிலைப்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும் என்ற கணிப்புடன், காய் நகர்த்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த முயற்சியில் இப்போது தோல்வியடைந்து விட்டார் என்பது வெளிப்படை. இருந்த போதிலும் அதனை ஏற்றுக்கொள்வதற்கு அவர்கள் தயாராக இல்லை என்பதுதான் பிரச்சினை. வெறுமனே பிரசாரங்களின் மூலம் கள நிலைமைகளை மறைத்து விட முடியும் என அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருந்த ஒரு நிலையில் தான் தேரர் இந்தக் கருத்தை முன் வைத்திருந்தார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்த கருத்துக்கள் உண்மையில், மருத்துவ சமூகத்தின், நிபுணர்களின் நிலைப்பாட்டைப் பிரதிபலிப்பதாகவே அமைந்திருந்தது. “கொரோனா விடயத்தில் அரசு இப்போதும் பொய்யான தரவுகளையே கூறுகின்றது. ஆனால், அமெரிக்காவின் வோஷிங்டன் பல்கலைக்கழக அறிக்கையில் இலங்கையில் செப்டெம்பர் மாத மளவில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா மரணங்கள் ஏற்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தரவுகள் அரசிடம் இருந்தாலும் அவர்கள் அதனை வெளிப்படுத்த மறுக்கின்றனர். இப்போதுள்ள நிலைமையில் நாட்டை முறையாக நிர்வகிக்காது விட்டால், ஊழியர்களை முறையாக வழங்க முடியா விட்டால், குறைந்தது இரண்டு வாரங்களேனும் நாட்டை முடக்காது விட்டால் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்”  என்பதுதான் தேரர் வெளியிட்ட எச்சரிக்கை.

கொரோனா முதலாவது அலையின் தாக்கம் இலங்கையில் மோசமானதாக இருக்கவில்லை. அதனால், இவ்வருட நடுப் பகுதிக்குள் இலங்கையில் கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்தி மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவது அரசின் திட்டமாக இருந்தது. இந்தியா, சீனா உட்பட மற்றைய நாடுகளிடமிருந்தும் பெறக்கூடிய தடுப்பூசிகள் மூலம் மக்கள் தொகையில் கணிசமானோருக்கு தடுப்பூசியைப் போட்டு – கொரோனாவைக் கட்டுப்படுத்திய நாடுகளில் ஒன்று என்ற பெருமையுடன் மாகாண சபைகளுக்குச் செல்வதற்கான திட்டம் ஒன்று அரசிடம் இருந்தது.

இந்த நம்பிக்கையில் கள நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றங்களை அரசு துல்லியமாக அவதானிக்கத் தவறியது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் வழமை போல நடைபெற்றன. பொருளாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற பெயரில் கொரோனாவால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த உக்ரேனிலிருந்து நூற்றுக் கணக்கானவர்கள் உல்லாசப் பயணிகளாகக் கொண்டு வரப்பட்டனர். நாடு முழுவதும் அவர்களுக்குச் சுற்றிக் காண்பிக்கப்பட்டது. இவை அனைத்தும் புதிய திரிபு வைரஸ்கள் இலங்கைக்குள் உட்புகுவதற்கான வழியை திறந்து விட்டது.

நிலைமைகள் மோசமடையத் தொடங்கிய போதே மருத்துவ நிபுணர்களும், எதிரணியினரும் நாட்டை இரு வாரங்களுக்காவது முற்றாக முடக்குங்கள், இல்லையெனில் ஆபத்து என்ற கோரிக்கையை வலியுறுத்தினார்கள். கடந்த வாரம் வரையில் அதனை நிராகரித்து – பொருளாதாரம்தான் முக்கியம் எனச் சொல்லிவந்த அரசாங்கம், கடந்த வியாழக்கிழமை முதல் 3 நாட்களுக்கு நாட்டை முடக்கியது.  அதன் பின்னர் இம்மாத இறுதிவரையில் – இரவு நேர ஊரடங்கு உட்பட கட்டுப்பாடுகள் தொடரும் என அரசு அறிவித்திருக்கின்றது.

202004251959455064 Covid19 Sri Lanka extends curfew in high risk districts SECVPF மற்றொரு இனப்படுகொலைக்கு திட்டமா? கொரோனா பாதுகாப்பில் காட்டப்படும் பாரபட்சம் எழுப்பியுள்ள கேள்விகள் - அகிலன்

அதேவேளையில் தடுப்பூசி வழங்குவதிலும் நிறைய குறைபாடுகள். அஸ்டிரா ஜெனேகா தடுப்பூசியை முதலாவது டோஸாகக் கொடுத்த அரசாங்கம், இரண்டு மாத முடிவில் இரண்டாவது ‘டோஸ்’ கொடுப்பதற்கு அஸ்டிரா ஜெனேகா தடுப்பூசி இல்லாததால் தடுமாறுகின்றது. மற்றொரு வகையான தடுப்பூசியை இரண்டாவது டோஸாகக் கொடுக்க இப்போது திட்டமிடப்படுகின்றது. இதனால் ஏற்படக் கூடிய பாதக விளைவுகள் குறித்து மருத்துவர்கள் எச்சரித்துள்ளார்கள். இது போன்ற பல குறைபாடுகள் அரசின் மீதான நம்பகத் தன்மையைத் தகர்த்து விட்டது. அரசை ஆதரித்தவர்களே இன்று அதனை விமர்சிக்கத் துணிந்துவிட்ட நிலைமை, அரசுக்கு நெருக்கடியைக் கொடுக்கத் தொடங்கியுள்ளது.

இந்த நிலைமையில்தான் இனவாதச் செயற்பாடுகளின் மூலமாக சிங்கள மக்களின் கவனத்தைத் திசை திருப்ப அரசாங்கம் முற்படுகின்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு பொலிஸ் நிலையங்களின் மூலம் தடையைப் பெறுவதற்கு அரசு மேற்கொண்ட முயற்சி, நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில்தான் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அடித்து நொருக்கப்பட்டிருக்கின்றது.

இதனைவிட கொரோனாவைக் கட்டுப்படுத்துவதிலும் திட்டமிட்ட முறையிலான புறக்கணிப்பைக் காணக் கூடியதாகவுள்ளது. தென் மாகாணத்தில் – கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றது. அஸ்டிரா ஜெனேகா தடுப்பூசி முடிவடைந்துவிட்ட நிலையில் ரஷ்யாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஸ்புட்னின், சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்ட தடுப்பூசி என்பன வழங்கப்படுகின்றது. பல கட்டங்களாக வழங்கப்பட்டு இரண்டாது டோஸைக் கொடுப் பதற்கும் தயாரிப்புக்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அடுத்ததாக, குருநாகல் மற்றும் மேல் மாகாணத்தில் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால், தமிழ் மக்களின் தாயகப் பகுதிகளான வடக்கு, கிழக்கில் இதற்கான ஏற்பாடுகள் எதுவும் இல்லை. வடக்கில் அதிகளவு கொரோனா நோயாளர்கள் தினசரி இனங் காணப்பட்டு வரு கின்றார்கள். அதனைவிட, தமிழகத்திலிருந்து படகுகள் மூலமாக வருபவர்களின் அச்சுறுத்தலும் வடக்கில் அதிகமாகவுள்ளது. அவ்வாறிருந்தும் போதியளவுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் வடக்கில் மேற்கொள்ளப்படுவதில்லை. பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டாலும், பெறுபேறுகள் உரிய நேரத்தில் வருவதில்லை. இந்த நிலையில், தடுப்பூசி வழங்குவதில் இறுதி நிலையில்தான் வடக்கு, கிழக்கு உள்ளதாகத் தெரிகின்றது.

இதனால்தான், கொரோனா பரவலைப் பயன்படுத்தி மற்றொரு இனப்படுகொலைக்கு அரசாங்கம் திட்டமிடுகின்றதா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.

Leave a Reply