மருதனார்மடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா

153 Views

யாழ். உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மருதனார் மடத்தில் நேற்றுமுன்தினம் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நபரின் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூட பரிசோதனையில் இவ்வாறு தொற்று உறுதியானது என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்

இதன்படி நேற்றுமுன்தினம் தொற்று உறுதியானவரது மனைவி (வயது 38), மகள் (வயது 12), இரு மகன்கள் (வயது 3 – 6), மாமியார் (வயது 63) மற்றும் மைத்துனர் (வயது 25) ஆகியோருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, மருதனார்மடத்தில் வியாபாரிகள் உட்பட 31 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி என நேற்று மாலை வெளியான தகவலை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மறுத்தார்.

முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 2 பேருக்கும் நேற்றைய பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நேற்று 300 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது எனவும், அவர்களில் 8 பேருக்கே கொரோனாத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.

Leave a Reply