மன்னார் மாவட்ட அரச காணிகளை விவசாயிகளுக்கு வழங்க தீர்மானம்

மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச காணிகளை சிறுபோக நெற்செய்கைக்காக வறுமைகோட்டுக்குட்பட்ட விவசாகிகளுக்கு வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக மன்னார் அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார்

இத்த அடிப்படையில், மன்னார் கட்டுக்கரைக் குளத்தின் கீழ் 600 ஏக்கரில் சிறுபோகச் செய்க்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோன்று 400 ஏக்கர் நிலம் உப தானிய செய்கைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இச் செய்கைகளுக்கான புலவுக் காணிகள் வழமைக்கு மாறாக இம் முறை வறுமைகோட்டுக்குட்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

சிறுபோக நெற் செய்கை தொடர்பாக மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்திலேயே அரசாங்க அதிபர் இதனைத் குறிப்பிட்டார்.

இக் கூட்டத்தில் 86 கமக்காரர் அமைப்புக்களும், 10 வாய்க்கால் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். அவர்களுடன் விவசாய திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், நீர்பாசன திணைக்கள அதிகாரிகள் மற்றும் மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக் கூட்டம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

கடந்த காலத்தைபோல் அல்லாது இம்முறை இவ் சிறுபோக நெற்செய்கை வாய்கால் அமைப்புகளுக்கு வழங்காது மிகவும் குறைந்த விவசாய நிலங்களைக் கொண்ட விவசாயிகளுக்கு நேரடியாகவே வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்துக்கு சொந்தமான இந்த 600 ஏக்கர் புலவுக் காணிகளை பத்து வாய்க்கால் அமைப்புக்களின் கீழுள்ள 86 விவசாய அமைப்புக்களிலுள்ள 1200 விவசாயிகளுக்கு அரை ஏக்கர் மூலம் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

ஏழு நாட்களுக்குள் இந்த விவசாயிகளை தெரிவு செய்து இவர்களுக்கு நேரடியாக இப் புலவுக் காணிகளை வழங்குவதற்காக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த 1200 விவசாயிகளுக்கு அரை ஏக்கர் மூலம் வழங்கப்படும் நெற் செய்கை காணியை எவருக்கும் விற்பனை செய்யவோ அல்லது வேறு தேவைகளுக்கோ பயன்படுத்த முடியாது.

தெரிவு செய்யப்பட்ட விவசாயிகள் இவ் விதை நிலத்தில் தாங்களே நெற்செய்கை செய்து பயன்பெற வேண்டும். அத்துடன் மேலதிகமாக இருபது ஏக்கர் விதை உற்பத்தி திணைக்களத்துக்கு பயிர் செய்கை செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நீர்பாசனத்தை நீர்பாசன பணிப்பாளரை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

இவ் விவசாயிகளுக்கு தேவையான உரங்களை கமநல சேவை ஆணையாளர் மூலம் மானிய அடிப்படையில் வழங்குவதற்காக தீர்மானிக்கப்பட்டுள்ளது. 1200 விவசாயிகள் தெரிவு செய்து வழங்கும்பட்சத்தில் எதிர்வரும் 10ஆம் திகதி நெற்செய்கைக்கான கட்டுக்கரைக் குளத்திலிருந்து நீர் திறப்பு செய்வது தொடர்பாக திகதிகள் தீர்மானிக்கப்பட்டு குளத்து நீர் திறந்து விடப்படும் என்றார்.