மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை இலங்கை அரசிடம் கையளிப்பு – அடுத்த வாரம் பதில்?

ஜெனிவாவில் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்படவிருக்கும் விரிவான அறிக்கை கொழும்பு அரசுக்கு கையளிக்கப்பட்டுவிட்டது. அதற்கான இலங்கை அரசின் பதில் அடுத்த வாரமளவில் ஜெனிவாவுக்கு வழங்கப்படுவதற்காக கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்துக்கு கையளிக்கப்படும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் எம்.பியுமான எம்.ஏ.சுமந்திரனிடம் இத்தகவலை வெளியிட்டிருக்கின்றார் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தூதரகத்தின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹனாசிங்கர்.

வழக்கமாக, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் சம்பந்தப்பட்ட அமர்வு நெருங்கும் சமயத்திலேயே அங்கு ஒரு நாடு தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் அல்லது அறிக்கையாளரினால் முன்வைக்கப்பட விருக்கும் அறிக்கை சம்பந்தப்பட்ட நாட்டுக்கு வழங்கப்படும். ஆனால், இலங்கை விடயத்தில் இம்முறை சுமார் பத்து வார காலத்துக்கு முன்னரே கொழும்புக்கு அது கையளிக்கப்பட்டு விட்டது.

அந்த அறிக்கை கவுன்ஸிலில் சமர்ப்பிக்கப்படும் போது, அதற்குத் தான் முன்வைக்கப்போகின்ற பதிலின் விவரத்தை பெரும்பாலும் அடுத்த வாரத்தில் கொழும்பு அரசு ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதியிடம் கையளிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஐ.நா. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.