Home ஆய்வுகள் மண்புழு விவசாய உரம் தயாரிக்கும் முறையும் அதன் பயனும் – மதுஜா வரன்

மண்புழு விவசாய உரம் தயாரிக்கும் முறையும் அதன் பயனும் – மதுஜா வரன்

பண்டைய காலத்தில் விவசாயமானது இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி செய்யப்பட்டு வந்தது. இதனால் நிறைவான உற்பத்தி அடைந்ததோடு மண்ணின் வளமும் பாதுகாக்கப்பட்டது. ஆனால் இன்றயை சூழலில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பசுமைப் புரட்சியின் காரணமாக அதிக விளைச்சல் தரக்கூடியதும், இரசாயன உரங்களால் கூடுதல் பயன் தரக்கூடியதுமான ரகங்கள் உருவாக்கப்பட்டன. இரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளின் அதிகமான பயன்பாட்டினால் மண்ணின் வளம் குறைந்ததோடு, மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது.

எனவே இத்தகைய தரம் குறைந்த, வளமற்ற நிலங்களை வளமான நிலங்களாக மாற்றுவதில் இயற்கை உரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மண்புழு உயிர் உரமானது இயங்கை உரங்களில் மிக முக்கியமான ஒன்றாகும். இயற்கையில் மண் புழுக்கள் மூலம் கிடைக்கக்கூடிய இந்த உரமானது மண்புழுக்கள் கழிவுகளை உணவாக உட்கொண்டு குடலில் உள்ள நுண்ணுயிர், நொதிகளால் செறிக்கப்பட்டு சிறி சிறு உருண்டைகளாக மலப்புழை வழியாக வெளித்தள்ளப்படும் கட்டிகளே மண்புழு உரம் எனப்படுகின்றது.

உலகத்தில் மண்புழுக்களில் 3000 வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் இந்தியாவில் 384 வகைகள் உள்ளன. இதில் 6 வகையான மண்புழுக்கள் உரம் தயாரிக்க உகந்தவை. மண்புழு உரம் இடுவதால் மண் துகள்கள் ஒன்றாக இணைந்து ஒட்டி, குருணை போன்ற கட்டிகள் உருவாகி மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துகின்றது. இதனால் மண்ணின் காற்றோட்டம் மற்றும் நீர்ப்பிடிப்புத் திறன் மேம்படுத்தப்படுகின்றது. களிமண் பாங்கான மண்ணில் உள்ள குழம்புத் தன்மையைக் குறைக்கிறது. மேலும் மண் அரிப்பு, கோடை காலத்தில் மண்ணின் வெப்பநிலை ஆகியவற்றைக் குறைத்து வேர்க்காயம் ஏற்படுவதை தடுக்கிறது.

 

மண்புழுக்களை உற்பத்தி செய்யும் முறை:

PHOTO 2021 04 07 16 46 17 மண்புழு விவசாய உரம் தயாரிக்கும் முறையும் அதன் பயனும் - மதுஜா வரன்

மண்புழுக்களை உற்பத்தி செய்வது மிகவும் எளிது. 10கிலோ சாணத்தை எடுத்து 2கிலோ வெல்லத்துடன் கலக்கி, நல்ல ஈரப்பதமான இடத்தில் இந்தக் கலவையை மண் தரையில் கொட்டி வைக்க வேண்டும். ஒரு பத்து நாட்களுக்கு தண்ணீர் தெளித்துக் கொண்டு வந்தால் மண்புழுக்கள் தானே உருவாகும். இந்த மண்புழுக்களை சேகரித்து மண்புழு உரம் தயாரிக்கலாம்.

மண்புழு உரம் தயாரிக்கும் முறை:

மண்புழு உரம் தயாரிக்க படுக்கை முறை, குழி முறை, தொட்டி முறை என 3 முறை உள்ளது. படுக்கை முறையில் தரையில் இயற்கை சாணத்தையும், மற்ற கழிவுகளையும் போட வேண்டும். இதில் அதிக அளவு மண்புழு உரம் தயாரிக்கலாம்.

குழிமுறையில் குழி வெட்டி அடியில் சாணம் மற்றும் இதர ஜீவனக் கழிவுகளைப் போடலாம். ஆனால் குழிமுறையில் போதுமான காற்றோட்டம் இருக்காது. செலவும் அதிகம். தொட்டி முறை தான் நடுத்தர விவசாயிகளுக்கு சிறந்த முறை.

தொட்டி முறையில் மண்புழு உரம் தயாரிக்கும் முறை பற்றி நோக்கின், மண்புழு உரம் தயாரிக்க எப்போதும் நிழல், ஈரப்பதம், குளிர்ச்சி நிறைந்த பகுதியை தேர்வு செய்ய வேண்டும். 500 – 600 லீற்றர் கொள்ளளவு உள்ள சீமெந்து அல்லது பிளாஸ்டிக் தொட்டியை வாங்கலாம். அல்லது உங்கள் வீட்டில் தொட்டி இருந்தால், அதையே பயன்படுத்திக் கொள்ளலாம். மாடுகளின் சாணம் மற்றும் சிறிய துண்டுகளாக நறுக்கிய பசுந்தீவனக் கழிவுகள், உலர்ந்த இலைகள் 3 : 1 என்ற அளவில் கலந்து தொட்டியில் போட வேண்டும். 15 – 20 நாட்களுக்கு இந்தக் கலவையை அப்படியே விட்டுவிட வேண்டும். சிறிது நறுக்கிய இலைகள் மற்றும் பசுந்தீவனத்தை 15 – 20 cm அளவிற்குப் போட வேண்டும். அதற்கு மேல் சாணம், தர கழிவுகளை அதே அளவு போட வேண்டும்.

மண்புழுக்களை 50 – 1000 எண்ணிக்கையில் மேல் அடுக்கிவிட வேண்டும். மண்புழுக்களை விட்டவுடன் குளிர்ந்த நீர் தெளிக்க வேண்டும். இந்த உள் அடுக்குகள் எப்போதுமே ஈரப்பதத்துடன் இருக்க தொடர்ந்து குளிர்ந்த நீர் தெளிக்க வேண்டும். 30 நாட்களுகு்கு ஒருமுறை கிளறிவிட வேண்டும். 45 – 50 நாட்கள் ஆனவுடன் மண்புழு உரம் தயாராகி விடும்.

மண்புழு உரம் அறுவடை செய்யும் முறை

மண்புழு உரம் தயாரானவுடன் அது கறுப்புநிறத் துகள்களாக மாறிவிடும். அதன் பின் தண்ணீர் தெளிப்பதை நிறுத்திவிட வேண்டும். மேலும் உரம் தயாரிக்கும் இடத்தின் அருகில் புதிய சாணத்தை வெல்லத்துடன் கலந்து (1kg  சாணம் 1kg  வெல்லம்) நீர் தெளித்து வைத்தால் இந்த மண்புழு உரத்திலுள்ள மண்புழுக்கள் அருகில் உள்ள புதிய சாணம் மற்றும் வெல்லக் கலைவைக்குச் சென்ற பின் மண்புழு உரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மண்புழு உரம் இடும் முறை

பயிர்களின் தன்மையைப் பொறுத்தே மண்புழு உரம் இடவேண்டும். விவசாய பயிர்களுக்கு ஒரு ஹெக்டருக்கு 2 – 3 தொன் அளவும், பழ மரங்களுக்கு மரத்தின் வயதைப் பொறுத்து 5 – 10 kg வரை ஒரு மரத்திற்கு இட வேண்டும். காய்கறி செடிகளுக்கு நாற்றுக்கள் வளர்ப்பதற்கு ஒரு ஹெக்டருக்கு ஒரு தொன் அளவும், வளரும் செடிகளுக்கு 400 – 500 கிராம் வரையும் பயன்படுத்தலாம். பூச்செடிகளுக்கு ஒரு ஹெக்டருக்கு 760 1000 தொன் வரை பயன்படுத்தலாம்.

மண்புழு உரத்திலுள்ள சத்துக்கள்

மண்புழு உரத்திலுள்ள சத்துக்களானது மண்புழு உரம் தயாரிக்க நாம் பயன்படுத்தும் கழிவுப் பொருட்களின் தன்மையைப் பொறுத்து அமையும். பல்வேறு வகையான கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தும் போது மண்புழு உரத்தில் பல்வேறு வகையான சத்துக்களும் அடங்கி இருக்கும். சாதாரணமாக மண்புழு உரத்தில் உள்ள சத்துக்களாவன:

கார்பன் 9.5 – 17.98%

நைதரசன் 0.5 – 1.5%

பொஸ்பரஸ் 0.1 0.30%

பொட்டாசியம்  0.15 – 0.56%

சோடியம் 0.6 – 0.30%

கல்சியம் மற்றும் மக்னீசியம் 22.67 – 47.60mcg/100g

தாயிரம்  2 – 9.5 mg / kg

இரும்பு 2 – 9.30 mg

துத்தநாகம் – 5.70 – 11.50 mg/kg

கந்தகம் – 128 – 548 mg/kg

மண்புழு உரத்தினால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. மழைக்காலங்களில் மண்ணை வெப்பமாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதனால் சத்துக்களை எடுக்கும் புது வேர்கள் உருவாக மண்புழு உரம் பயன்படுகிறது. மண்புழு உரத்தால் ஏற்படும் அமிலமும் கார்பனீர் ஒக்சைட் வாயுவும் மண்ணின் காரத் தன்மையைக் குறைத்து உரப்பிடிப்புத் திறனை மேம்படுத்துகிறது. மண்ணில் உள்ள கரையாத தாதுக்களை கரையச் செய்து தாவரங்களிற்கு கிடைக்கக்கூடிய ஊட்டச் சத்தாக மாற்றுகிறது.

இவ் மண்புழு உரத்தை பயன்படுத்துவதால் பழங்களின் நிறம், ருசி, மணம், பழங்கள் சேமித்து வைக்கும் காலம் போன்றவை அதிகரிக்கின்றன. இதனால் பூக்கள், காய், கனிகள், தானியங்கள், நல்ல விலைக்கு விற்பனை செய்ய வழிவகுக்கின்றது. எனவே இரசாயன உரங்களை தேவைக்கு அதிகமாக பயன்படுத்தி மண்ணின் இயற்கைத் தரத்தை அழித்து விடாமல் மண்புழு உரத்தை பயன்படுத்தி மண்வளத்தினை இயற்கையாக பாதுகாத்து அதேபோல பயிர்களுக்கும் நல்ல வளர்ச்சியினையும், ஊக்கியினையும் வழங்குவோம்.

மதுஜா வரன்,

கலைப்பீடம்,

யாழ். பல்கலைக்கழகம்

Exit mobile version