மணலாறில் தமிழர்களின் பூர்வீக நிலம் 1036 ஏக்கர் சுவீகரிப்பு : கண்டுகொள்ளாத கூட்டமைப்பு

381 Views

தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள தமிழ் மக்களது பூர்வீக நிலங்களை அபகரிக்கும் செயற்பாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், வடக்கு – கிழக்கு மாகாணங்களை பௌதீக ரீதியாக இணைக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் நில அபகரிப்பு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முப்பத்து ஐந்து வருடங் களுக்கு முன்னர் முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கிராமத்திலிருந்து விரட்டப்பட்டிருந்த தமிழ் விவசாயிகள், மீண்டும் 2012 ஆம் ஆண்டு தங்களுடைய கிராமங்களுக்குத் திரும்பி வந்திருந்தபோது, விவசாயம் செய்யக்கூடிய தமது தாழ்நிலப் பகுதிகளை சிங்களக் குடியேற்றவாசிகளிடம் இழந்ததுடன் அதற்கு நீர்ப்பாசனம் செய்யும் நீரேரிகளையும் இழந்துள்ளனர். இவ்வாறான நிலையில் தற்போது இலங்கை வன ஜீவராசிகள் திணைக் களம் தமிழ் மக்களுடைய மேட்டு நிலக் காணிகளையும் அதாவது மானா வாரியாகப் பயிர் செய்யக்கூடிய காணிகளையும் பறிமுதல் செய்ததோடு, அந்தக் காணிகளைப் பறவைகள் சரணாலயமாக மாற்றியுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ் விவசாயிகள் விசனம் வெளியிட்டுள்ளதாக தமிழ் நெற் செய்தித்தளம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை காரணமாகத் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கும் இந்தப் பகுதிகளைக் கடற்கரையின் மூலமாகத் துண்டிக்கும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கொக்குத்தொடுவாயில் மீளக்குடியமர்ந்திருக்கும் தமிழ் விவசாயிகளில் ஒருவரான சந்திரசேகரம் கந்தையா தமிழ் நெற் செய்தித் தளத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

கொக்குளாய் கடல்நீரேரிக்கும் கரைத்துறைப் பற்று கடலுக்கும் அருகில் அமைந்துள்ள கொக்குத்தொடுவாய் கிராமமானது, விவசாயம் மற்றும் மீன்பிடியை பிரதான வாழ் வாதாரத் தொழிலாகக் கொண்டுள்ளது. தமிழ் விவசாயிகள் ஆயிரத்து முப்பத்தாறு ஏக்கர் தாழ்வு நிலத்தை மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்குப் பறிகொடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த தமிழர்களுக்கு கடந்த இரண்டாயிரத்துப் பன்னிரண்டாம் ஆண்டு குடியேற்றத்துக்கென குறைந்தளவான மக்கள் வசிக்கும் நிலங்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்டதாகவும், எனினும் தற்போது அவர்கள் தமது வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்த முடியாமல் மீண்டும் அங்கிருந்து இடம்பெயரும் அவலத்துக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் கந்தையா மேலும் தெரிவித்துள்ளார்.

தாழ்நிலப் பகுதிகளில் காணப்படும் விவசாய நிலங்கள் மற்றும் அதற்குப் பயன்படுத்தப்படும் நீர்ப்பாசனக் குளங்கள் ஆகியன சிங்களக் குடியேற்றவாசிகளால் மணலாறு அதாவது வெலி ஓயா பிரிவின் கீழ் 2012 ஆம் ஆண்டுக்கு முன் மாற்றப்பட்டுள்ளது.

இதன்மூலம் தங்களது வாழ்வாதாரத்தைத் தொடர நினைத்த தமிழ் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வெலி ஓயா எனப்படும் சிங்களக் கிராமமானது மணலாறு எனப்படும் பழமையான தமிழ்க் கிராமத்தை அழிக்கும் முகமாகவே உருவாக்கப்பட்டது. இலங்கை அரசாங்கமானது மகாவலித் திட்டத்தைத் தமிழ்ப் பிரதேசங்களை சிங்கள மயமாக்கும் நடவடிக்கைக்குப் பயன்படுத்துகின்றது. அதாவது வடக்கையும் கிழக்கையும் பிரிப்பது கொழும்பை மையமாகக் கொண்ட அரசின் முக்கிய நோக்கமாகக் காணப்படுகின்றது.

வடக்கையும் கிழக்கையும் நில ரீதியாகப் பிரிப்பதன் மூலம் தமிழர்களின் பிரதேச ரீதியான ஒற்றுமையை சிதைப்பதே இதன் நோக்கமாகும். மீள்குடியேறிவரும் தமிழர்கள் தங்களுடைய விவசாய நிலங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. ஆரம்பத்தில் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து செயற்படும் கண்ணிவெடி அகற்றும் குழுக்கள் பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி தமிழ் விவசாயிகளை அவர்களது விவசாய நிலங்களுக்குள் அனுமதிக்கவில்லை.

இந்த உயர்ந்த நிலங்களை விவசாயிகள் மானாவாரி என்று அழைப்பார். ஏனெனில் இந்த நிலங்களில் பருவ மழையை அடிப்படையாகக் கொண்டே விவசாய நடவடிக்கை மேற்கொள்ளப் படுகின்றது. அந்த விவசாயி மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வெள்ளைக் கல்லடி தீ, முந்தல், குஞ்சுக்கால்வெளி, கோட்டைக்கணி ஆகியன பகுதிகளைச் சேர்ந்த நிலங்கள் பறவைகள் சரணாலயத்துக்காக சுவீகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அந்தப் பகுதிகளைச் சேர்ந்த தமிழ் விவசாயிகள், ஆங்கிலேயர் காலத்திலிருந்து குறித்த காணிகளுக்கான உறுதிப் பத்திரங்களை வைத்திருக்கின்றனர்.

எனினும் இலங்கை வனஜீவராசிகள் திணைக்களமானது இந்த நிலங்களுக்குள் புகுந்து எல்லைக் கற்களை நட்டுள்ளனர். இந்த செயற்பாடு கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு இடம்பெறும் முன்னரே மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது இந்தப் பகுதியானது கொக்குளாய் சரணாலயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சரணாலயமானது கொக்குளாய்க்குப் பத்துக் கிலோமீற்றர் தெற்காக ஆரம்பத்தில் காணப்பட்டது. எனினும் தற்போது அது வடக்காக நகர்ந்து கொக்குத்தொடுவாய் வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக கந்தையா மேலும் தெரிவித்தார்.

Leave a Reply