மட்டு – வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டு

260 Views

மட்டக்களப்பு நாவற்குடாவில் உள்ள யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி, தங்கள் மீது பாலியல் பலாத்காரம் மேற்கொள்வதாக குறித்த வைத்தியசாலையின் பெண் வைத்தியர் மற்றும் உத்தியோகத்தர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இன்று மட்டு. ஊடகத்திற்கு வருகைதந்த குறித்த பெண் உத்தியோகத்தர்களும் ஆண் உத்தியோகத்தர்களும் இது தொடர்பான ஊடக சந்திப்பொன்றினை ஏற்பாடுசெய்திருந்தனர்.

இதில் கருத்து தெரிவித்த மருத்துவர் மற்றும் ஊழியர்கள்,

“தமது குடும்ப வறுமையின் காரணமாக வைத்திய அதிகாரியின் பாலியல் தொல்லைகளையும் தாங்கிக்கொண்டு கடமையினை  செய்து வருகின்றோம்.

பெண்கள் ஆடைமாற்றும் அறையில் திடீர் என நுழையும் வைத்திய பொறுப்பதிகாரி எமக்கு பாலியல் அச்சுறுத்தல் விடுக்கின்றார். இடமாற்றம் பெற்றாலும் நீண்ட தூரத்திற்கு செல்லவேண்டியுள்ளது.

நாங்கள் ஆடைமாற்றும் அறையில் எந்தவித வசதிகளும் இல்லை. அறையின் கதவுகள் கூட முறையான கதவு இல்லாமல் இடைவெளிகள் கொண்ட கதவுகளாக இருக்கின்றன. அதனை முறையாக அமைக்கவும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை.

இது தொடர்பில் திணைக்களங்களின் உயர் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதோடு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்துள்ளோம்.

மேலும் எங்களுக்கு ஆதரவாக இருந்த பெண் வைத்தியரையும் தவறானவராக காட்டுவதற்கு முயற்சிகளை அவா் மேற்கொண்டார்.

இது தொடர்பில் அனைத்து தரப்பினரின் கவனத்திற்கும் கொண்டுசென்றபோதிலும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுப்படாத நிலையிலேயே இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டுள்ளோம்.

கடந்த மூன்று வருடமாக இந்த வேதனைகளை அனுபவித்து வருகின்றோம். எங்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்கும் ஆண் ஊழியர்களையும் அங்குள்ள பெண் ஊழியர்களுடன் இணைத்து அபாண்டமான வதந்திகளையும் பரப்புகின்றார்” என்றனர்.

மேலும் உயர் அதிகாரியொருவர் இரவு வேளையில் சோதனை நடவடிக்கைக்கு வந்தபோது இரவு கடமையில் வைத்தியர் இல்லாதது தெரியவந்த நிலையில், அதற்கு எதிராக நடவடிக்கையெடுத்தபோது குறித்த உயர் அதிகாரி மதுபோதையில் வந்ததாக கடிதம் ஒன்று எழுதி தருமாறு ஊழியர்களிடம் கேட்டபோது அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தன் காரணமாக அவர்கள் தொடர்ச்சியாக பழிவாங்களுக்குள்ளாவதாக  ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

தன்னை அனுசரித்துப் போகாவிட்டால் பழிவாங்கப் படுவீர்கள் என குறித்த வைத்திய பொறுப்பதிகாரி அச்சுறுத்துவதாகவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் உரிய தரப்பினர் கவனம் செலுத்தி தமக்கான நீதியைப் பெற்றுத் தரவேண்டும் எனவும் தங்களால் சுதந்திரமாகவும் அச்சமின்றிய சூழ்நிலையில் கடமையாற்றுவதற்கான வழியை ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் ஊடக சந்திப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply