மட்டக்களப்பு மாவட்டஅபிவிருத்திக் குழுவின் கூட்டங்களில் கலந்துகொள்வதில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையானுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பிள்ளையான் சிறைச்சாலையில் இருப்பதால் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள நீதிமன்றத்தின் அனுமதி தேவைப்படுகின்றது. நீதிமன்ற உத்தரவு இல்லாமல் பிள்ளையான் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளமுடியாது என சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஓகஸ்ட் 10 ஆம் திகதி பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவியை பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.