Tamil News
Home செய்திகள் மட்டு நகரில் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி – மாநகர முதல்வர்

மட்டு நகரில் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி – மாநகர முதல்வர்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த நான்கு தினங்களாக மூடப்பட்டிருந்த வர்த்தக நிலையங்கள் நாளை திங்கட்கிழமை திறக்க முடியும் எனவும் ஆனால் சுகாதார திணைக்களம் பரிந்துரைத்துள்ள நடைமுறைகளுக்கு அமைவாகவே வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் என்றும் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

இன்று மாலை மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். காத்தான்குடி மற்றும் பூநொச்சி முனை பகுதிகள் தனிமைப்படுத்தப் பட்டுள்ள பகுதியாகவுள்ளதனால் அப்பகுதிக்குள் இருந்து வர்த்தக நடவடிக்கைகளுக்கு வர்த்தகர்கள் வரமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

தைப்பொங்கல் வரவுள்ளதனால் வர்த்தக நிலையங்களை நடாத்துபவர்களும் வருகை தரும் மக்களும் சுகாதார நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“கடந்த நான்கு நாட்களாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு அமைய மூடப்பட்டிருந்தது. நாளை திங்கட்கிழமை அனைத்து வர்த்தக நிலையங்களும் திறக்கப்பட்டு தமது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

குறிப்பாக சமூக இடைவெளியை பேணுதல், கைகழுவுதல், முகக்கவசம் அணிதல், போன்ற அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றுவதன் மூலமே தொடர்ச்சியாக வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

அனைத்து வியாபார நடவடிக்கைகளும் மாலை 7.00 மணியுடன் நிறுத்தப்பட்டு சுகாதார திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கு வழி விட வேண்டும். இதே போன்று சில பகுதிகள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளது. குறிப்பாக பூநொச்சி முனை போன்ற பகுதிகளில் இருந்து ஊழியர்களோ, வர்த்தகர்களோ  வந்து வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது. திணைக்கள தலைவர்கள் கூட அப்பகுதிகளில் இருந்து உத்தியோகஸ்தர்களை அழைப்பதை தவிர்த்துக்கொள்ளவேண்டும்.

சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றாவிட்டால் மட்டக்களப்பு மாநகரத்திற்குள்ளும் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றது. இந்த அறிவுறுத்தல்களை பின்பற்றி செயற்பாடுகள் முன்னெடுக்கப் பட வேண்டும்.

அவ்வாறு பின்பற்றப்படாத வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மாநகரசபையின் கட்டளை சட்டத்தின் கீழும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

Exit mobile version