மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் கூரை மேல் ஏறி போராட்டம் மேற்கொண்டுவருகின்றனர்.இன்று (05)முற்பகல் வேளைகளில் சிறைச்சாலையின் கூரைக்கு மேல் ஏறிய 12க்கும்மேற்பட்ட சிறைக்கைதிகள் இந்த போராட்டத்தினை மேற்கொண்டுவருகின்றனர்.
சிறைச்சாலையில் இருந்த கைதியொருவர் இன்று காலை மரணமானதை தொடர்ந்து குறித்த கைதியின் மரணம் தொடர்பில் நீதிபதி நேரடியாக வந்து விசாரணைகளை மேற்கொள்ள வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
சாய்ச்சலினால் சிறைச்சாலையில் சிகிச்சைபெற்றுவந்த கைதியொருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும் குறித்த சிறைக்கைதியின் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள சிறைக்கைதிகள் நீதிபதி அவர்கள் நேரடியாக சிறைச்சாலைக்கு வந்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
குறித்த சிறைக்கைதிகளின் போராட்டத்தினை தொடர்ந்து சிறைச்சாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் படையினரும் பாதுகாப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சிறைக்கைதிகளின்போராட்டம் காரணமாக மட்டக்களப்பு சிறைச்சாலைப்பகுதியில் பதற்றத்துடன் கூடிய நிலைமை நிலவுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.