மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் உள்ள மேய்ச்சல் தரை காணிகளை அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பௌத்த பிக்கு தலைமையிலான சிலர் அத்துமீறி அபகரித்து துப்புரவு செய்து வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை பகுதியான மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை நிலங்களாக காணப்படும் பகுதிகளுக்குள் அம்பாறை மாவட்டத்தில் இருந்து வருகை தந்து அத்து மீறி நுழைந்துள்ள பௌத்த பிக்கு தலைமையிலான சிலர் அத்துமீறி காணிகளை பிடித்து துப்பரவு செய்து வருகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்கு மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகங்களின் ஒன்றியம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மற்றும் பண்ணையாளர்கள் இணைந்து மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் வலய முகாமையாளர் ஏறாவூர் பற்று ஈரளக்குளம் கிராமசேவையாளர், கரடியனாறு பொலிசார் ஆகியோரை சம்பவ இடத்திற்கு சென்று சந்தித்து கலந்துரையாடியதோடு காணி அபகரிப்பில் ஈடுபடும் பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினரையும் சந்தித்து பேசியிருந்தனர்.
இதன் போது அம்பாறை மாவட்டத்தின் தெய்அத்தகண்டிய பிரதேசத்தில் இருந்து வந்த பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர், 106 குடும்பங்களுக்கு 5 ஏக்கர் காணி வீதம் விவசாய செய்கைக்கு தர வேண்டும். நாங்கள் இந்த இடத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்று கூறியிருந்தனர்.
குறித்த பகுதிக்கு பொறுப்பான கிராமசேவையாளர், மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் வலய முகாமையாளர் பொலிசார் இணைந்து, “நீங்கள் அம்பாறை மாவட்டத்தில் இருந்து வந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. உங்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் காணி தருகிறோம்”.என்று கூறிய போதும் குறிப்பாக மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் வலய முகாமையாளராக வந்திருந்த அதிகாரி, அவர்கள் நீங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைகளுக்குள் உள்ள காணிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளீர்கள் இதில் இருந்து வெளியேறுங்கள் நாங்கள் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக அம்பாறை மாவட்டத்திற்குள் காணி தருகிறோம் என்று கூறியபோது அதனை ஏற்றுக்கொள்ளாத காணி அபகரிப்பாளர்களில் ஒருவர் அந்த இடத்தில் இருந்து நேரடியாக கிழக்கு மாகாண ஆளுநருடன் தொலைபேசியில் பேசி, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் வலய முகாமையாளரிடம் தொலைபேசியை கொடுத்து ஆளுநருடன் கலந்துரையாட கூறினார்.
ஆளுநர் அவர்கள் கட்டாயம் குறித்த சிங்கள குடும்பங்களுக்கு விவசாயம் செய்ய காணி வழங்க வேண்டும் என்று கூறினார். ஆனால் அவர்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் காணி வழங்குவதாக வலய முகாமையாளர் ஆளுநரிடம் தெரிவித்திருந்தார். பின்னர் அதற்கு இணங்க மறுப்பு தெரிவித்த பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் எங்களுக்கு இந்த மாவட்டத்தில் தான் காணி வேண்டும் என்று கூறினார். அதன் பின்னர் குறித்த இடத்தில் இருந்து அரச அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் வெளியேறி வந்துவிட்டனர்.
ஆனால் அரச அதிகாரிகள் ஊடகவியலாளர்கள் வெளியேறியதன் பின்னர் அங்கு இருந்த பலர் காணிகளை அளந்து பிரித்து அடைத்து வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்படி விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர்களுடன் கடந்த வாரம் கலந்துரையாடியதன் படி, குறித்த பகுதிக்கு பொறுப்பான மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் வலய முகாமையாளரை அவர்கள் அனுப்பி மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகங்களின் ஒன்றியம் பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் அவர் கலந்துரையாடியதன் பின்னர் காணி அபகரிப்பாளர்களை சந்தித்து பேசியிருந்தார்.
ஆனால் சட்டவிரோத காணி அபகரிப்பாளர்களை வெளியேற்ற மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரியால் முடியவில்லை. இதற்கு பின்னால் அரசியல் நிகழ்சி நிரல் ஒன்று உள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
கால் நடைகளை மேய்க்கும் மேய்ச்சல் தரை பகுதியில் விவசாயம் செய்தால் அதை கால்நடைகள் சென்று சாப்பிடும் போது இரண்டு தரப்புக்களுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால் தமிழ் சிங்கள இன முரண்பாடுகள் ஏற்பட கூடும். எனவே இந்த விடயம் குறித்து அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்தி தங்களது மேய்ச்சல் தரை காணிகளை காப்பாற்றி தருமாறு பண்ணையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்நிலையில்,மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பாளர்களின் காணிகளில் அம்பாறை மாவட்டத்தினை சேர்ந்தவர்களை குடியேற்ற மேற்கொள்ளும் முயற்சிகள் எதிர்காலத்தில் இனமுரண்பாடுகளை ஏற்படுத்தும் என மயிலத்தமடு கால்நடை வளர்ப்பு கமநல அமைப்பின் தலைவர் சீனித்தம்பி தியாகராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதியான மயிலத்தமடு,மாதவனை ஆகிய பகுதிகளில் மேய்ச்சல்தரை பகுதிகளை அம்பாறை மாவட்டத்தில் உள்ளவர்கள் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்புகள் தொடர்பில் ஆராய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளருடன் கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்துரையாடியதன் அடிப்படையில், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் வலய பணிப்பாளர்,மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றிய உறுப்பினர்கள்,மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினர்,அப்பகுதி கிராம சேவையாளர்,பொலிஸ் அதிகாரி உட்பட பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் அப்பகுதிக்கு சென்று நிலைமைகள் தொடர்பில் பார்வையிட்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட பகுதிக்குள் அம்பாறை மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் வருகைதந்து காடுகளை வெட்டி குடியேறியுள்ளது அவதானிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு சென்று சட்ட விரோதமான செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டாம் என அங்கு சென்ற மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளினால் வலியுறுத்தப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் அம்பாறை மாவட்டத்தினை சேர்ந்த பகுதிக்குள் மகாவலி காணிகள் வழங்கப்பட்டுள்ளதனால் அங்கு சென்று குடியேறமுடியும் என்றும் இப்பகுதியில் குடியேறமுடியாது எனவும் அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த பகுதியில் தாங்கள் கிழக்கு மாகாண ஆளுனரின் அனுமதியுடனேயே குடியேறியுள்ளதாகவும் தாங்கள் இப்பகுதியில் சோளன் செய்கையில் ஈடுபடவுள்ளதாகவும் அங்கு குடியேறியுள்ளவர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அம்பாறை-பொலநறுவை மாவட்டங்களுக்கு எல்லையாக இப்பகுதி காணப்படுகின்றபோதிலும் அந்தந்த மாவட்டங்களில் அதிகளவான காணிகள் எதுவித பயன்பாடுகளும் இல்லாமல் இருக்கும் நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் இவர்களுக்கு காணிகளை வழங்குவதற்கு ஆளுனர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து இங்குள்ள கால்நடை வளர்ப்பாளர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது.
கால்நடை வளர்ப்புக்காக ஒதுக்கப்பட்டு வர்த்தமானிப்படுத்தப்பட்டுள்ள இப்பகுதி அபகரிக்கப்படுமானால் கால்நடைவளர்ப்பாளர்கள் தமது தொழில்களை இழந்து தற்கொலைசெய்யும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் எனவும் கால்நடைவளர்ப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
காலம்காலமாக தாங்கள் கால்நடைகளை மேய்க்கும் பகுதியினை அபகரிக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றிணையவேண்டும் எனவும் கால்நடை வளர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பிக்கு ஒருவரின் தலைமையில் 2010ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டபோது 2015ஆம் ஆண்டு அன்றைய கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்க மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக குறித்த சட்ட விரோத ஆக்கிரமிப்பாளர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டிருந்த நிலையில், மீண்டும் புதிய ஆட்சி ஏற்பட்டவுடன் தமது ஆக்கிமிப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதன்போது மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகள் குறித்து விரைவில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தனர்.