மட்டக்களப்பில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று

மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுதாவளை பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து அவர்களுடன் தொடர்புடைய பத்து பேர் சுய தனிமைப் படுத்தல் படுத்தப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

களுதாவளை நான்காம் வட்டாரத்தில் பி.சி.ஆர் பரிசோதனையின்போது நேற்று  மாலை ஒருவர்  கொரோனா தொற்றுக்குள்ளானது இனங்காணப்பட்டது.

இவர் கடந்த 24ஆம் திகதி கொழும்பில் இருந்து வந்துள்ளதாகவும் நேற்று அவர் பி.சிஆர் பரிசோதனைக்குட்படுத்தப் பட்ட நிலையிலேயே அவர் கொரோனா தொற்றுக்குள்ளானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

தற்போது குறித்த நபரின் வீடும் அருகில் உள்ள மற்றொரு வீடும் குறித்த நபரின் மனைவி பொருட்கொள்ளனவில்  ஈடுபட்ட இரண்டு வர்த்தக நிலையங்களும் தனிமைப் படுத்தலுக்குட்படுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வருகைதந்து மண்முனை தென் எருவில் பற்று சுகாதார பிராந்தியத்தில் தங்கியுள்ளவர்கள் தங்களை பதிவு செய்துகொள்ளுமாறும் அவ்வாறானவர்கள் தொடர்பான விபரங்களை, மண்முனை தென் எருவில் பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகருடன் 0778399450என்னும் இலக்கத்துடன் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறும் சுகாதார பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேநேரம் போரதீவுப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 52குடும்பங்களைச் சேர்ந்த 97பேர் சுயதனிமைப் படுத்தலுக்குட்படுத்தப் பட்டுள்ளதாக போரதீவுப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் போரதீவு, பட்டாபுரம் பகுதியில் கொழும்பில்  ஒருவர் கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்டதை தொடர்ந்து அவருடன் தொடர்புடைய 12குடும்பங்களை சேர்ந்த 51பேர் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் எவருக்கும் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மாவடிமுன்மாரி பகுதியில் கொழும்பில் இருந்துவந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டதை தொடர்ந்து இதுவரையில் 22குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் வைத்திய அதிகாரி டாக்டர் ரமேஸ் தெரிவித்துள்ளார்.

இவர்களில் பலருக்கு பி.சி.ஆர் சோதனைகள் நடாத்தப்பட்டபோதிலும் யாருக்கும் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டபோதிலும் இன்னும் 14நாட்களுக்கு பின்னரும் அவர்கள் பி.சி.ஆர் சோதனைகளுக்குட்படுத்தப் படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் கிழக்கு மாகாணத்தில் வீடுகளில் 2230பேர் தனிமைப் படுத்தப் பட்டுள்ளதுடன் அவர்களில் 757பேர் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப் பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை அம்பாறை மாவட்டத்தில் மூன்று பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருவரும் இனங்காணப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம்,தெகியத்தன்கண்டி,பதியத்தலாவ ஆகிய பகுதியில் தலா ஒருவரும் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி,களுதாவளை ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.