மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் ஒப்பந்தங்கள் செய்திருக்கிறது எனச்சொல்வது முற்றுமுழுவதுமாக பொய்யான விடயமாகும் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற கட்சியின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று(10) நடைபெற்றது. இதில் உரையாற்றிய அவர், ‘நாங்கள் எந்தக் கட்சியுடனும் ஒப்பந்தம் செய்து சபைகளில் ஆட்சியதிகாரத்தை எடுப்பதற்கு செல்லவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருக்கின்ற உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவு தருகின்றார்கள். நாங்கள் எங்களுடைய உறுப்பினர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு ஆதரவாக வழங்குவோம்’. ‘ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்திலே ஒப்பந்தங்கள் செய்திருக்கின்றோம் எனச்சொல்வது முற்றுமுழுவதுமாக பொய்யான விடயமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்’. ‘மட்டக்களப்பில் போட்டியிட்ட பதினொரு சபைகளிலும் இலங்கை தமிழரசுக் கட்சி ஏதோவொரு வகையாக ஆட்சியதிகாரத்தை எடுக்கக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது’.
இதிலே தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய ஒன்பது பிரதேச சபைகளிலே நாங்கள் தவிசாளர் ஒருவரை, மேயர் ஒருவரை, உதவி தவிசாளர் ஒருவரை, பிரதி மேயர் ஒருவரை எங்கள் கட்சியின் சார்பில் முன்மொழிய இருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
‘எங்களுடைய அரசியல் குழுக் கூட்டத்திலே நாங்கள் எடுத்த தீர்மானம் தமிழ் பேசும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தவிசாளர் பதவிகளை எடுப்பதற்கான வேலைகளை பார்க்க வேண்டும் என்பதாகும். அதைத்தான் நாங்கள் செய்திருக்கின்றோம்’ என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.