Home ஆய்வுகள் மட்டக்களப்பில் சூறையாடப்படும் இயற்கை வளங்கள் – மட்டு.நகரான்

மட்டக்களப்பில் சூறையாடப்படும் இயற்கை வளங்கள் – மட்டு.நகரான்

வடகிழக்கு மக்கள் எதனைப் பாதுகாப்பதற்காகப் போராடினார்களோ, இன்று அவை சத்தமில்லாத வகையில் அபகரிக்கப்படுகின்றன. தமிழர்களின் வளங்கள் மிகவும் திட்டமிட்ட வகையில் சூறையாடப்பட்டு வருகின்றன.

மண்ணைக் காக்க ஆயிரமாயிரம் போராளிகள் தங்களது உயிர்களைத் தியாகம் செய்துள்ள நிலையில், இன்று சிங்கள தேசம் எமது மண்ணை எந்தவித இழப்புகளுமின்றி சூறையாடி வருகின்றது.

IMG 8302 மட்டக்களப்பில் சூறையாடப்படும் இயற்கை வளங்கள் - மட்டு.நகரான்

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழர் பகுதிகளில் பாரியளவில் வளங்கள் சுரண்டப்படும் செயற்பாடுகள் மிகவும் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப் படுகின்றன.

யுத்த காலத்தில் தமிழ் மக்களினால் பாதுகாக்கப்பட்ட வளங்கள் சுரண்டப்படுவதுடன், அவற்றினை கபளீகரம் செய்யும் நடவடிக்கைள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை வளம் கொண்ட பல பகுதிகள் காணப்படுகின்றன. இப்பகுதிகளில் உள்ள இயற்கை வளத்தினைக் கொண்டு தமிழ் மக்கள் அன்றாடம் தங்களது ஜீவனோபாயத்தினைக் கொண்டு செல்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியானது, இயற்கை வளங்கள் நிரம்பிய பகுதியாகவே இருந்து வருகின்றது. இதன் காரணமாகவே யுத்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இப்பகுதிகளைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தினார்கள்.

யுத்தத்திற்குப் பின்னர் அந்தப் பகுதிகளைப் பாதுகாப்பதில் தமிழ் மக்கள் கவனம் செலுத்தினாலும், சிங்கள அரசாங்கத்தின் எடுபிடிகளும், சிங்கள அரசாங்கத்தின் பண முதலைகளும் இங்குள்ள வளங்களை இலக்கு வைத்து தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறு தமிழர்களினால் காலங்காலமாக பாதுகாக்கப்பட்டு வரும் பகுதிகளில் ஒன்றாக மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கித்துள் பகுதி காணப்படுகின்றது.

இப்பகுதியில் அதிகளவான நீர்நிலைகளும், காடுகளும் அதனோடு இணைந்த வயல் நிலங்களும் காணப்படுவதனால் இப்பகுதியானது இயற்கையின் உறைவிடமாகவும் அமைதி வேண்டுவோருக்கு மருந்தாகவும் இருந்து வருகின்றது.

கித்துள் பகுதியை பொறுத்தவரையில், கித்துள் குளத்தினைப் பிரதானமாகக் கொண்டு வடிச்சல்ஆறு, முந்தனையாறுகள் பக்க ஆறுகளாகக் காணப்படுகின்றன. வடிச்சல் ஆற்றினைக் கடந்தால் முந்தனையாறு, அதனைக் கடந்தால், கித்துள்குளம். அதனை அண்டிய பகுதிகளில் விவசாய நிலங்களும், காடுகளும் காணப்படுகின்றன. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் இயற்கையை விரும்புவோர் அடிக்கடி இப்பகுதிக்குச் சென்று, இயற்கையை  ரசிப்பார்கள். ஏராளமானோர் இப்பகுதிக்குச் செல்வார்கள்.

குறிப்பாக இப்பகுதியில் சுமார் 1600ஏக்கர் காணியில் விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியிலேயே காலங்காலமாக இவர்கள் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். அத்துடன் 3000இற்கும் மேற்பட்ட கால்நடைகள் இப்பகுதியில் வளர்க்கப்படுவதுடன், சுமார் 100இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் மீன்பிடித் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.

இவ்வளவு வளங்களையும் பயன்படுத்தி, அன்றாடம் தங்களது வாழ்வாதாரத்தினைக் கொண்டு நடாத்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெறும் இப்பகுதிகளில் உள்ள வளங்கள் சுமார் மூன்று வருடங்களாகத் திட்டமிட்ட வகையில் சூறையாடப்படுகின்றன.

தினமும் இப்பகுதியில் உள்ள ஆற்றுப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் மண் அகழ்வுகள் காரணமாக அனைத்துத் தரப்பினரும் மிகவும் கஸ்டங்களை எதிர்கொள்ளும் நிலையுள்ளதாகவும், எதிர்காலத்தில் இப்பகுதி அழிந்து விடக்கூடிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் எனவும் இப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த மூன்று வருடங்களாக தென்னிலங்கையில் உள்ளவர்களின் அரசியல் செல்வாக்குடன், இங்குள்ள அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இந்த மண் அகழ்வினை முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக இங்கு அகழப்படும் மண் ரயில் மூலமாகவும், பாரவூர்திகள் மூலமாகவும் தென்னிலங்கைக்கு கடத்தப்படுகின்றன.

 இங்குள்ள சிங்களக் கட்சி சார்பு அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொண்டுள்ள தமிழ் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் இந்த செயற்பாடுகள் காரணமாக இப்பகுதியின் இயற்கை வளங்கள் பாதிக்கப்படுவதுடன், ஆயிரக் கணக்கான குடும்பங்கள் தொழில் இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

தினமும் நூற்றுக் கணக்கான உழவு இயந்திரங்கள் கொண்டு ஆற்றுப் பகுதிகளில் மண் அகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் காரணமாக ஆற்றுப் பகுதிகளின் ஆழம் அதிகரித்து வருவதுடன்  எதிர்காலத்தில் அப்பகுதிகளில் உள்ள வயல் நிலங்கள் அழிந்து செல்லக் கூடிய நிலையும் காணப்படுகின்றன. அத்துடன் மண் அகழ்வு என்ற போர்வையில் அப்பகுதியில் உள்ள காடுகளும் அழிக்கப்படுவதுடன், பாரிய மரங்கள் வெட்டப்பட்டு தென்னிலங்கைக்கு கடத்தப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தாங்கள் தங்கள் வீட்டுத் தேவைக்கு ஒரு வண்டிலில் மண் எடுத்துச் சென்றாலே காவல்துறையினர் வந்து தங்களைக் கைது செய்யும் நிலையில், ஒரு நாளைக்கு நூற்றுக் கணக்கான உழவு இயந்திரங்கள் மூலம் சட்ட விரோதமான முறையில் மண் அகழப்படும் போது யாரும் வந்து எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆற்றுப் பகுதி ஊடாக தினமும் நூற்றுக் கணக்கான உழவு இயந்திரங்கள் செல்வதன் காரணமாக மீன்பிடியில் ஈடுபடுவோர் மீன்பிடிக்க முடியாத நிலையுள்ளதாகவும், சிலவேளைகளில் உழவு இயந்திரங்கள் தங்கள் மீதும் மோதி விட்டுச் செல்வதாகவும் தாங்கள் காவல் துறையிடம் முறையிட்டால், அன்றைய தினமே மண் அகழ்வில் ஈடுபடுவோர் தங்களை வந்து அச்சுறுத்துவதாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ச்சியான முறையில் முன்னெடுக்கப்படும் சட்ட விரோத மண் அகழ்வு காரணமாக விவசாயச் செய்கையில் ஈடுபடுவோர் பயணிக்க முடியாத வகையில் வீதிகள் உள்ளதாகவும், வயல் வேலைகளுக்காகப் பொருட்களைக் கொண்டு செல்ல முடியாத நிலையுள்ளதாகவும், அத்துடன் மண் அகழ்வுகள் காரணமாக தங்களது வயல் நிலங்களை வெள்ளம் அடித்துச் செல்லும் நிலை காணப்படுவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

சிலவேளைகளில் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கையெடுத்து சட்ட விரோத மண் ஏற்றுவோரை கைது செய்தால், மறுநிமிடம் காவல்துறை உயர் அதிகாரிகளிடமிருந்து அவர்களை விடுவிப்பதற்கான கட்டளை வருவதாகவும், இப்பகுதியில் இடம்பெறும் மண் அகழ்வுகள் உயர் அரசியல் கைகளினால் முன்னெடுக்கப்படுவதன் காரணமாக யாரும் எதுவும் செய்ய முடியாத நிலை உள்ளதாகவும் அப்பகுதியில் கடமையாற்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் மக்களின் வயிற்றில் அடிக்கும் மணல் கொள்ளையர்களுக்கு சில அரசியல்வாதிகள் உதவி செய்து வருகின்றனர். இவர்களின் இவ்வாறான செயற்பாடுகளினால் எமது மக்களே பாதிக்கப்படுகின்றனர் என்பதை அவர்கள் மறந்து செயற்படுகின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்ட பின்னர் தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.

ஆனால் இது தொடர்பில் ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் கவனத்திற்குப் பல தடவைகள் கொண்டு செல்லப்பட்ட போதிலும், இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் தமது பகுதியை வந்து பார்க்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ச்சியாக மண் அகழ்வு நடைபெறுவதானது, இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தினை குழிதோண்டிப் புதைக்கும் செயற்பாடாகவும், எதிர் காலத்தில் இப்பகுதியின் இயற்கை வளத்தினை மாறுபட்ட நிலைக்குக் கொண்டு செல்லும் நடவடிக்கையாகவும் பார்க்கப்பட்டு, இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் இவ்வாறான வளச் சுரண்டல்களை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு அதனைத்துத் தமிழ்த் தேசியப் பற்றாளர்களுக்கும் உள்ளது. அவற்றினைச் செய்வதற்கு முன்வர வேண்டும்.

 

Exit mobile version